சினிமா
Published:Updated:

என் ஊர்!

ஸ்ரீரங்கத்துச் சிற்பங்கள்!

##~##

''எல்லாருக்கும் அவங்கவங்க ஊர் முக்கியம்தான். ஆனா, ஒரு கலைஞனுக்கு அவன் ஊர் ரொம்பவே விசேஷம். அவன் தன்னோட கலை உலகமாப் பார்க்குறது தன்னோட ஊரைத்தான். அதனால், அவனோட ஊரே ஓர் உலகமாக ஆயிடுது!'' - ஸ்ரீரங்க நாட்களுக்கு அழைத்துச் சென்றார் புடைப்புச் சிற்பக் கலையின் தந்தையும் தமிழகம் கண்ட மிகச் சிறந்த சிற்பிகளில் ஒருவருமான வித்யாசங்கர் ஸ்தபதி.

''என் பூர்வீகம் சுவாமிமலை. நான் பிறந்தது கரூரில். இப்ப இருக்குறது கும்பகோணம் மேலக்காவிரியில. இடையில் எங்கே இருந்து வந்தது ஸ்ரீரங்கம்? நான் பிறந்தப்ப எங்கப்பாவுக்கு ஜாகை ஸ்ரீரங்கத்தில். அதனால், ஒரு குழந்தையா தவழ ஆரம்பிச்சதுல இருந்து ஒரு படைப்பாளியா உருவானது வரை எல்லாம் ஸ்ரீரங்கத்தில்தான். எங்க அப்பா கௌரிசங்கர் ஸ்தபதி, அப்ப ஸ்ரீரங் கம் கோயிலோட ஆஸ்தான ஸ்தபதியா இருந்தார். ஸ்ரீரங்கம் கோயிலின் பலிபீடம், கொடிமரம், யானை வாகனம், பிரசித்திப் பெற்ற கற்பக விருட்ச வாகனம்... எல்லாம் அப்பா செஞ்சதுதான். அப்பாவுக்குச் 'சிற்ப கலாநிதி’னு பட்டம் கொடுக்கப்பட்டதும் ஸ்ரீரங்கம் கோயில்லதான்.

என் ஊர்!

ஸ்ரீரங்கம்னாலே கோயில்தான். 156 ஏக்கர்.  உலகின் பெரிய கோயில். முதல் தடவை அந்தக் கோயிலுக்குப் போயிட்டு வர்றவங்களுக்கு அதன் பிரமாண்ட அழகு பிரமிப்பை உண்டாக்கும். அப்பாவோட பட்டறையே கோயிலின் யானை மண்டபம்தான். அதனால் கோயில்லயே தவழ்ந்து, புரண்டு, உருண்டு வளர்ந்தவன். எவ்வளவு லயிச்சுயிருப்பேன்!

ஒரு பக்கம் காவிரி, இன்னொரு பக்கம் கொள்ளிடம். இது ரெண்டுக்கும் நடுவில் ஸ்ரீரங்கம். அப்போ எல்லாம் ரயில் நிலையத்தில் காலடி எடுத்துவைக்கிற வரைக்கும் ஸ்ரீரங்கம் ஒரு கிராமமாகத்தான் இருக்கும். ஊருக்குள்ள அடி எடுத்து வெச்சுட்டா நகரமாயிடும். அழகான சின்ன நகரம். கோயில் சார்ந்த வாழ்க்கைங்கிறதால், ஸ்ரீரங்கத்தில் வாழறது ஒரு தெய்வீக வாழ்க்கை!

என் ஊர்!

காலத்தால் முற்பட்ட கோயில் அரங்கநாதர் கோயில். 108 திவ்ய தேசங்களில் முதலாவது. சிலப்பதிகாரத்திலேயே ஸ்ரீரங்கம் கோயில்பற்றிய குறிப்புகள் உண்டு. 11 ஆழ்வார்கள் பாடிய தலம். பொதுவா, 'தை பொறந்தா பெருமாள் தரையில் இருக்க மாட் டார்’னு சொல்வாங்க. ஆனா, எங்க பெருமாள் வருஷம் முழுக்கவே தரையில் இருக்க மாட்டார். ஒவ்வொரு நாளும் திருவிழாதான்.

நவீனத்தையும் பாரம்பரியத்தையும் ஒரே முக்கியத்துவத்தோட அணுகும் கலாசாரம் ஸ்ரீரங்கத்தின் சிறப்பு. இந்தக் கோயிலை பெரிய அளவில் கொண்டாடின முதலாம் குலோத்துங்க சோழனுக்கும் (தமிழகத்தை அதிக காலம் ஆண்ட சோழ மன்னன்) இங்கே கல்வெட்டு உண்டு. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்தக் கோயில் நிர்வாகம் ஒழுங்கா நடக்காததைக் கண்டிச்சு கோபுரத்தில் இருந்து குதிச்சு உயிர்விட்ட கோயில் ஊழியர் அழகிய மணவாளதாசனுக்கும் இங்கே கல்வெட்டு உண்டு. அவ்வளவு ஏன், சுவாமிக்குத் தோசை, வடை படைச்சதுக்குக்கூட இங்கே கல்வெட்டுகள் உண்டு. இந்தக் கலாசாரப் பின்னணிதான் நகரமும் கிராமமும் கலந்த அழகோடு இந்த ஊரை உருவாக்குச்சுனு நெனைக்கிறேன்.

என் பால்ய கால ஸ்ரீரங்க அழகு, இப்பவும் என் கண்ணுலயே நிக்குது. அதிகாலையில் அம்மா மண்டபக் கரையில் காவிரியில் குளிச்சுட்டு எழுந்தா... மாம்பழச் சாலையில் இருந்து வரும் மாம்பழ வாசமும் பூக்காரர்கள் கொண்டுசெல்லும் மல்லிகை மணமும் அப்படியே ஆரத் தழுவும். (உங்களுக்குத் தெரியுமா? எங்க ஊர்ல கிடைக்காத மாம்பழ வகைகளே கிடையாது. சாம்பார்ல போடுறதுக் குனுகூட சாம்பார் மாம்பழங்கள் இங்கே கிடைக்கும். அதேபோல, மல்லிப்பூ. மணம் சுண்டி இழுக்கும்!) வீதிகள் நல்லா அகலமா இருக்கும். பாரம்பரியக் கட்டுமான வீடுகள். ஒவ்வொரு வீட்டு வாசல்லயும் பெண்கள் கோலம் போட்டுக்கிட்டு இருப்பாங்க. கோயில்ல நாகஸ்வர வித்வான் துரைக்கண்ணு 'திமிரி’ வாசிச்சுட்டு இருப்பார். அது அத்தனை வீதிகள்லயும் எதிரொலிக்கும்!

என் ஊர்!

என் வாழ்க்கையில் நான் பெற்ற முதல் அங்கீகாரம் ஸ்ரீரங்கம் ஹை ஸ்கூலில் என் ஓவியத்துக்காக ராஜாஜி கையால் பெற்ற பரிசு. என் வாழ்க்கையில் எனக்கு சர்வதேச அளவில் அங்கீகாரத்தைத் தேடித் தந்தவை என்னோட 'மங்கை’ தொடர் சிற்பங்கள். அந்த ஓவியத்துக்கான தாக்கத்தையும் சரி; இந்தச் சிற்பங்களுக்கான தாக்கத்தையும் சரி; எனக்குத் தந்தவை ஸ்ரீரங்கத்து கோயில் சிற்பங்கள். எனக்கு இப்ப 73 வயசாகுது. மாசத்துக்கு ரெண்டு தடவை ஸ்ரீரங்கம் கோயில் போயிடுவேன், அந்தச் சிற்பங்களைப் பார்க்க. இன்னமும் அந்த அழகு 'வா...வா...’னு அழைக்குது!''

- சமஸ், படங்கள்: என்.ஜி.மணிகண்டன்