சினிமா
Published:Updated:

இது... பச்சையா டாட்டூவா?

திருச்சியில் இளமைத் திருவிழா

##~##

திருச்சி என்.ஐ.டி-யின் தீபாவளி...  'ஃபெஸ்டம்பர்’ திருவிழா! தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சங்கமித்த இளைஞர்கள், திருச்சி மாநகருக்கே இள ரத்தம் பாய்ச்சியதுபோல புத்துணர்வூட்டிச் சென்றார்கள்!

 'நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு’ என்ற தலைப்பில் பட்டிமன்றம். பெண்களுக்கு ஆதரவு தெரிவித்துப் பேசியதில், மெஜாரிட்டி ஆண்களே.

மாணவர்கள் தாங்களே தயாரித்து, நடித்து, இயக்கி, இசை அமைத்த குறும்படங்கள், பலத்த வரவேற்பைப் பெற்றன. தீரஜ் வால்தி இயக்கிய 'பாரனாய்டு’ குறும்படம், அரங்கத்தில் இருந்த பலரையும் பீதியில் உறையவைத்தது. 'அணு உலை வெடித்தால் இந்தியா எப்படி இருக்கும்?’ என்ற கற்பனையில் உருவான குறும்படம்!

இது... பச்சையா டாட்டூவா?

'டோமினோஸ்’- இது தீப்பெட்டி அடுக்கும் போட்டி. இந்தியா 2020, கிடார், இந்திய ரூபாய் சின்னம் ஆகியவற்றைக் கிடுகிடுவென தங்களது கைவண்ணத்தில் உருவாக்கி அசர வைத்தார்கள். நுண்கலை மாணவர்களுக்கான ஓவியப் போட்டியில்... கலை, இசை, நடனம் மூன்றையும் ஒருங்கிணைத்து மாடர்ன் ஆர்ட் வரைந்துªகாண்டு இருந்த ஒரு பெண்ணைப் பார்த்து, 'ஓர் ஓவியமே ஓவியம் வரைகிறதே... ஆச்சர்யகுறி!’ என்று பசங்க கமென்ட் பாஸ் செய்ய, 'அருந்ததி’ அனுஷ்கா கணக்காக அவர் உஷ்ணப் பார்வையைச் சிந்தினார்.

ஸ்டால்களில் விற்கப்பட்ட பொருட்களின் விலையைப் பார்த்து பேஸ்தடித்துப் போன சில மாணவர்கள், ''மச்சான் நீ வாங்கேன்... நீ வாங்கேன்'' என்று கடைசிவரை டபாய்த்துக்கொண்டே இருக்க... 'கடுப்பேத்துறான் மை லார்ட்’ கணக்காகப் பார்த்தார் விற்பனையாளர்.

முகம், கை, கழுத்து என்று காணும் இடம் எங்கும் டாட்டூஸ் குத்திக்கொண்டார்கள். ''நாங்க குத்தினா பச்சை, நீங்க குத்தினா டாட்டூவா? என்ன வாழ்க்கைடா இது?'' என்பது ஒரு பெருசின் ஆதங்கம்.

இது... பச்சையா டாட்டூவா?

'பணமா? குணமா? திறமையா?’ என்று  கு.ஞான சம்பந்தம் தலைமையில் பட்டிமன்றம். தமிழே தெரியாத வட மாநில மாணவர்கள் ஆர்வத்துடன் அதைக் கவனித்துக்கொண்டு இருக்க... ''ஃபிகரே இல்லாத ஸ்டேஜ்ல அப்படி என்னத்தடா குறுகுறுன்னு பார்க்குறீங்க?'' என்று கமென்ட் அடித்துக் கலாய்த்தனர் தமிழ்ப் பசங்க.  

குட்டைப் பாவாடை, ஸ்லீவ்லெஸ் டாப்ஸில் மாணவிகள் கூட்டம் உலா வர... 'இந்த சென்சார் போர்டு எல்லாம் என்னப்பா பண்றீங்க?’ என்று முகம் சிவந்தார் பண்பாடு காக்கும் பச்சைத் தமிழர் ஒருவர்.

ராப், ஹிப் ஹாப் என்று சுரேஷின் 'பீட்’ காதைக் கிழித்துக்கொண்டு இருக்க... ''ஏரிக்கரை பூங்காற்றே...'' என்று என்ட்ரி கொடுத்து மாணவர்களின் அப்ளாஸ் அள்ளினார் பாடகி சுசித்ரா. ஏர் டெல் சூப்பர் சிங்கர் ஃபைனல்ஸ் முடித்த கையோடு என்.ஐ.டி. மேடை ஏறிவிட்டார்  சந்தோஷ்.

மூன்று நாள் கொண்டாட்டத்தில்... முதல் நாள் ஹலோ சொல்லி அறிமுகமாகி, மறுநாள் கொஞ்சம் கொஞ்சமாக நட்பு வளர்த்து, மூன்றாவது நாள் பின்னிப் பிணைந்த சில நட்புகள், பிரியும் நேரம் நெருங்க நெருங்க ரொம்பவே ஃபீலிங்ஸ் காட்டி கலைந்தார்கள்.

அடுத்த வருஷமும் ஃபெஸ்டம்பர் வரும்பா!

- ஆர்.லோகநாதன், ஆ.அலெக்ஸ் பாண்டியன்
படங்கள்: என்.ஜி.மணிகண்டன், ர.அருண் பாண்டியன்