Published:Updated:

என் ஊர் !

காவிரி சமவெளி நாகரிகம் !

தஞ்சாவூர்க் கவிராயர்

''தஞ்சாவூர் என்பது ஓர் ஊர்ப் பெயரைக் குறிப்பதல்ல; அது ஒரு பண்பாட்டின் செழுமையைக் குறிப்பது. சிந்துச் சமவெளி நாகரிகம்போல காவிரிச் சமவெளி நாகரிகமாகக் கலைகளிலும் அறிவிலும் ரசனையிலும் தலைசிறந்து விளங்கும் ஒரு மானுட வாழ்க்கையைக் குறிப்பது! - கம்பீரமாகத் தன் ஊர்க் கதையைத் தொடங்கினார் எழுத்தாளரும் கவிஞருமான தஞ்சாவூர்க்கவிராயர்!

''தண்செய் என்பதுதான் தஞ்சை ஆனது. தன்செய் என்றால் குளிர்ந்த நிலப்பரப்பு என்று பொருள். தஞ்சாவூர் வரலாறு பல நூறு ஆண்டுகளைக் கடந்தது. ஆதாரபூர்வமாகப் பேச வேண்டும் என்றால், திருச்சி, சிராப்பள்ளிக் குன்றில் உள்ள குகைத் தளத்தில் தஞ்சாவூர்பற்றிய குறிப்பு வருகிறது. காலம் கி.பி. 600.

என் ஊர் !
##~##

பாண்டியர்கள், பல்லவர்கள், சோழர்கள், முத்தரையர்கள், விஜயநகரப் பேரரசர்கள், மராட்டியர்கள், ஆங்கிலேயர்கள் என்று பல்வேறு மன்னர்களும் ஆண்ட பூமி தஞ்சாவூர். காஸ்மோபாலிடன் கலாசாரம் இந்த மண்ணில் அந்தக் காலத்திலேயே வேரூன்ற பின்னணி இதுதான். இன்றைய நவீன தஞ்சையை வடிவமைத்தவன் விஜயாலயச் சோழன். அவனுடைய காலத்தில் தொடங்கி, ராஜராஜனின் மகனான ராஜேந்திர னின் காலம் வரை (கி.பி. 850-1024) சோழர்களின் தலைநகரமாக இருந்தது தஞ்சாவூர். தஞ்சையின் பொற் காலம்... இந்தக் காலகட்டம்தான்!

எனக்கு விவரம் தெரிந்த தஞ்சா வூரின் அழகே அற்புதமானது. ரயிலடியில் இறங்கினால் அணி வகுத்து நிற்கும் குதிரை வண்டி கள், பூக்கடைகளில் தஞ்சாவூர் கதம்பம், முந்திரிக் கடைகளில் பெரிய பெரிய கண்ணாடி ஜாடிகளில் முழித்துக்கொண்டு இருக்கும் முந்திரிப் பருப்பு, பொம்மைக் கடைகளில் கண்ணைக் கவரும் மரப்பாச்சி பொம்மைகள், பளீரென்று மனசை மயக்கும் வண்ணங்கள் பூசிய தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள், சாலையோரத்தில் பெண்கள் கூடையில் விற்கும் குடமிளகாய்... அந்த அழகே தனி!

தஞ்சாவூருக்கு என்று ஒரு விசித்திர நகர் அமைப்பு! இந்தியா முழுவதும் கோயிலைச் சுற்றித்தான் வீதிகள் இருக்கும். தஞ்சாவூரில் மட்டும் ஊருக்கு வெளியே கோயில். கோயில் உற்சவங்கள் அரண்மனையைச் சுற்றித்தான் நடக்கும். சுவாமி புறப்பட்டு அரண்மனை வாசலுக்கு வருவதுதான் இங்கே வழக்கம். ஆயிரம் ஆண்டுகளைக் கடந்துவிட்ட பெரிய கோயில் தஞ்சாவூரின் மிகப் பெரிய அடையாளம். ஆனால், பெரிய கோயிலின் பிரமாண்டம் தஞ்சைவாசிகளுக்கு மரத்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். கரூவூரார் சந்நிதியில் காற்று வாங்குவார்கள். கோயில் புல்வெளியில் உட்கார்ந்து இலக்கியமும் அரசியலும் பேசுவார்கள். அண்ணாந்து பெரிய கோயிலைப் பார்ப்பவர்கள் அபூர்வம். அப்படி யாராவது பார்த்துக்கொண்டு நின்றால், அவர்கள் அயலூர்க்காரர்களாகத்தான் இருப்பார்கள்.

என் ஊர் !

அரசியலாக இருந்தாலும் சரி, இலக்கிய மாக இருந்தாலும் சரி... தஞ்சாவூர்க்காரர் களின் சாதனைகள் தனித்துவமானவை. திராவிட இயக்கத்துக்கு ஒரு என்.எஸ். இளங்கோ, காங்கிரஸுக்கு ஒரு ராமமூர்த்தி, கம்யூனிச இயக்கத்துக்கு ஒரு வெங்கடாசலம்...பரதத்துக்கு அஸ்திவாரமான தஞ்சை நால்வர் சின்னையா, பொன்னையா, வடிவேலு, சிவானந்தம்... இசை என்றால், ஆபிரகாம் பண்டிதரில் தொடங்கி வெங்கடேச அய்யங்கார் வரை; இலக்கியம் என்றால், தஞ்சை ப்ரகாஷ் முதல் சுவாமிநாத ஆத்ரேயன் வரை... இப்படி தஞ்சாவூர்க்காரர்கள் முத்திரை பதிக்காத துறை களே கிடையாது. நாட்டுப்புறக் கலையிலும் சளைத்தது இல்லை எங்கள் தஞ்சை. ரெட்டிப் பாளையம் தப்பாட்டம், வடக்கு வீதி பொய்க் கால் குதிரை, வடக்கு அலங்கம் புலிவேஷம், மயிலாட்டம், கரகாட்டம் என்று ஒவ்வொரு கலையின் உச்சமும் இங்கேதான்.

தஞ்சாவூருக்கு எனத் தனி உணவுக் கலாசாரம் உண்டு. அந்தக் காலத்தில் ரயிலடியை ஒட்டி இருந்த 'ஆனந்தா லாட்ஜ்’போல புகழ்பெற்ற உணவகம் தமிழகத்திலேயே கிடையாது. மங்களாம்பிகா நெய் ரவா தோசை, அன்பு பால் நிலையம் கற்கண்டுப் பால், குணங்குடி தாசன் சர்பத், தள்ளுவண்டி குழாய்ப் புட்டு என்று தஞ்சாவூரின் உணவுப் பெருமைகளை அடுக்கிக்கொண்டேபோகலாம்.

தஞ்சையின் அரசியல் மையம் திலகர் திடல். இங்கே பேசாத அரசியல் தலைவர்களே இல்லை என்று சொல்லலாம். அதன் எதிரே இருக்கும் சிவகங்கைப் பூங்கா கோயிலுக்கு அடுத்து தஞ்சைவாசிகளின் இரண்டாவது சந்தோஷம். தமிழ்ப் பல்கலைக்கழகமும் சரஸ்வதி நூலகமும் தஞ்சையின் கல்விக் கோயில்கள் என்றால், அரண்மனை கலைக் கோயில்!

தஞ்சை ஓவியங்கள், வீணைகள்,

என் ஊர் !

தஞ்சாவூர்த் தட்டு... தஞ்சாவூர்க்காரர்களுக்கு எல்லாமே தஞ்சாவூர்தான். ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருகிறது. இலக்கிய விமர்சகர் க.நா.சு. உடல் தளர்ந்த நிலையில் தஞ்சாவூர் வந்திருந்தார். ''இவ்வளவு முடியாத நிலையில் எதற்காக தஞ்சாவூர் வந்தீர்கள்?'' என்று அவரிடம்கேட்டார்கள். க.நா.சு. அமைதியாகப் பதில் சொன்னார். ''செத்துப்போவதற்காக வந்திருக்கிறேன்!''

நானும் அதையே சொல்ல விரும்புகிறேன். காலம் என்னை சென்னையில் வாழவைத்திருக்கிறது. ஆனால், தஞ்சாவூரில்தான் நான் சாக விரும்புகிறேன்!''

- சமஸ்
படங்கள்: கே.குணசீலன், ச.இரா.ஸ்ரீதர்