Published:Updated:

மாட்டுவண்டி பூட்டிகிட்டு...

குடந்தை பெண்களின் ஜாலி பயணம்

மாட்டுவண்டி பூட்டிகிட்டு...

குடந்தை பெண்களின் ஜாலி பயணம்

Published:Updated:
##~##

''பெட்ரோல் விலை ஏறினாலும் ஏச்சு... வீட்ல மொபெட்டைத் தொட விட மாட்றாங்க. போற போக்கைப் பார்த்தா மாட்டு வண்டியிலதான் காலேஜுக்குப் போகணும்னு சொல்லிடுவாங்க போல இருக்கு!''

 - கும்பகோணம் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் வாசலில் ஆறு மாணவிகள் புலம்பியதைக் கேட்டதும் புகைப்படக்காரர் வசந்தகுமார் மூளையில் பளிச்! ''அப்போ மாட்டு வண்டி ஓட்டி பிராக்டீஸ் பண்ணிக்குங்க. நாங்க ஏற்பாடுபண்றோம்!'' என்று ஆன் தி ஸ்பாட்டில் கேட்டு, அவர்களிடம் ஒப்புதலும் வாங்கிவிட்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நீடாமங்கலம் அருகே உள்ள அமராவதி கிராமத்தில் வண்டிக்காரர் செல்வராஜு தன் மாடுகளை தாஜா செய்து உற்சாகமாகக் காத்திருந்தார். ஜகா வாங்காமல் சொன்ன நேரத்துக்குச் சரியாக வந்து சேர்ந்தது  ராகசுதா, சரண்யா, ரஞ்சிதா, ஃபர்ஹானா, சுகன்யா, காயத்ரி ஆகியோர் அடங்கிய படை. அமராவதியில் இருந்து மூன்று கி.மீ. தொலைவில் புதிதாக நிறுவப்பட்டு உள்ள 32 அடி ஆஞ்சநேயர் சிலையைத் தரிசித்து திரும்புவதுதான் பிளான். ஃபர்ஹானா, சுகன்யா, காயத்ரி மூவரும் வண்டியில் ஏறியதுமே மாடுகள் மிரண்டு ஓடத் துவங்க,  'பிரேக்... பிரேக்...' எனக் கத்த ஆரம்பித்தனர். 'ஏம்மா... மாட்டு வண்டிக்கு ஏதும்மா பிரேக்? சத்தம் போடாம உட்காருங்க!' என அதட்டினார் செல்வராஜு. 'ரொம்பக் கோவக்கார டிரைவர்போல!' என்றவாறே அமைதியாயினர்.

மாட்டுவண்டி பூட்டிகிட்டு...

ராகசுதா, சரண்யா, ரஞ்சிதா மூவரும், ''காலேஜ் பஸ்ஸைப் பிடிக்கக்கூட இப்படி ஓடுனது இல்லை!'' என்றவாறே ஓடி வந்து ஏறினர். ஆறு பேரும் ஏறியவுடன் பாரம் தாங்காமல் மாடுகள் திணற, ''ஐயோ பாவம்டி!' என உச்சுக் கொட்டிவிட்டு இன்னும் அழுத்தமாக அமர்ந்துகொண்டது கேங்க். ''ரெண்டு மூணு அரிசி மூட்டைனா தாங்கும். ஆறு அரிசி மூட்டைகளை ஏத்துனா?'' என்று கமென்ட் அடித்தார் சைக்கிளில் சென்ற ஒருவர்.

ஒரு பெட்டிக் கடையைப் பார்த்தவுடனேயே ''நாங்க காலைல சாப்பிடலை. ஸ்நாக்ஸ் வாங்கித் தாங்க!'' என்று கிளம்பியது கோரஸ் குரல். செல்வராஜுவிடம் கண்ணைக் காட்டினோம். ''ஏம்மா, நம்ம மாடுங்க கண்ட இடத்துல நிக்காது. இறங்குனீங்க... அப்புறம் ஏற முடியாது'' என்று பீதியைக் கிளப்பினார். ஆனாலும், யாரும் அசரவில்லை. உஷாராக வண்டியிலேயே உட்கார்ந்துகொண்டு கமர்கட், தேன் மிட்டாய், கடலை உருண்டை எனப் பெட்டிக் கடையை டிரைவ் இன் ஹோட்டலாக மாற்றி ஒரு கை பார்த்தனர். ''ஏம்மா... போவலாமா, இங்கேயே செட்டில் ஆகிடுவீங்களா?'' என்று செல்வராஜு அழாதக் குறையாகக் கேட்டதும் மீண்டும் தொடங்கியது வண்டிப் பயணம்.

''கிராமம்னு சொல்லி வண்டியில ஏத்தினீங்க... ஆனா, வண்டி மெயின் ரோட்லயே போவுது. வயல் வரப்பு எல்லாம் பார்க்க முடியாதா?'' என்று செல்வராஜுவை சுகன்யாவும் காயத்ரியும் உசுப்பிவிட, ஒரு வயலுக்குள் இருந்த வண்டிச் சுவட்டில் வண்டியை விட்டார் அவர். குண்டும் குழியுமான வயலுக்குள் ஆடியபடியே வண்டி செல்ல, அபயக் குரல் எழுப்பத் தொடங்கினார்கள் நம் தோழிகள்.

சிறிது நேரத்தில் சம நிலையை எட்ட ராகசுதாவுக்கு வண்டியை ஓட்டிப் பார்க்கும் 'விபரீத ஆசை’ எழுந்தது.  டிரைவர் பொறுப்பை அவரிடம் சிறிது நேரத்துக்கு வழங்கினார் செல்வராஜு.

பேட்ஜ் லைசென்ஸ் கொடுக்கும் அளவுக்கு ராகசுதா 'தெறமை’யைக் காட்ட, 'ஓ..’ என ஆர்ப்பரித்தனர் பிற தோழிகள்.  தார்க் குச்சியை வாங்கிப் பார்த்த ரஞ்சிதா அதில் இருந்த ஆணியைப் பார்த்து, ''இனி இது எல்லாம் யூஸ் பண்ணக் கூடாது. மீறினா, ப்ளு க்ராஸ்ல புகார் பண்ணிடுவோம்!'' என செல்வராஜுவை மிரட்ட அவர் நம்மைக் கொடுமையாகப் பார்த்தார்.

ஆக்டிங் டிரைவர் ராகசுதாவோ, அடுத்தகட்டமாக மாடுகளிடம் பேசும் அளவுக்கு நெருக்கமாகி இருந்தார். 15 நிமிட 'சாகசப் பயண’த்துக்குப் பின் கோயிலை அடைந்ததும் 'ஸ்டாப்... ஸ்டாப்’ என்றவாறே இறங்கியது 'கலகல’ லகலக கேங்க். இவர்களைப் பார்த்ததுமே கண்டுபிடித்துவிட்டார் கோயில் குருக்கள். ''சலசலனு அரட்டை அடிக்காம சாமியைக் கும்பிடுங்கோ.... பிரசாதம் தர்றேன்!'' என்று  அதட்டினார். கப்சிப் என்று சாமியைக் கும்பிட்டுவிட்டு பவ்யமாகப் பிரசாதத்தை வாங்கிக்கொண்டனர்.

''போதும் சார், நாங்க கிளம்புறோம். இதுல நாங்க திரும்ப முடியாது. பஸ் ஃபேராவது கொடுங்க. நாங்க கிளம்புறோம்!'' என்றவர்களிடம், ''இருங்க கேர்ள்ஸ்... அடுத்த அசைன்மென்ட் வயல்ல களை எடுக்கணும்!'' என்று சொல்லவும்... ''அய்யோடா... எஸ்கேப்!'' என்று ஒரே எகிறலில் எஸ்கேப் ஆனார்கள்!

- க.ராஜீவ்காந்தி, படங்கள்: ந.வசந்தகுமார்