என் விகடன் - மதுரை
என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - திருச்சி
என் விகடன் - சென்னை
Published:Updated:

பெரியசாமியின் அழகர்மலையான்!

வீ.மாணிக்கவாசகம்

''அழகர்மலையானே, அம்மா ஊட்டுல இருக்காகளா?
இருக்குற மவராசி அள்ளித் தருவாகளா?
அந்த அழகரோட அருள் இந்த ஊட்டுக்கு இருக்குதா?
இந்த ஊட்டுல மங்கள காரியம் நடக்குமா?''

- கேள்வி மேல் கேள்விகளை அள்ளி வீசுகிறார் பெரியசாமி. அத்தனைக்கும் பதில் தெரிந்ததுபோல் தலையை ஆட்டி ஆட்டி ஆமோதிக்கிறது அழகர்மலை யான். அதன் தலை ஆட்டலுக்கு, கழுத்தில்கிடக்கும் மணி எழுப்பும் மங்கள ஓசை பெரியசாமி தோளில் தொங்கும் உறுமி மணி ஓசைக்கு சுருதி சேர்க்கிறது. வீட்டில் இருக்கும் பெண்கள் அரிசியோடு வருகிறார்கள். அடுத்த வீட்டை நோக்கி நகர்கிறார்கள் பெரியசாமியும் அழகர்மலையானும்!

அடுத்த வீட்டில் பெரியசாமியின் குரல் வேறு மாதிரி ஒலிக்கிறது.

''பரு உள்ளவுக, பத்து உள்ளவுக,
கைக்குடைச்சல் உள்ளவுக
கால்குடைச்சல் உள்ளவுக,
மொகக்கறுப்பு உள்ளவுக
ஒடம்பு சிறுத்து இருக்கவுக,
வேண்டிக்கிட்டு காசக் கட்டுங்க
ஒங்க வேண்டுதல் நெறைவேறும்!''

பெரியசாமியின் அழகர்மலையான்!

- இதைக் கேட்கும் அந்த வீட்டு பெண்மணி ஒரு ரூபாய் நாணயத்தை ஒரு மஞ்சள் துணியில் முடிந்து எடுத்துவருகிறார். அதைப் பத்திரமாக வாங்கிக்கொள்ளும் பெரியசாமி, ''என்ன வேண்டுதல்மா?'' எனக் கேட்க... ''எம் புள்ள மொகத்துல கரும்புள்ளி விழுந்திருக்கு. அது மறையத்தான் வேண்டுதல். அடுத்த வாட்டி இங்க வரும்போது, கரும்புள்ளி மறைஞ்சிருந்தா நீ கேக்குறத குடுக்குறேம்பா. இப்ப கொஞ் சம் கஞ்சி தாரேன் குடிச்சிட்டு போ'' என்கிறார் அந்தப் பெண். பெரியசாமியும் அழகர்மலையானும் அங்கே பசியாறு கிறார்கள். பெரியசாமியிடம் மெள்ளப் பேச்சுக் கொடுத்தேன்.

''எனக்குச் சொந்த ஊரு சிவகாசி பக்கம் சக்திமங்கலம். எங்கக் குலத்தொழிலே மாட்டுப் பொழப்புதான். எல்லா இடத்துக்  கும் இது நடந்தே வர்றதுக்கும் நம்ம சொல்றதைக் கேட்குறதுக்கும் கன்னுக்குட்டியா இருக்கும்போதே பழக்கிருவோம். கத்தரிக்காய், பருத்திக்கொட்டை, புண் ணாக்கு இதுகளுக்கு நாங்க கொடுக்குற சாப்பாடு.

சாப்பிடக் கொடுக்கும்போதே எல்லாத்தையும் சொல்லிக் கொடுத்துடணும். பெரும்பாலும் மாடுகளுக்குத் தலையை ஆட்டுறதை மட்டும்தேன் சொல்லிக் குடுத்திருப்பாக. ஆனா, என்னோட அழகர்மலையான் கை குடுக்கணும்னு சொன்னா முன் காலைத் தூக்கி கையில வைக்கும்; புள்ளையளுக்கு முத்தம் குடுனா கன்னத்துல முத்தம் குடுக்கும்.

பெரியசாமியின் அழகர்மலையான்!

ஒவ்வொரு மாசமும் ஒவ்வொரு ஊரு கோயிலுக்குப் போயிருவோம். போற வழியில இருக்குற கிராமங்கள்ல இந்த மாதிரி வேண்டுதல் வெச்சு காணிக்கை செலுத்தாம இருக்கவுகளைப் பார்த்து வேண்டுதல் காசை வாங்கிட்டுப்போயி கோயில் உண்டியல்ல போடுவேன். அடுத்த முறை திரும்ப வரும்போது வேண்டிகிட்டு காணிக்கை கட்டி விட்டவுகளைப் பார்த்து 'வேண்டுதல் நிறைவேடிச்சா?’னு கேட்பேன். நிறைவேறி இருந்தா அவுக தர்றது, அஞ்சோ, பத்தோ... வாங்கிக்கிட்டுப் போவேன்.

ஆடி தீர்த்ததுக்கு அழகர்மலைக்கும் புரட்டாசி மாசத்துல திருவண்ணாமலைக்கும் கண்டிப்பாப் போயிருவேன். சங்கரன் கோயில்ல இருக்குற தான்தோன்றி பெருமாள் கோயிலுக்கும் வருஷம் தவறாம    போயிருவேன். ஊட்டுக்கு மாசத் துக்கு ஒரு தடவையோ ரெண்டு தடவையோதான் போவ முடியும். மத்த நாளையில நடந்து போயிட்டே இருக்கணும். கஞ்சித் தண்ணி இந்த மாதிரி யாராவது இரக்கப்பட்டு ஊத்துனாதான் போச்சு. இல்லைனா கொலைப் பட்டினிதான். நானாச்சும் பரவால்ல. கத்தரியும் பருத்திக் கொட்டைப் புண்ணாக்கும் திங்கிற அழகர்மலையானுக்கும் இதே நெலைமைதான். ஆளுக்கு கொஞ்சம் பச்சத் தண்ணிய குடிச்சிக்கிட்டு கெடந்துருவோம். என்ன ஒண்ணு, போறப்ப ஒண்ணும் தெரியாது. வர்றப்ப களைச்சி களை தாங்கிப் போயிரும். அதை எல்லாம் பாத்தா முடியுமா? புள்ள குட்டியலைக் காப்பாத்தணும்ல?''

- பெரியசாமி கேட்காமலே தலையை வேகமாக அசைக்கிறது அழகர்மலையான்!

பெரியசாமியின் அழகர்மலையான்!

- படங்கள்: பா.காளிமுத்து