##~##

''ஒரு மயிலுக்குப் போர்வை தந்ததாலேயே பாரிக்கு வரலாற்றில் இடம் உண்டு என்றால், நாட் டுக்கே கம்பளிப் போர்வை கொடுக்கும் எங்கள் ஊருக்கு நீங்கள் வரலாற்றில் எவ்வளவு பெரிய இடம் கொடுக்க வேண்டும்?'' - பீடிகையோடு கரூர் புராணத் தைத் தொடங்கினார் தொழிலதிபர் தங்கராஜ். பஸ் பாடி கட்டுவதில் இந்திய அளவில் பெயர் பெற்ற நிறுவனமான 'பி.டி. கோச்’ நிறுவனத்தின் அதிபர்.

 ''பிரம்மா, தன் படைப்புத் தொழிலை இங்குதான் தொடங்கியதாகவும் அதனால்தான் கருவூர் என்று எங்கள் ஊருக்குப் பெயர் வந்ததாகவும் புராணங்கள் சொல்கின்றன. முற்காலத்தில் கருவூர், வஞ்சி மாநகர் என்றெல்லாம் அழைக்கப்பட்ட எங்கள் ஊர் நாளடைவில் கரூராக மருவிவிட்டது.

திருப்பரங்குன்றத்தில் முருகனுக்கும் தெய்வானைக்கும் திருமணம் நடந்தபோது கரூரை ஆண்ட முசுகொண்ட மன்னனுக்குதான் முதல் அழைப்பு வந்ததாம். சேர, சோழ, பாண்டியர்கள் என மூவேந்தர்களும் அரசாண்ட ஊர். அக்காலத்திலேயே பன்னாட்டுச் சந்தை கூடிய நகரம்.

என் ஊர்!

அடிப்படையில் கரூர் ஒரு விவசாய நகரம். ஊரைத் தொட்டு ஓடும் அமராவதிதான் அந்தக் காலத்தில் கரூரின் வாழ்வும் வளமும். பின்னாளில், நெய்தல் தொழில் இங்கு வந்தபோது பல நாடுகளின் தொடர்புகளும் வந்தன. தொழில் துறை செழித்தது. கூடவே வங்கித் தொழிலும் செழித்தது. இன்றைக்கு 'டெக்ஸ்டைல்’ தொழிலில் மட்டும் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கிறது கரூர். ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு லட்சம் பேர் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இங்கு வந்து செல்கின்றனர். பேருந்துக்குக் கூடு கட்டும் தொழிலில் நாட்டிலேயே முன்னோடி நகரமாகத் திகழ்கிறது. கரூர் ஒரு முழுமையான நகரமானது இப்படித்தான்.  

கரூரில் ஐந்து சிவன் கோயில்கள் இருப்பதால் பஞ்சலிங்க ஷேத்ரம் என்று ஒரு பெயரும் உண்டு. இங்கு உள்ள பசுபதீஸ்வரர் கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. பசுபதீஸ்வரர் கோயில் பங்குனிப் பெரும் திருவிழாவும் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவும் கரூரின் மிகப் பெரிய கொண்டாட் டங்கள் ஆகும்.

என் ஊர்!

கரூரில் தொழில் தொடங்கினால், அந்தத் தொழில் பெரும் விருட்சமாக வளரும் என்பது நம்பிக்கை. இங்கு தொடங்கப்பட்டு நாடு முழுவதும் கிளை விரித்து இருக்கும் கரூர் வைஸ்யா வங்கியும் லட்சுமி விலாஸ் வங்கியும் இந்த நம்பிக் கைக்கான இரு சான்றுகள்.

கோவை - திருச்சி. இந்த இரு நகரங்களுக்கும் மத்தியில் இருப்பதாலும், தொடக்கத்தில் கோவையின் ஒரு பகுதியாக இருந்து 1910-க்குப் பின் திருச்சியின் ஒரு பகுதியாக மாறியதாலும் கோவை - திருச்சி கலாசாரத்தின் கூட்டுக் கலவைதான் கரூரின் கலாசாரம்.

தமிழகம் கண்ட முக்கியப் போராட்டங்கள் எல்லாவற்றிலும் கரூருக்கும் முக்கி யப் பங்கு உண்டு. சுதந்திரப் போராட்டக் காலத்தில் புரட்சியாளராக அறியப்பட்ட நானா சாகிப், தியாகிகள் மருதமுத்து பிள்ளை, கருப்பண்ணன், மொழிப் போராட்ட வீரர்கள் பெ.கிருஷ்ணன், சுப.ராஜகோபால், பரமத்தி சண்முகம்... எல்லோரும் கரூர்க்காரர்கள்தான். கே.பி. சுந்தராம்பாள் பிறப்பால் கொடுமுடிக்காரர் என் றாலும் அவருடைய வரலாற்றில் கரூருக்கு முக்கிய மான பங்கு உண்டு.

கரூர் கண்ட இரு பெரும் பஞ்சங்கள் வரலாற்றில் மறக்க முடியாதவை. 1887, 1946 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட பஞ்சம். 1887-ல் ஏற்பட்ட பஞ்சத்தில் இறந்துபோனவர்களின் குழந்தைகள் 15 பேரைக் கொண்டு தொடங்கப்பட்டதே பின்னாளில் கரூருக்கே கல்விக் கோயிலான சி.எஸ்.ஜ.  பள்ளி.

கரூர் வளர்ந்துகொண்டே இருக்கிறது. எனக்குத் தெரிந்தே எவ்வளவோ மாற்றங்கள். ஆனால்,         ஒரு காலத்தில் கரூரில் வீடு கட்டப் பள்ளம் பறிப்பதே சிரமம். நான்கு அடி தோண்டினால், தண்ணீர் வந்துவிடும். ஆனால், இன்றைக்கு குடிக்கக்கூட காசு கொடுத்துத்தான் தண்ணீர் வாங்க வேண்டிய நிலை. வாழ்வும் வளமும் அளித்த அமராவதி நதி வறண்டுகிடக்கிறது. நிறைய குற்ற உணர்வோடுதான் ஊரைத் திரும்பிப் பார்க்கிறோம் நாங்கள்!''

- சமஸ், ஞா.அண்ணாமலை ராஜா, படங்கள்:  ஜெ.வேங்கடராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு