மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 38

புதினா
பிரீமியம் ஸ்டோரி
News
புதினா

சாம்பார் தொடங்கி பல உணவுகளிலும்தான் மஞ்சளைச் சேர்க்கிறோமே என்று நீங்கள் கேட்கலாம். மேற்சொன்ன பயன்கள் அனைத்திலும் குர்க்குமினின் அளவைத்தான் நான் குறிப்பிட்டுளேன்

மசாலாப் பொருள்களின் தன்மைகள், பயன்கள் பற்றிப் பார்த்துவருகிறோம். அந்த வரிசையில் நாம் பார்க்கவிருக்கும் அடுத்த பொருள் இஞ்சி. ‘Gingerol' முதலிய பல்வேறு ‘Alkaloid' பொருள்களே இஞ்சியின் காரத்தன்மைக்குக் காரணம். இஞ்சி பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்ட ஓர் உணவு. கர்ப்பிணிப் பெண்களுக்கு குமட்டல் ஏற்படாமல் இருக்க இஞ்சி பெரிதும் பயன்படுகிறது. இதற்கு தினசரி ஒரு கிராம் அளவிற்கு எடுத்துக்கொண்டாலே போதும். அதேபோல பித்தப்பை நீக்க அறுவை சிகிச்சை முடித்த பின்னர் இஞ்சியை எடுத்துக்கொண்டால் வாந்தி வருவது குறைந்துவிடும் என்றும் ஆராய்ச்சிகளில் நிரூபணமாகியுள்ளது. மிளகைப்போல இஞ்சிக்கும் ‘Antioxidant' மற்றும் ‘Anti inflammatory' குணங்கள் நிறையவே உண்டு. இதையெல்லாம் தாண்டி ரத்தக் குழாயில் ரத்தம் உறைவதைத் தடுக்கும் தன்மையையும் இது கொண்டுள்ளது.

உணவில் என்ன சேர்க்கிறோம் என்பது முக்கியம் இல்லை, எந்த அளவில் சேர்க்கிறோம் என்பதுதான் முக்கியம். நாள் ஒன்றுக்கு 5 கிராம் அளவுக்கு இஞ்சியை எடுத்துக்கொண்டால் நல்ல பலன்களைத் தரும். மேலும் ரத்தக்குழாயில் ரத்தம் உறையும் பிரச்னை உடையவர்கள், மற்ற மருந்துகளோடு இஞ்சியையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அதேபோல தசைவலியைக் குறைக்கவும் இஞ்சி பயன்படும். கொழுப்பை எரிய வைக்கும் தன்மையை அதிகமாக்கி, இன்சுலின் எதிர்ப்புத்தன்மையைக் குறைத்து எடைக்குறைப்பைக் கூடுதல் சுலபமாக்குவதாகவும் கூறுகிறார்கள். அதற்காக இஞ்சியை சாப்பிட்டு இரண்டு பிளேட் பிரியாணி சாப்பிட்டால் எடை குறைந்துவிடும் என்று தப்புக்கணக்கு போட்டுவிடாதீர்கள். மாவுச்சத்து குறைவான உணவுமுறை கட்டாயம் எடுத்து, அத்துடன் குறைந்தது 5 கிராம் அளவு இஞ்சியை நாம் தினசரி சேர்த்துக்கொண்டால் எடைக் குறைப்பிற்குக் கூடுதல் உதவி செய்யும்..

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 38

இஞ்சியைத் தொடர்ந்து நாம் பார்க்கப்போகும் அடுத்த பொருள் பூண்டு. ‘Allicin' என்ற வேதிப்பொருளே பூண்டின் மருத்துவ குணங்கள் தொடங்கி பல முக்கியத் தன்மைகளுக்கான காரணம். பூண்டு பல வித மருத்துவ குணங்களைக் கொண்டிருந்தாலும், மாரடைப்பைத் தடுக்கும் அதன் தன்மையே மிக முக்கிய ஒன்று. தினசரி உணவில் 5 கிராமுக்கு மேல் பூண்டு சாப்பிட்டால் ‘Atherosclerosis' என்று சொல்லப்படும் ரத்தக்குழாயில் கொழுப்பு படிந்து சுருங்கும் தன்மை குறைகிறது. இது ஒருபுறம் இருக்க, பூண்டைப் பற்றிப் பல விஷயங்கள் மிகைப்படுத்திச் சொல்லப்படுகின்றன. கொலஸ்ட்ரால் அதிகமுடையவர்கள் தினசரி உணவில் இரண்டு பூண்டைச் சேர்த்துக்கொண்டால் குணமாகிவிடும் என்று நினைக்கிறார்கள். ஆனால் அந்தத் தன்மை பூண்டில் மிகக்குறைந்த அளவே இருப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அதிகபட்சம் 8-10 மில்லி கிராம் அளவுக்குத்தான் பூண்டால் கொலஸ்ட்ராலின் அளவு குறைகிறது, அதேபோல மரபணுரீதியாக LDL கொலஸ்ட்ரால் இருப்பவர்கள் கட்டாயம் மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதை விட்டுவிட்டு, பூண்டை மட்டும் சாப்பிட்டுவிட்டு கொலஸ்ட்ரால் குறையும் என்று நம்புவது தவறு. இந்த விஷயத்துக்காக எவ்வளவு பூண்டு எடுத்துக் கொண்டாலும் அதனால் ஏற்படும் பயன்கள் மிகவும் குறைவுதான் என்று ஆராய்ச்சிகளில் நிரூபணமாகியுள்ளது. இதய ஆரோக்கியத்திற்கு மிக நல்ல பயன்களைப் பூண்டு அளிக்கிறது என்பது உண்மை. இதயப் பிரச்னைகளால் சிலருக்கு முன்பே ஸ்டென்ட் வைக்கப்பட்டிருக்கும். பூண்டை மட்டும் சாப்பிட்டால் அவர்களுக்கு இருக்கும் அடைப்பு முழுமையாகக் கரைந்துவிடும் என்று நினைப்பதும் தவறு. தினசரி உணவில் பூண்டு சேர்த்துக்கொண்டால் மாரடைப்பு ஏற்படுவது 10-15% வரை குறையுமே தவிர, மொத்தமாகத் தடுக்கப்படும் என்று கூறுவது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று. பூண்டில் நல்ல விஷயங்கள் இருப்பது உண்மைதான். ஆனால் மிகப்பெரிய மாற்றங்கள் தரும் அளவுக்கு இல்லை. எனவே, ஏற்கெனவே இதயப் பிரச்னை இருப்பவர்கள் அதற்குரிய மருந்துகளை எடுத்துக்கொள்வதும் அவசியம்.

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 38

அடுத்ததாக நாம் பார்க்கப்போகும் பொருள் மஞ்சள். மஞ்சள் நம் ஊரில் காலங்காலமாகப் பயன்படுத்தப்பட்டுவருகிறது. மஞ்சளின் தன்மைக்கான முக்கிய காரணி ‘குர்க்குமின்' (Curcumin) என்ற வேதிப்பொருள். இஞ்சி, பூண்டு போல உள்காயங்களை ஆற்றும் ‘Anti inflammatory' தன்மை குர்க்குமினுக்கு மிக அதிக அளவில் உண்டு. மூட்டு வலி உள்ளவர்களுக்குக் கொடுக்கப்படும் 1,200 மில்லி கிராம் அளவு கொண்ட Ibuprofen மாத்திரையையும் 1,000 மில்லி கிராம் குர்க்குமினையும் ஒப்பிட்டால் இரண்டுக்கும் உள்ள வலியைக் குறைக்கும் தன்மை ஒன்றே என்று தெரியவந்துள்ளது. அதேபோல, தினசரி 500 மில்லி கிராம் குர்க்குமின் எடுத்துக்கொண்டால் உள்காயங்கள் குறையும் எனக் கூறப்படுகிறது. இவைதவிர, ரத்தக்குழாய் அடைப்பு மற்றும் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் குறைவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

சரி, தினசரி உணவில் எவ்வளவு மஞ்சளைச் சேர்க்க வேண்டும்?

சாம்பார் தொடங்கி பல உணவுகளிலும்தான் மஞ்சளைச் சேர்க்கிறோமே என்று நீங்கள் கேட்கலாம். மேற்சொன்ன பயன்கள் அனைத்திலும் குர்க்குமினின் அளவைத்தான் நான் குறிப்பிட்டுளேன். அந்த அளவைப் பெற எவ்வளவு மஞ்சளை எடுத்துக்கொள்ளவேண்டும் என்று ஒரு கணக்கு இருக்கிறது. பச்சை மஞ்சள் கிழங்கு என்று சொல்லப்படும் வேகவைக்காத மஞ்சளில்தான் குர்க்குமின் மிக அதிக அளவில் இருக்கிறது. அதை மஞ்சள் தூளாக அரைக்கும்போது சுமார் 4-5 மடங்கு குர்க்குமினின் அளவு குறைந்துவிடுகிறது. 5 கிராம் அளவு உள்ள மஞ்சள் துண்டை எடுத்துக்கொண்டால் அதில் 500 மில்லி கிராம் அளவுக்கு உங்களால் குர்க்குமினைப் பெறமுடியும். இதே, மஞ்சள் தூள் என்றால் அதே அளவு குர்க்குமினைப் பெற கிட்டத்தட்ட 15 கிராம் வரை தேவைப்படுகிறது. வீட்டில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் 3 பெரிய டீஸ்பூன் அளவுக்கு மஞ்சளை சமையலில் சேர்த்தால்தான் நான் கூறிய அளவைப் பெறமுடியும். மஞ்சளை, மிளகோடு சேர்த்துச் சாப்பிடும்போது அது ரத்தத்தில் கலந்து ஜீரணமாகும் தன்மை அதிகரிக்கிறது. ஒட்டுமொத்தக் குடும்பத்துக்கும் செய்யப்படும் சாம்பாரில் சேர்க்கப்படும் அரை டீஸ்பூன் மஞ்சள் நமக்குப் பெரிய அளவில் பயனைத் தராது. எனவே, நான் கூறிய மஞ்சளின் பயன்கள் உங்களுக்குக் கிடைக்க வேண்டுமானால், ஒவ்வொரு நபருக்கும் 3 டீஸ்பூன் அளவுக்கு மஞ்சள் தேவை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 38

மூட்டுவலி இருப்பவர்கள் இந்த அளவை இரட்டிப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும். இதையெல்லாம் கலந்து, ‘பசு மஞ்சள் வைத்தியம்' என சில பேலியோ குழுக்களில் பேசுவதைக் கேள்விப்பட்டிருப்போம். பச்சை மஞ்சள், மிளகு, பூண்டு, சின்ன வெங்காயம் ஆகிய அனைத்தையும் சேர்த்து அரைத்து 5 கிராம் அளவுக்கு எடுத்துக்கொள்வதே பசு மஞ்சள் வைத்தியம்.

அடுத்த பொருள் வெந்தயம். பொதுவாக ஜீரணம் தொடர்பான விஷயங்களுக்கே நாம் வெந்தயத்தைத் தொடர்புபடுத்திப் பேசுவோம். ஆனால் தற்போது சர்க்கரை நோயோடு இதை சம்பந்தப்படுத்திப் பேசுகிறார்கள். வெந்தயத்தில் ‘Alkaloids', ‘Saponin' என்று சொல்லக்கூடிய வேதிப்பொருள்கள், ‘Galactomannan' என்ற ஒரு வித மாவுச்சத்து என நிறைய விஷயங்கள் நிறைந்திருக்கின்றன. 10-15 கிராம் அளவுக்கு வெந்தயம் சேர்த்துக்கொள்ளும்போது ரத்தத்தில் ‘Triglyceride' கொழுப்பு, LDL கொழுப்பு முதலியவை குறைகின்றன. மேலும், வெந்தயத்துக்கு இன்சுலின் எதிர்ப்புத் தன்மையைக் குறைக்கும் இயல்பு இருப்பதால், சர்க்கரை அளவைக் குறைக்கவும் அது பயன்படுகிறது. முக்கியமாக வெந்தயத்தில் இருக்கக்கூடிய ‘4 hydroxy isoleucine' என்ற பொருள் சர்க்கரை நோய்க்கு பரவலாகப் பயன்படுத்தக்கூடிய ‘Metformin' என்ற மருந்துக்கு நிகரான பயன்களைக் கொண்டுள்ளது. ‘Metformin’ என்பதுகூட ‘French Lilac’ எனும் தாவரத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட மருந்து தான். அதற்கு நிகரான பயனை வெந்தயம் கொண்டிருக்கிறது. ஆனால் சர்க்கரை அளவுகளைக் குறைக்கும் பயன் வேண்டுமானால், அதற்கு குறைந்தபட்சம் 10-20 கிராம் அளவுக்கு வெந்தயத்தை தினசரி உணவில் சேர்க்க வேண்டும். ஒரு ஸ்பூன் வெந்தயத்தைத் தண்ணீரில் கரைத்துக் குடித்துவிட்டு சர்க்கரை நோய் குணமாகிவிடும் என்று நினைக்கக் கூடாது.

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 38

இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தையும் சொல்ல விரும்புகிறேன். ‘Metformin' மருந்து தொடக்கநிலை சர்க்கரை நோயாளிகளுக்கே பரிந்துரைக்கப்படுகிறது. நோயின் தீவிரம் அதிகரிக்கையில் இன்சுலின் சுரப்பு குறையும் என்பதால் ‘Metformin' மருந்தால் பயனில்லை. வெந்தயத்துக்கும் அதே நிலைதான். எனவே, வெந்தயத்தை மட்டும் எடுத்துக்கொண்டு தீவிர சர்க்கரை நோயின் அளவு குறையும் என்று எதிர்பார்ப்பது தவறு. நான் முன்பு கூறியதுபோல, மாவுச்சத்து உணவுகளைக் குறைப்பதன் மூலம், வெந்தயத்தைவிட பல மடங்கு சிறப்பாக சர்க்கரை அளவுகளை நாம் குறைக்க முடியும். இதுமட்டுமல்லாமல், வெந்தயம் ஆண்களின் ‘டெஸ்டோஸ்டீரான்' அளவை அதிகரிக்கும் எனவும் ஆய்வுகள் கூறுகின்றன.

அடுத்து, பட்டை, லவங்கம், ஏலக்காய். முன்னர் கூறிய மற்ற மசாலாப் பொருள்களைப்போல இவற்றுக்கும் வேறு நிறைய நல்ல குணங்கள் இருந்தாலும் இந்தப் பொருள்களில் உள்ள சிறப்பு, அதிகப்படியான ‘Antioxidant' தன்மைதான்.

‘Antioxidant' பற்றி நாம் நிறைய பேசுகிறோம். ஆனால் இந்த வார்த்தைக்கு அர்த்தம் என்ன என்று கேட்டால் யாருக்கும் தெரியாது. நம் உடலின் அனைத்து செல்களிலும் ஆக்சிஜனேற்றம் என்பது இயற்கையாக நடக்கக்கூடிய ஒரு விஷயம். நாம் உண்ணும் உணவு எரிசக்தியாக மாறுவதே இந்த ஆக்சிஜனேற்றம் காரணமாகத்தான். ஆனால் இந்த ஆக்ஸிஜனேற்றம் தொடர்ந்து நடப்பதால் நமது செல்கள் படிப்படியாகப் பழுதடைகின்றன. நாமும் முதுமை அடைகிறோம்.

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 38

இப்படி செல்கள் பழுதடையாமல் தடுக்கும் குணம் இயற்கையில் சில பொருள்களுக்கு உள்ளன. அவற்றைத்தான் நாம் ‘Antioxidant' என்கிறோம். ‘Antioxidant' கிடைக்கும் என்று நம்பி பல்வேறு வகையான பொருள்களை மக்கள் உண்டு வந்தாலும் உண்மையில் எவ்வளவு ‘Antioxidant' நமது உணவுப் பொருள்களில் கிடைக்கிறது என்பதை நாம் ஆராய வேண்டும். இதற்காக ஓர் ஆராய்ச்சி நடத்தப்பட்டது. சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட உணவு வகைகள் இதில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, ஒவ்வொரு உணவின் 100 கிராம் அளவும் எவ்வளவு ‘Antioxidant' தன்மையைக் கொண்டிருக்கிறது என்ற ரீதியில் ஆராயப்பட்டது. இதன் மூலம் பல முக்கிய விஷயங்கள் தெரிய வந்தன. அதாவது நாம் இத்தனை நாள் ‘Antioxidant' தன்மைகளை அதிகம் கொண்டிருக்கும் பொருள்களாக நினைத்துவந்த மாதுளை, ஆப்பிள், ஸ்ட்ராபெர்ரி, ஆரஞ்சு முதலிய பழங்கள், அதன் சாறுகள் தொடங்கி கிரீன் டீ வரை இவை அனைத்திலும் 100 கிராம் அளவில் வெறும் 2 மில்லி மோல் (mole) அளவுக்குக்கூட ‘Antioxidant' தன்மை இல்லை என்று ஆராய்ச்சிகளில் நிரூபணமானது. ஆனால் நாம் முன்பு பேசிய இஞ்சியின் 100 கிராம் அளவில் 20 மில்லி மோல் வரை இந்தத் தன்மை உள்ளது. அதேபோல புதினாவும் 120 மில்லி மோல் அளவு Antioxidant-ஐக் கொண்டிருக்கிறது. கிராம்பு, பட்டை, ஏலக்காய் ஆகியவற்றில் Antioxidant அளவு 250 மில்லி மோலுக்கு மேல் உள்ளது. அதாவது Antioxidant இருக்கிறது என்று நம்பி நாம் பணம் செலவழிக்கும் கிரீன் டீ, பழச்சாறு ஆகியவற்றைவிட இந்த எளிமையான மசாலாப் பொருள்களில் சுமார் 100 மடங்கு அதிகமாக Antioxidant குணம் இருக்கிறது. இப்படிப்பட்ட குணாதிசயங்கள் இருப்பதால்தான் தினமும் இத்தகைய மசாலாப் பொருள்களை உணவில் சேர்ப்பவர்களுக்கு ஆயுட்காலம் நீடிப்பதாகவும், கேன்சர், மாரடைப்பு உள்ளிட்ட நோய்கள் சற்று குறைவாக வருவதாகவும் நான் முன்பு சொன்ன ஆராய்ச்சியில் முடிவுகள் வந்துள்ளன போலும்.

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 38

மசாலாப் பொருள்களின் பொதுவான பயன்களைப் பற்றித் தெரிந்துகொண்டுள்ளோம். இவற்றைக் கட்டாயம் சமையலில் அவரவர் தேவைக்கேற்ப தயக்கம் காட்டாமல் பயன்படுத்துங்கள். தொடர்ந்து பேசுவோம்.

- பரிமாறுவோம்

வாழைக்காய் மாவு (Banana flour), பலாக்காய் மாவு (Jackfruit flour) ஆகியவை சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது என்கிறார்கள். உண்மையா? - தியாகராஜன் மணி

சர்க்கரை நோய் பற்றிய பல அறியாமைகளில் இதுவும் ஒன்று. ‘ஓர் உணவின் மாவுச்சத்து அளவு மட்டுமே, அது சர்க்கரை அளவை அதிகரிக்கிறதா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும்' என்று முன்பே சொல்லியிருந்தேன். 100 கிராம் பலாக்காய் மாவில் 78 கிராம் மாவுச்சத்து உள்ளது, அதே பச்சை வாழைக்காய் மாவில் 82 கிராம் மாவுச்சத்து உள்ளது. இதற்கு வெள்ளைப் பொன்னி அரிசியே தேவலாம். அரிசி மாவில் 75 கிராம் மாவுச்சத்து தான் உள்ளது. இட்லி, தோசை மாவில் உளுத்தம் பருப்பு சேர்ப்பதால் மாவுச்சத்து அளவு இன்னுமே குறைவு. மிகவும் வித்தியாசமாக பலாக்காய் மாவு எல்லாம் சாப்பிடுவதற்கு பதிலாக இட்லி, தோசையே இரண்டு சாப்பிட்டுவிட்டுப் போகலாம்.

நான் கிராமத்தில் வசிக்கிறேன். இங்கு மழைக்காலங்களில் இயற்கைக் காளான்கள் நிறைய கிடைக்கும். அவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாமா? பக்கவிளைவுகள் ஏற்படுமா? - ந.அய்யப்பசாமி

காளான் புரதம் மிகுந்த ஒரு நல்ல உணவு. 100 கிராம் காளானில் 9 முதல் 10 கிராம் நல்ல புரதம் கிடைக்கும். கடைகளில் வாங்கும் பட்டன் காளான், சிப்பி காளான் போன்றவை உண்ணத் தகுந்தவை என்று தெரிந்து வாங்குகிறோம். பிரச்னை இல்லை. ஆனால் மழைக்காலத்தில் தோட்டங்களில் முளைக்கும் காளான்களில் விஷத்தன்மை உள்ள காளான்களும் கலந்திருக்கலாம். அதன் தன்மை தெரியாமல் எடுத்துக்கொள்வது மோசமான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். அதனால் தோட்டத்தில் தானாக முளைக்கும் காளான்கள் விஷத்தன்மை அற்றவையா என்று 100% உறுதியாகத் தெரிந்தால் மட்டுமே அவற்றை உண்ண வேண்டும்.

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 38

டாக்டரிடம் கேளுங்கள்!

ஆரோக்கியம், டயட் தொடர்பான சந்தேகங்களை மருத்துவர் அருணிடம் வாசகர்கள் கேட்கலாம். சந்தேகங்களை arokkiam@vikatan.com என்ற மின்னஞ்சலிலோ அல்லது ‘டாக்டரிடம் கேளுங்கள், ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை- 2’ என்ற முகவரிக்குக் கடிதம் வழியாகவோ அனுப்பலாம்.