Published:Updated:

என் ஊர்!

அங்குதான் அறிமுகம் அம்பேத்கரும் பெரியாரும்!

##~##

''அங்கனூர்-என்னைத் தூக்கி வளர்த்த கிராமம். முன்பு திருச்சி மாவட்டத்தில் இருந்து, பின்னர் பெரம்பலூர் மாவட்ட மாகி இப்போது அரியலூர் மாவட்டத்தில் இருக்கிறது. சுமார் 4 ஆயிரம் குடும்பங்கள் கொண்ட கிராமம். இதில் தலித் குடும்பங்களின் எண்ணிக்கை 200'' - அங்கனூர் நினைவுகளை அசைபோடத் தொடங்கினார் தொல்.திருமாவளவன்...

''மிகவும் பின்தங்கிய கிராமம் அங்கனூர். மின்சாரம்,  சாலை வசதிகள் இருக்காது. மழை பெய்தால் நடக்கக்கூட முடியாதபடிக்கு சேறும் சகதியுமாக நிறைந்து இருக்கும். காவல் துறையினர் எங்கள் ஊர்ப் பக்கம் எட்டிக்கூடப் பார்க்க மாட்டார்கள். எனக்கு நினைவு தெரிந்து எந்த அரசியல் கட்சியின் வேட்பாளரும் வாக்கு சேகரிக்கக்கூட எங்கள் ஊருக்கு வந்தது இல்லை. அவ்வளவு பின்தங்கிய கிராமம்.

என் ஊர்!

அப்பாவும் அம்மாவும் விவசாயக் கூலிகள். கல்யாணத்துக்கு, தீபாவளிக்கு, பொங்கலுக்கு என்று வாங்கிய சின்னச் சின்ன கடன்களுக்காக இருந்த அரைக்கால் காணி நிலத்தையும் கடன்பட்ட ஆண்டையிடமே எழுதிக்கொடுத்தார் அப்பா. எட்டாம் வகுப்பு வரைதான் ஊரில் உள்ள பள்ளியில் படித்தேன். எந்தச் சண்டை சச்சரவுக்கும் போக மாட்டேன். பாடப்புத்தகங்கள் வாங்க காசு இருக்காது. பழைய புத்தகங்களைத்தான் வாங்கித் தருவார் அப்பா. அதற்கும் சில சமயங்களில் வழி இல்லாமல் போகும். அப்போது நத்தம்பாடி பெரியசாமி என்ற ஆசிரியர்தான் மற்ற மாணவர்களிடம் இருந்து புத்தகங்களை வாங்கி எனக்குப் படிக்கக் கொடுப்பார். நான் அதை எடுத்துவந்து பாடங்களை எழுதிக்கொண்டு திரும்பத் தருவேன். ஏதோ இவை எல்லாம் எனக்கு மட்டும் நடந்தவை இல்லை. ஊரில் எங்கள் தலித் மக்கள் அத்தனை பேரின் நிலைமையும் இப்படித்தான்.  

எங்கள் ஊரில் கோயிலுக்கான சாவடி ஒன்று உண்டு. திருவிழாவின்போது அங்கே சாமி சிலையை ஏற்றிச் செல்லும் சகடை, மரத்தால் செய்யப்பட்ட குதிரைகள் எல்லாம் இருக்கும். ஒரு நாள் நான் ஒரு குதிரையில் ஏறி விளையாடிக்கொண்டு இருந்தேன். அப்போது ஒருவர் வந்து 'படிக்கிற திமிரா உனக்கு?’ என்று விரட்டி அடித்தார். அதேபோல, ஒரு பலசரக்குக் கடையில் ஏதோ வாங்கிவிட்டு பத்து காசு கொடுக்கும்போது கையைத் தொட்டுக் கொடுத்தேன் என்று கடைக்காரர் என் அப்பாவிடம் புகார் சொன்னது நினைவில் இருக்கிறது. எங்கள் ஊர் செல்லியம்மன் கோயிலில் ஒரு தானியக் களம் இருக்கும். அங்கே உள்ள கதவை விளையாட்டாகத் திறந்துத் திறந்து மூடிக்கொண்டு இருந்தேன். அதைப் பார்த்த ஒருவர் என் அப்பாவிடம் வந்து 'படிக்க வைக்கிறதாலதான் உன் பிள்ளை இப்படி இங்கே எல்லாம் தைரியமா வர்றான்’ என்று சத்தம் போட்டார்.

ஒரு நாள் அப்பாவைப் பார்க்க அவர் வேலை செய்யும் வீட்டுக்குச் சென்றேன். என்னை சாப்பிடச் சொன்னார் அப்பா. சாப்பாடு நெல் அளக்கும் படி யில் இருந்தது. தண்ணீர் ஒரு இரும்புப் படியில் இருந்தது. ஒரு தட்டுகூட இல்லாமல்தான் அப்பாவுக்கு தினமும் மதியச் சாப்பாடு போடுகிறார்கள் என்று புரிந்தது. ஒரு மோட்டார் காணாமல் போய் விட்டது என்பதற்காக எங்கள் கிராமத்தைச் சேர்ந்த தலித் ஒருவரை விளக்குக் கம்பத்தில் கட்டி வைத்து, அவருடைய பத்து விரல்களிலும் மண் ணெண்ணெயால் நனைத்த துணியைச் சுற்றி தீ மூட்டினார்கள். பத்து விரல்களும் தீப்பிடித்து எரிந்ததை என் கண்ணால் பார்த்தேன். ஊர் பற்றிய நினைவுகளில் மறக்கவே முடியாத கொடூ ரம் இது. மற்றபடி எங்கள் ஊரில் பெரிதாக எந்தச் சாதி மோதல்களும் நடந்தது கிடையாது.

என் ஊர்!

அப்போது எல்லாம் மண்ணெண்ணெய்கிடைப் பதே அரிது. அதனால், வீடுகள் இருள் சூழ்ந்து இருக்கும். எங்கள் எதிர்க் குடிசையில் தினமும் இரவு சைக்கிள் டயர் ஒன்றைக் கொடியில் கட்டித் தொங்கவிட்டு எரிப்பார்கள். அது எரிந்து முடிவதற்குள் சோறு சமைத்து சாப்பிட்டுவிட்டு, அதை அணைத்துவிட்டு உறங்கச் செல்வார்கள்.

எங்கள் ஊரில் ஓர் ஏரி உண்டு. நிறைய தண்ணீர் இருக்கும் அதில் ஒரு முறை தவறி விழுந்துவிட்டேன். அப்போது எனக்கு கால் மூட்டு நழுவிப் போனது.  ஆனால், நான் வீட்டில் சொல்லாமல்விட்டதால் கால் வீங்கிவிட்டது. பக்கத்தில் உள்ள சன்னாசிநல்லூருக்கு அப்பா என்னைக் கடும் மழையில் தன் தோளில் சுமந்தபடி ஆற்றைக் கடந்து மருத்துவரிடம் அழைத்துச் சென்றதை மறக்கவே முடியாது.

என் ஊர்!

அப்பா ஒரு நாள் எங்கிருந்தோ ஒரு துண்டறிக்கை எடுத்துவந்து தந்தார். அது திராவிடர் கழகத்தின் துண்டறிக்கை. அதைப் பள்ளிக்கு எடுத்துச் சென்று வாசிக்க, என் நண்பர்கள் சுற்றி உட்கார்ந்து கேட்டனர். அப்போது நத்தம்பாடி பெரியசாமி வாத்தியார் அதை வாங்கிப் பார்த்து, அதில் இருந்த பெரியார் படத்தைப் பார்த்து 'இவர் யார்?’ என்று கேட்டார். நான் 'பெரியார்' என்றேன். அடுத்து தனது சட்டைப்பையில் வைத்து இருந்த ஒரு படத்தைக் காட்டி 'இவர் யார்?’ என்று கேட்டார். நான் 'அம்பேத்கர்' என் றேன். எனக்கு அவர்கள் இருவரையும் தெரிந்து இருக்கிறது என்பதே அவருக்கு மகிழ்ச்சியை அளித்தது. அதன் பின் பெரியார் கருத்துகள், அம்பேத்கர் கருத்துகள் என்று எங்களிடம் நிறைய பேசினார். நான் வீட்டில் சாமி கும்பிடுவதை நிறுத்தினேன்.

அப்பாவின் மறைவுக்குப் பின் அவர் பெயரில் அறக்கட்டளை தொடங்கி எங்கள் பள்ளிக்கு இரண்டு கட்டடங்களைக் கட்ட நிலமும், ஆரம்ப சுகாதார நிலையத்துக்கான நிலமும் வாங்கித் தந்து இருக்கிறோம். எம்.பி. நிதியில் ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடமும் ஒரு நூலகமும் கட்டப்பட்டு இருக்கின்றன. என் தம்பி மனைவி செல்வி சேர்மன் ஆன பிறகு சிமென்ட் சாலைகள் போடப்பட்டு இருக்கின்றன. சிறுவயதில் குடும் பத்தையும் ஊரையும் பிரிந்து என்னால் இருக்கவே முடியாது. படிக்கச் சென்ற பின் ஒவ்வொரு வார இறுதியிலும் ஓடி வந்து விடுவேன். அப்படி இருந்த நான் இன்றைக்கு என் ஊருக்கே செல்லாமல், ஊர் ஊராக சுற்றிக் கொண்டு இருக்கிறேன்!''

- கவின் மலர், படங்கள்: கே.கார்த்திகேயன், எம்.ராமசாமி
அட்டைப்பட ஓவியம்: பச்சமுத்து

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு