மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 45

ஆரோக்கியம் ஒரு பிளேட்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆரோக்கியம் ஒரு பிளேட்

வைட்டமின், இரும்புச் சத்து குறித்த சந்தேகம் நமக்கு இருக்கிறது. இச்சத்தின் அளவு சதவிகிதத்தால் குறிப்பிடப்படும். உதாரணத்துக்கு, ஓர் உணவில் கால்சியம் 300 mg என்று குறிப்பிட்டு அருகில் 25% என்று போடப்பட்டிருக்கும்.

உணவுப் பாக்கெட்டுகளில் அச்சிடப்படும் Calorie, Sugar Free போன்ற வார்த்தை விளையாட்டுகளை கடந்த வாரம் பார்த்தோம். இந்த வாரம் நாம் பார்க்க இருப்பது கொழுப்பு. நாம் முன்பு பார்த்தவற்றைப் போலவே கொழுப்பிலும் நிறைய ஏமாற்று வேலைகள் நடக்கின்றன. Low Fat, Zero Cholesterol, Zero Trans Fat போன்று பல வார்த்தைகள் இதில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வார்த்தைகளின் உண்மையான அர்த்தத்தை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

Low Fat என்பதே முதலில் நல்லதில்லை. Low Fat என்று சொல்லப்படும் உணவுகளில் கண்டபடி மாவுச்சத்து நிறைந்திருக்கிறது என்பதைப் பலர் அறிய வாய்ப்பில்லை. இந்தத் தொடரைத் தொடர்ந்து வாசித்தவர்களுக்கு Low Fat என்ற வார்த்தைக்கு அர்த்தமே இல்லை என்று புரிந்திருக்கும். அப்படியான பெயரில் தயாராகும் உணவில் மாவுச்சத்து நிறைந்திருப்பின், அது இன்சுலினைத் தூண்டி நம் உடலுக்குள் கொழுப்பாகத்தான் மாறப்போகிறது. எனவே, குறைவான கொழுப்பு என்று இவர்கள் கூறும் உணவின் பக்கமே போகக்கூடாது. குறைவான கொழுப்பு என விற்கப்படும் உணவுகளில் நிச்சயம் அதிக மாவுச்சத்து நிறைந்திருக்கிறது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 45

இரண்டாவது, Zero Cholesterol என்ற வார்த்தையைக் கண்டு தற்போது நிறைய மக்கள் ஏமாந்துபோகிறார்கள். கொழுப்பு பற்றிய கட்டுரையில் இதுகுறித்து நாம் முன்பே பேசியிருந்தாலும், மீண்டுமொரு முறை கூறுவது சரியாக இருக்கும். அதாவது, கொலஸ்ட்ரால் என்பது இயற்கையில் விலங்குகளின் உடலில் மட்டுமே இருக்கக்கூடிய பொருள். தாவரங்களில் இயற்கையிலேயே கொலஸ்ட்ரால் கிடையாது. அப்படி இருக்கையில் தாவரங்களிலிருந்து பெறப்படும் எண்ணெயிலோ, வேறு ஏதும் உணவுப் பொருளிலோ ஜீரோ கொலஸ்ட்ரால் என்று அச்சிடுவது மிகப்பெரிய ஏமாற்று வேலை. ஆனால், மனிதர்களைப் பொறுத்தவரையில் நாம் உணவின் வாயிலாக எடுக்கிறோமோ இல்லையோ, நம் உடல் அதைத் தானாகவே உற்பத்தி செய்துகொள்ளும்.

Zero Cholesterol என்றாலே அது ஆரோக்கியமான உணவு இல்லை என்று புரிந்துகொள்ள வேண்டும். உதாரணத்துக்கு, ‘கொலஸ்ட்ரால் ஃப்ரீ' என்று ஒரு பிஸ்கெட் அல்லது எண்ணெயை விற்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்படியிருந்தால் அதில் அசைவப்பொருள்கள் ஏதுமில்லை என்று அர்த்தம், அவ்வளவுதான். ஓர் உணவில் கொலஸ்ட்ரால் இருக்கவேண்டும் என்றால், ஒன்று அதில் அசைவம் இருக்க வேண்டும், அல்லது பால் பொருள்கள் ஏதேனும் நிறைந்திருக்க வேண்டும். எனவே, அசைவம், முட்டை மற்றும் பால் போன்றவை ஓர் உணவில் இல்லையென்றால் அதில் கட்டாயம் கொலஸ்ட்ரால் இருக்கப்போவதில்லை. கொலஸ்ட்ரால் இல்லை என்பதற்காக எண்ணெயில் பொரிக்கப்பட்டு உப்பு, காரம் போடப்பட்ட சிப்ஸை நாம் வாங்கிச் சாப்பிடக்கூடாது. எனவே, இயற்கையாகவே கொலஸ்ட்ரால் இல்லாத உணவை Zero Cholesterol என்று விற்பனை செய்வதைக் கண்டு ஏமாறவேண்டாம். அது கிட்டத்தட்ட, ‘இங்கே அனைத்து மொழிகளிலும் ஜெராக்ஸ் எடுக்கப்படும்’ என்பது போன்ற ஏமாற்று வேலை.

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 45

யதார்த்தம் என்னவென்றால், நம் உடலில் எவ்வளவு கொலஸ்ட்ரால் தயாராக வேண்டும் என்பதை நம் உடலே முடிவு செய்கிறது. உணவில் இருக்கும் கொலஸ்ட்ராலுக்கும் ரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ராலுக்கும் எந்தவித நேரடி சம்பந்தமும் இல்லை. எனவே, Zero Cholesterol, Cholesterol Free ஆகிய வார்த்தைகளை நம்பி ஏமாறாதீர்கள். ரத்தத்தில் LDL Cholesterol அதிகம் இருந்து, அதைக் குறைக்க மருத்துவர் கூறியிருந்தால், நிறை கொழுப்பு (Saturated fats) குறைவாக உள்ள உணவுகளை எடுக்க முயற்சி செய்யலாம். நம்மூரில் LDL கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்களைவிட Triglyceride அதிகம் உள்ளவர்களின் எண்ணிக்கையே நிறைய. Low Fat உணவுகள் இயல்பாகவே அதிக மாவுச்சத்து மற்றும் கலோரிகளைக் கொண்டிருக்கும். அந்த உணவுகளை அவர்கள் எடுத்துக்கொண்டால் நேர்மாறாக Triglyceride கொழுப்புகளை அது அதிகப்படுத்திவிடும். எனவே Low Fat, Zero Cholesterol, Fat Free போன்ற வார்த்தைகளைப் பார்த்தால், ஒருமுறைக்கு இருமுறை படித்துவிட்டு அப்பொருளை வாங்குவதே நல்லது.

அடுத்து, Trans Fat. இதுகுறித்துக் கண்டிப்பாகப் பேசவேண்டும். இயற்கை உணவுப் பொருள்களைச் செயற்கையான முறையில் தயாரிக்கும்போது உண்டாகும் கொழுப்புக்குப் பெயர்தான் Trans Fat. இது அதிகமாக இருக்கக்கூடிய உணவு, உடலுக்கு நல்லதல்ல. Trans Fat இருக்கிறது என்றால் அதில் வனஸ்பதி போன்ற பொருள்களைச் சேர்த்துள்ளார்கள் என்று அர்த்தம். எனவே அவற்றிலிருந்து தள்ளி நிற்பது நல்லது.

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 45

வைட்டமின், இரும்புச் சத்து குறித்த சந்தேகம் நமக்கு இருக்கிறது. இச்சத்தின் அளவு சதவிகிதத்தால் குறிப்பிடப்படும். உதாரணத்துக்கு, ஓர் உணவில் கால்சியம் 300 mg என்று குறிப்பிட்டு அருகில் 25% என்று போடப்பட்டிருக்கும். இது DV (Daily value) என்ற அளவைக் குறிக்கிறது. அதாவது, நாள் ஒன்றுக்குத் தேவைப்படும் ஒரு குறிப்பிட்ட சத்தின் அளவை, பாக்கெட் செய்யப்பட்ட உணவின் ஒரு சர்விங் எத்தனை சதவிகிதம் அளிக்கிறது என்பதே இந்த DV. பிஸ்கெட் பாக்கெட் ஒன்றில் கால்சியத்துக்கு அருகே 25% DV என இருந்தால், நாள் ஒன்றுக்குத் தேவைப்படும் கால்சியத்தின் 25 சதவிகிதத்தை இந்த இரு பிஸ்கெட்கள் அளித்துவிடுகின்றன என அர்த்தம். நுண்சத்துகளை மில்லி கிராம் வைத்து அளவிடுவது கடினம். அதைக் காட்டிலும் இந்த DV அளவைப் பார்ப்பது எளிது. நாம் சாப்பிடப்போகும் உணவில், நாம் எடுத்துக்கொள்ளும் அளவில், ஒரு குறிப்பிட்ட சத்து 20 சதவிகிதத்திற்கு மேல் DV அளவுகளை அளிக்கும் என்றால், அவர்கள் விளம்பரப்படுத்துவது சரி என்று எடுத்துக்கொள்ளலாம். அதைவிடக் குறைவாக இருந்தால், அந்த உணவால் அச்சத்து பெரிய அளவில் கிடைக்கப்போவதில்லை என்றே அர்த்தம். ‘பாலின் சக்தி’ போன்ற வசீகர வாக்கியங்களை மட்டும் பார்த்து ஏமாறாமல், அந்த உணவில் அந்தச் சத்து எவ்வளவு கிடைக்கும் என்பதையும் பார்க்க வேண்டும்.

இந்த DV-ஐ நல்ல விஷயங்களுக்குப் பயன்படுத்துவதைப் போல பிரச்னையான விஷயங்களுக்கும் பயன்படுத்தலாம். உதாரணத்திற்கு உப்பு போன்ற பொருள்களில், DV-யின் அளவு 40-க்கும் மேல் இருக்கும்பட்சத்தில், நாள் ஒன்றுக்குத் தேவைப்படும் உப்பின் அளவை அந்தச் சிறிய அளவிலான உணவே அளித்துவிடுகிறது. எனவே, உப்பு, சர்க்கரை ஆகியவற்றின் DV அளவு 20%-க்கும் மேல் இருந்தால், அதைத் தவிர்க்க வேண்டும். அதே நேரம் வைட்டமின், புரதம் போன்ற சத்துகள் 20%-க்கும் மேல் இருந்தால் சிறப்பு.

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 45

தற்போது, Gluten Free என்ற வாசகத்தைப் பார்த்து மக்கள் உணவுப்பொருள்களை வாங்குகிறார்கள். கோதுமை, பார்லி, ஓட்ஸ் முதலிய தானியங்களில் இந்த குளூட்டன் புரதம் நிறைந்து காணப்படும். அது ஒரு சிலருக்கு ஒத்துக்கொள்ளாது. அவர்கள் குளூட்டன் இல்லா உணவை உட்கொள்ளலாம். மற்றபடி அனைவரும் குளூட்டன் பிரீ உணவுகளைப் பயன்படுத்த வேண்டும் என்று அர்த்தம் இல்லை. நம் அரிசியும் பருப்பும் சிறுதானியங்களும் இயற்கையிலேயே குளூட்டன் ப்ரீதான். ஆனால் அதே சமயம் குளூட்டன் இல்லாத உணவுப் பொருள்களில் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் சர்க்கரை போன்ற வேறு சில பொருள்களும் அதிகமாக சேர்க்கப்பட்டிருக்கலாம். அதனால் அதையும் பார்த்துதான் சாப்பிட வேண்டும்.

அதேபோல ஆர்கானிக் என்று ஒரு சில உணவுப் பொருள்களில் குறிப்பிடப்பட்டிருக்கும். அது உண்மையிலே ஆர்கானிக்கான உணவுப் பொருளா என்பதை FSSAI இன் ‘ஜெய்விக் பாரத்’ என்ற முத்திரை உள்ளதை வைத்து முடிவு செய்துகொள்ளலாம். அதே போல் தற்போது Lite என்ற வார்த்தையும் டிரெண்ட் ஆகிவருகிறது. Lite என்றால், குறைவான கொழுப்பு மற்றும் சர்க்கரை என்று அர்த்தம் அல்ல. அதே கம்பெனியின் வேறொரு பொருளில் இந்தச் சர்க்கரையும் கொழுப்பும் கண்டபடி இருக்கலாம். அதைவிட இந்த லைட் வெர்ஷன் கொஞ்சம் தேவலாம் என்பதே அர்த்தம். கலோரிகள் மற்றும் கொழுப்பைக் குறைப்பதற்காக ஏதாவது ஒரு பொருளை அதில் நிச்சயம் சேர்த்திருப்பார்கள். அதனால் லைட் என்ற வார்த்தையைக் கண்டு ஏமாற வேண்டாம். அதே போல Multi Grain என்ற வார்த்தையும் தற்போது பரவலாகியுள்ளது. நிறைய தானியங்கள் சேர்த்துத் தயாரிக்கப்பட்ட உணவே இந்த Multi Grain. ‘அப்படியென்றால் அது நல்லதுதானே?' என்று நீங்கள் கேட்கலாம். மல்டி கிரைனாகவே இருந்தாலும் அது எவ்வளவு மாவுச்சத்தைக் கொண்டிருக்கிறது என்பதே அதன் தன்மையை முடிவு செய்கிறது. அதுவே, Whole grain என்று குறிப்பிடப்பட்டிருந்தால்கூட அதை வாங்கலாம். ஒரு முழு தானியத்தில் உள்ள சத்துகள் அனைத்தும் அந்த உணவுப்பொருளில் இருக்கும் என்பதையே Whole grain என்ற வார்த்தைகள் குறிக்கின்றன. மல்டி கிரைன் உணவுகள் பெரும்பாலும் பிராசஸ் செய்யப்பட்ட உணவுகளாகவே இருக்கும். அதனால் நிறைய தானியங்கள் கலந்திருந்தாலே அது நல்ல உணவு என்று அர்த்தம் இல்லை.

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 45

தற்போது Natural என்ற வார்த்தையை நிறைய உணவுப்பொருள்களில் பார்க்க முடிகிறது. அவை முழுக்க முழுக்க இயற்கையான பொருள்களால் செய்யப்பட்டது என்று பொருள் அல்ல. ஒன்றில் கலக்கப்படும் ஏதோ ஒரு பொருள் இயற்கையாக இருந்தாலும்கூட, Natural என்ற வார்த்தையைப் போட்டுக்கொள்கிறார்கள். குளிர்பானங்களில் இது அதிகமாக இடம்பெறும். ‘இது முழுமையாக செயற்கைப் பொருள்களில் செய்யப்பட்டது அல்ல, இயற்கையான பொருள்களும் உள்ளன' என்பதே இதற்கு உண்மையான பொருள். இதை நாம் தவறாகப் புரிந்துகொள்கிறோம்.

‘சிக்கன் ப்ளேவர்' என்றெல்லாம் ஒரு சில பொருள்கள் விற்கப்படுகின்றன. அப்படி ஒன்று இருப்பதே எனக்கு சமீபத்தில்தான் தெரியவந்தது. உடனே, அதில் சிக்கனைச் சேர்த்திருக்கிறார்கள் என்று அர்த்தமல்ல. அதற்கு சமமான ஒரு ப்ளேவரைத் தயாரித்து, அதை இதில் சேர்த்திருக்கிறார்கள் என்றுதான் புரிந்து கொள்ளவேண்டும்.

பாக்கெட்டில் இருக்கும் ஒற்றை வார்த்தையை நம்பி ஓர் உணவைத் தேர்வு செய்யவேண்டாம். அதில் உள்ள முழு விவரங்களையும் பார்ப்பதோடு, நமக்கு என்ன தேவை என்பதையும் பார்த்து வாங்கவேண்டும். மேலும், அதில் எவ்வளவு சத்துகள் இருக்கின்றன, அவற்றில் நமக்கு எவ்வளவு கிடைக்கும் என்பதையும் கவனிப்பது அவசியம்.

சரி, அடுத்த வாரம் இன்னொரு முக்கிய விஷயத்தைப் பற்றிப் பேசுவோம்!

- பரிமாறுவோம்

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 45

உணவின் வழியே நம் உடலுக்குள் செல்லும் கற்களால்தான் சிறுநீரகத்தில் கற்கள் வருகின்றன என்று சிலர் சொல்கிறார்கள். அது உண்மையா டாக்டர்? - அரசெழிலன்

அது உண்மையில்லை. சிறுநீரில் ஒருவருக்கு அதிகமாகக் கால்சியம் ஆக்சலேட், யூரிக் ஆசிட் போன்ற உப்புகள் வெளியேறும்போது, அவை படிந்து கற்கள் உருவாகின்றன. நிறைய பேருக்கு இந்த உப்புகள் வெளியேறும் தன்மை மரபணு ரீதியாக இருக்கும். உணவில் இருக்கும் கால்சியம் ஆக்சலேட்கூட அந்த அளவுக்கு இந்தப் பிரச்னையை அதிகமாக்குவது கிடையாது என்பதுதான் உண்மை. மற்றபடி உணவில் தவறுதலாக வரும் கற்கள் நமது ரத்தத்தில்கூடக் கலக்காது. அப்படியே ஜீரணமாகாமல் மலத்தில் வெளியேறிவிடும்.

வெள்ளைச் சர்க்கரைக்குப் பதில் கருப்பட்டி பயன்படுத்துவது நல்லதா? - கவிதா

இதைப் பற்றி ஏற்கெனவே நாம் பேசியிருக்கிறோம். வெள்ளைச் சர்க்கரை என்பது 100% சுத்திகரிக்கப்பட்டு வெண்மை ஆக்கப்பட்ட சுக்ரோஸ் சர்க்கரை. கரும்பு, பீட் எனப்படும் இனிப்புக் கிழங்கு போன்ற பல்வேறு பொருள்களிலிருந்து பெறப்படும் சர்க்கரையை சுத்திகரித்தே இது தயாரிக்கப்படுகிறது. கருப்பட்டி, நாட்டு வெல்லம் போன்ற சர்க்கரைகளுக்கு உள்ளேயும் அதே சுக்ரோஸ்தான் உள்ளது. ஆனால், மற்ற தாதுப்பொருள்களும் சில கழிவுகளும் கலந்து இருப்பதால் 80% முதல் 90% சுக்ரோஸ் இருக்கும். வெள்ளைச் சர்க்கரை 100% கெடுதல் என்றால், இது 90% கெடுதல். அவ்வளவுதான் வித்தியாசம். இரண்டையும் தவிர்ப்பதோ அல்லது குறைவாகப் பயன்படுத்து வதோதான் நல்லது.

ஆரோக்கியம், டயட் தொடர்பான சந்தேகங்களை மருத்துவர் அருணிடம் வாசகர்கள் கேட்கலாம். சந்தேகங்களை arokkiam@vikatan.com என்ற மின்னஞ்சலிலோ அல்லது ‘டாக்டரிடம் கேளுங்கள், ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை- 2’ என்ற முகவரிக்குக் கடிதம் வழியாகவோ அனுப்பலாம்.