Published:Updated:

என் ஊர்!

கோரை ஆற்றங்கரை வாழ்க்கை!

என் ஊர்!

கோரை ஆற்றங்கரை வாழ்க்கை!

Published:Updated:
##~##

''எங்க ஊர் தென்கோவனூர் ரொம்ப சின்னக் கிராமம். கிராமங்களால் சூழப்பட்ட ஒரு நாட்டில், உன்னோட சின்ன ஊருக்கு அப்படி என்ன விசேஷம்னு நீங்க கேட்கலாம். இந்தியாவோட பாரம்பரியக் கிராமக் கட்டமைப்பு இன்னமும் மிச்சம் இருக்குற ஊர்கள்ல ஒண்ணு எங்க ஊர்!''

- தென்கோவனூரின் கதை சொல்லத் தொடங்கினார் தமிழகத்தின் மிகச் சிறந்த ஆங்கிலப் பேராசிரியர்களில் ஒருவரான தங்க.ஜெயராமன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

என் ஊர்!

''காவிரிக்குனு எப்படி தனிக் கதைகளும் சிறப்புகளும் உண்டோ, அதேபோல, காவிரியோட கிளை நதிகளுக்கும் தனிக் கதைகளும் சிறப்புகளும் உண்டு. ஒரு சின்ன கிராமமான என்னோட தென்கோவனூர் காவிரியின் கிளை நதியான கோரை ஆற்றால் மகத்துவப்படுற பூமி.  

மன்னார்குடிக்கு கிழக்கே 7 கி.மீ தொலைவில் இருக்கிறது தென்கோவனூர். தெற்குப் படுகை, தைக்கால், தென்கோவனூர்னு ஊர் மூன்று பகுதிகளாகப் பிரிந்து இருக்கும். ஊரில் எல்லா சாதி, மதத்தவர்களும் உண்டு. ஆனால், சாதிச் சச்சரவுகளோ, மதச் சச்சரவுகளோ இங்கு வந்ததே கிடையாது. பரம்பரையாக முதலியார் குடும்பங்களில்தான் பட்டாமணியம் பார்த்து வந்தார்கள். கடைசியாகப் பட்டாமணியம் பார்த்த வெங்கடாஜல முதலியார் தற்போதும் நல்ல கௌரவத்துடன் ஊரில் முதல் மிராசுதாரராக இருக்கிறார். தைக்காலில் ஒரு பள்ளிவாசல் உண்டு. தெற்குப் படுகையில் ஒரு மாதா கோயில். தென்கோவனூரில் பிள்ளையார், அய்யனார், பிடாரி, காளியம்மனுக்கு என்று கோயில்கள் உண்டு. மக்களைப் பொறுத்த அளவில் கோயில்கள்தான் வேறு; தெய்வம் எங்களுக்கு ஒன்றுதான். அது கோரை ஆறு. எங்கள் வாழ்வின் சகலமும் அதுதான்!

புது தண்ணீர் வரும்போது சூடம் ஏற்றி பூ போட்டு வரவேற்கும்போதும் சரி; ஐப்பசி, கார்த்திகை, மார்கழி மாதங்களில் அச்சுறுத்தும் வகையில் பெரும் வெள்ளம் வரும்போதும் சரி; எங்கள் வாழ்வோடு பின்னிப் பிணைந்துவிட்டது கோரை ஆறு. கோரை ஆற்றில் நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதும் எங்க ஊர்க்காரர்களுக்கு நிமிஷத்துக்கு நிமிஷம் உடனே தெரியும். ஆற்றைக் கடந்துதான் ஊரைவிட்டு வெளியே போக வேண்டும் என்பதால்,  குழந்தைகள் உட்பட எல்லோருக்கும் நீச்சல் அத்துபடி. கோடையில் ஆற்று மணல், விளையாட்டுத் திடலாக மாறிவிடும். இரவு 2 மணி வரை ஊரில் சிறுவர், முதியவர் என்று கணக்கில்லாமல் சடுகுடு, உப்புக் கோடு விளையாடுவோம்.

என் ஊர்!

ஊர் கூட்டம் எங்க ஊர் நிர்வாகத்தின் முக்கியமான அம்சம். இப்போது எல்லா ஊர்களிலும் நடத்தப்படும் கிராம சபைக் கூட்டம் அல்ல இது; காலங்காலமாக வருஷம் தவறாமல் நடப்பது. கிராமத்தில் கோடையில் செய்ய வேண்டிய மராமத்துப் பணிகள், வாய்க்கால் வெட்டு, தலையாரிக் காவல் நியமனம், அவருக்குக் கூழையாடி நியமனம், ஒரு மா  நிலத்துக்கு இவ்வளவு நெல் என்று அதற்கான சம்பளம், வெட்டுமை என்ற நீராணிக்கம் பொறுப்பு, அதற்கான சம்பளம், பாசிக் குத்தகை எனப்படும் ஊர்க் குளம், குட்டைகளில் மீன் பிடிக்கும் உரிமைக்கான குத்தகைத் தொகை, தலையாரி, பூசாரி முதலியவர்களுக்கான சம்பளம் என்று ஊர் நிர்வாகத்துக்கான எல்லா விஷயங்களையும் இந்தக் கூட்டத்தில்தான் முடிவு செய்வோம். இன்னிக்கும் குடிமராமத்து தொடர்ந்து நடக்கும் கிராமம் எங்களோடது. எங்க ஊர் ஒற்றுமைக்கு இதுவும் ஒரு  முக்கியமான காரணம்.

எங்க கிராமத்தின் இன்னொரு சிறப்பு, இங்கு தயாராகும் மண் பாண்டங்கள். ராமநாதபுரம் பக்கத்தில் இருந்து வரும் கீதாரிகள் எங்க ஊர் பானைகளை 'அவிபானை’ என்று தங்கள் ஊர்களுக்கு வாங்கிச் செல்வார்கள். கோடையில் மன்னார்குடிக்கு மேற்கில் உள்ள பகுதிகளில் மானாவாரி கடலைப் பயிர் செய்வது உண்டு. இதற்கு கிணறு வெட்டிக்கொண்டு கமலையில் நீர் இறைப்பார்கள். மண் சால்தான் இறவைச் சால். அதுவும் நூற்றுக்கணக்கில் விற்கும். இவற்றைத் தவிர அய்யனார் கோயில் வீரன் - சூரன் சிலைகள், மண்

என் ஊர்!

குதிரைகள் - மாடுகள் போன்றவற்றை வடிவமைப்பதிலும் எங்க ஊர்க்காரர்கள் வல்லவர்கள். எங்க ஊர் மண் குதிரைகளைப்போல தமிழ்நாட்டில் வேறு இடங்களில் அழகான சிலைகளைக் காண முடியாது. எங்க பாட்டனார் பக்கிரி வேளார் சிலை வடிவமைப்பில் பெரிய ஆள். அதேபோல, என்னுடைய முப்பாட்டனாரும். ஒன்றரை ஆள் உயரத்தில் அவர் செய்து, படகோவனூர் அய்யனார் கோயிலில் நிற்கும் மண் குதிரை இன்றும் அவருடைய கைத் திறனைச் சொல்லிக்கொண்டு  நிற்கிறது.

தென்கோவனூரில் பிற ஊர்களைப்போல திருவிழாக்கள் கிடையாது. காலாகாலத்தில் மழை பெய்யவும் நல்ல விளைச்சலுக்குமாக நடத்தப்படும் காமண்டி விழாதான் எங்கள் ஊரின் பெரிய கொண்டாட்டம். கோயில் திருவிழாக்கள், சந்தனக் கூடு ஊர்வலம், மாதா கோயில் திருவிழா எல்லாக் கொண்டாட்டத்தையும்விட முக்கியமானது இது. ஏன்னா, இந்த விழா தண்ணீரோட பிணைந்தது. தண்ணீர் எங்கள் வாழ்க்கையோடு பிணைந்தது!''

- சமஸ், படங்கள்: கே.குணசீலன்