Published:Updated:

உன் கண்ணில் நீர் வழிந்தால்...

உன் கண்ணில் நீர் வழிந்தால்...

##~##

விழி இழந்த பெண்களின் வாழ்க்கைக்கு ஒளி கொடுத்துவருகிறார் திருச்சியைச் சேர்ந்த பிரியா தியோடர். தன்னுடைய  77 வயதிலும் 'விழி இழந்த மகளிர் மறுவாழ்வு இல்லம்’ மூலமாக அசராமல் அவர் ஆற்றிவரும் சேவைகளைப் பாராட்டி சமீபத்தில் 'சிறந்த சமூகப் பணியாளர் விருது’ வழங்கி கௌரவித்து இருக்கிறது தமிழக அரசு!

 ''என் அப்பா ஜோசப் ஒரு கண் மருத்து வர். திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை அப்பா தொடங்கியது. பார்வையற்றவர்களுக்கு கல்வி வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் புத்தூரில் அப்பா ஓர் ஆரம்பப் பள்ளியைத் தொடங்கினார். அங்கு படித்து முடித்தவர்களுக்குத் தொழில் பயிற்சி அளிப்பதற்காகவே ஆண்களுக்கான ஒரு ஹோம் ஆரம்பிச்சார். குடைத் தயாரிப்பு, சோப் தயாரிப்பு போன்ற பயிற்சிகள் அங்குஅளிக்கப் பட்டன. பார்வையற்றவர்கள் பலரும் தங்கள் சொந்தக் காலில் நிற்க அது பெரிய அளவில் உதவியது.  

உன் கண்ணில் நீர் வழிந்தால்...

1975-ம் ஆண்டு, அப்பாவின் 75-வது பிறந்த நாள். அப்ப அடுத்ததா என்ன செய்யலாம்னு யோசிச்சப்பதான் பெண்களுக்கான ஹோம் ஆரம்பிக்கலாம்னு  தோணுச்சு. யார் பாத்துக் குறதுன்னு கேள்வி வந்தப்ப, 'என் பொண்ணு பாத்துப்பா’னு அப்பா சொல்லிட்டாரு. சவாலாகத்தான் வேலையை ஏத்துக்கிட்டேன்.  பார்வையற்ற பெண்களை எப்படி அடுத்த வங்களை நம்பி அனுப்புறதுங்குற பயம் இருந்த காலகட்டம் அது. ஆரம்பத்தில் எட்டு பேர் மட்டும்தான் வந்து சேர்ந்தாங்க. காலம் போகப் போகத்தான் தயக்கங்கள் உடைஞ்சுச்சு.

உன் கண்ணில் நீர் வழிந்தால்...

அந்தக் காலத்துல கண் தெரியாத குழந்தைகள் பிறந்தா அதை அபசகுனமா நினைச்சாங்க. பெற்றோர் வெளியில எங்கேயும் அழைச்சுகிட்டுப் போக மாட்டாங்க. அவங்க வேலைக்கு கிளம்பும்போது சாப்பாடு எடுத்து வெச்சுட்டு, உள்ளேயே வெச்சு வீட்டைப் பூட்டிட்டுப் போயிடுவாங்க. வாரத்துக்கு ஒரு தடவைதான் குளிப்பாட்டிவிடுவாங்க.

நாங்க இங்கே பல் விளக்குறது, குளிக்குறதுல தொடங்கி,  வெளியில அழைச்சுட்டு போய் காய்கறி வாங்குறது வரைக்கும் கத்துக் கொடுத்தோம். அதுக்குப் பிறகு கூடை மு¬டயறது, பை தைக்கிறது, ஊதுபத்தி, பினாயில் தயாரிப்புனு சொல்லிக் கொடுத்தோம். கடைசியா சமையல் அறையில புழங்கவிட்டு, சமைக்கக் கத்துக் கொடுத்தோம். மூணு வருஷத்துக்குள்ல பல விஷயம் கத்துக் கொடுத்து அவங்க வீட்டுக்கு அனுப்பிடுவோம். வீட்ல இருந்துகிட்டே அவங்களைப் பொருட்களை உற்பத்தி செஞ்சு தரச் சொல்லிப் பழக்கி நாங்களே அதை வாங்கி வித்துக் கொடுத்தோம். இதெல்லாம் பார்த்துட்டுதான் பெண்களை அனுப்ப ஆரம் பிச்சாங்க.

உன் கண்ணில் நீர் வழிந்தால்...

இதோ, இன்னைக்கு படிப்புல ஆர்வம் உள்ளவங்களுக்குப் படிப்பும் கொடுக்குறோம். நிறைய பேர் படிச்சு நல்ல நிலையில் வெளியே போய் இருக்காங்க. ராதா பாய்ங்கிற பொண்ணு, புதுக்கோட்டை கல்லூரியில் வரலாற்றுத் துறைத் தலைவர்.

படிப்பில் ஆர்வம் இல்லாத பெண்களுக்கு திருமணம் செஞ்சுவைக்கிறோம். ஓரளவுக்குப் பார்வைத் திறன் உள்ள பெண்ணாக இருந்தால், முற்றிலும் பார்வை இழந்த பையனுக்கும் பைய னுக்கு ஓரளவுக்குப் பார்வை இருந்தால், முற்றிலும் பார்வை இழந்த பெண்ணுக்கும்னு திருமணம் செஞ்சுவைக்கிறோம். இதுவரை 500 பேருக்குத் திருமணம் செஞ்சுவைச்சுருக்கோம். பார்வையற்ற பெண்களின் நடையில் எங்களால் முடிந்த வரை கம்பீரம் சேர்க்கிறோம்!''

- பெருமிதம் பொங்கிப் பூரிக்கிறது ப்ரியா தியோடரின் குரலில்!

- ஆர்.லோகநாதன், படங்கள்: ஜெ. வேங்கட்ராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு