என் விகடன் - மதுரை
என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - திருச்சி
என் விகடன் - சென்னை
Published:Updated:

மின்னல்கொடிக்கு கறுப்புக் கொடி!

கவிஞர் ஞானச்செல்வன்

மின்னல்கொடிக்கு கறுப்புக் கொடி!

''சொந்த மண் என்பது மனம் சார்ந்தது. நடைவண்டி நாட்களில், சிலேட்டுப் பருவத்தில் துள்ளித் திரிந்த தாய்மண் திருநீறுக்குச் சமமானது'' - மதுக்கூர் நினைவுகளில் ஆழ்ந்தார் கவிஞரும் தமிழறிஞருமான  ஞானச்செல்வன்!

''மன்னார்குடிக்கும் பட்டுக்கோட்டைக்கும் இடையே இருக்கிறது மதுக்கூர்.  20 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஏழெட்டு தெருக்களைக் கொண்ட சிற்றுராக இருந்த மதுக்கூர், இன்று பேரூராட்சி!

மின்னல்கொடிக்கு கறுப்புக் கொடி!

இஸ்லாமியர்களும் இந்துக்களும் கைகோத்தபடி, மாமன் மச்சான் என்று உறவுமுறை சொல்லி அழைத்துக்கொண்டு மகிழ்வுடன் வாழும் மத நல்லிணக்க வாழ்க்கையை எங்கள் ஊரில் பார்க்கலாம். நான் என்னுடைய இளமைக் காலம் முழுவதையும் மதுக்கூரில்தான் கழித்தேன். அப்போது புது ஆற்றுப் பாசனத்தின் கிளைக் கால்வாய் பாய்ந்து ஊர் பசுமை படர்ந்து செழிப்புடன் இருந்தது. நஞ்சையும் புஞ்சையும் பூத்துக் குலுங்கும். ஊரில் இருந்து 2 கி.மீ. தூரத்தில் இருக்கும் வடுகன் குத்தகை ஏரி ஆண்டு முழுக்க நிறைமாதக் கர்ப்பிணியாகக் காட்சி அளிக்கும். ஊருக்கு நடுவில் ஒரு குளம் உண்டு. அவையாண்டிக்குளம் என்று அதற்குப் பெயர். குளம் முழுக்க தீப்பிடித்ததுபோல தாமரைப் பூத்துக் குலுங்கும். அந்தக் குளத்தில் நீந்திய  நினைவுகள் இப்போதும் நெஞ்சத்தில் நீச்சல் அடிக்கின்றன.

செல்வ விநாயகர் கோயில், செல்லம்மா காளியம்மன் கோயில். இந்த இரு கோயில்களும் எங்கள் ஊரின் பெரும் வழிபாட்டுத்தலங்கள். காளியம்மன் கோயில் நவராத்திரி விழா ஊரே கொண்டாடும் திருவிழா. கோயில் திருவிழாவின்போதே 'நவராத்திரி கலை இலக்கியத் திருவிழா’வும் நடக்கும். குன்றக்குடி அடிகளார், வாரியார் சுவாமிகள், திருக்குறள் முனுசாமி... இப்படி இங்கு சொற்பொழிவு ஆற்றாத ஆன்றோர்களே கிடையாது என்று சொல்லலாம். முன்பு மதுக்கூரில் தொடக்கப் பள்ளி மட்டும்தான் இருந்தது. இப்போது ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனி அரசு மேல்நிலைப் பள்ளிகள் வந்துவிட்டன. ஊரின் கல்விக் கோயில்கள் இவைதான்!

மின்னல்கொடிக்கு கறுப்புக் கொடி!

##~##எங்கள் ஊரின் மிகப் பெரிய அடையாளம் சந்தை. செவ்வாய்க் கிழமைகளில் கூடும் இந்த வாரச் சந்தை எங்கள் ஊர்க்காரர்கள் மட்டும் இல்லை; சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் அவ்வளவு பேரும் குவியும் சந்தை. எல்லாப் பொருட்களும் கிடைக்கும். குறிப்பாக எங்கள் ஊர்ச் சந்தையில் விற்கும் கருவாட்டுக்குப் பெரிய பெயர் உண்டு. எங்கள் ஊரில் இருந்து 10 கி.மீ. தூரம்தான் கடற்கரை ஊரான அதிராம்பட்டினம். அதனால், எல்லா நாட்களும் எங்கள் ஊரில் மீன் குழம்போ கருவாட்டுக் குழம்போ மணக்கும்!

எங்கள் ஊருக்கு 1950-களில்தான் முதன்முதலாக டூரிஸ் டாக்கீஸ் வந்தது. 'ஐயப்பா டூரிங் டாக்கீஸ்’. அந்தக் காலத்தில் சாயங்காலமானால், ஊரையே கண்ணிலும் மனசிலும் சந்தோஷம் பூசிக்கொள்ள வைத்த கனவு மாளிகை அது. 1960-களில் 'மின்னல்கொடி’ படம் மதுக்கூருக்கு வந்தபோது அதில் கதாநாயகி முழங்கால் தெரிவதுபோல உடை போட்டு இருந்ததைப் பார்த்துவிட்டு, படம் பார்க்க வந்த பெண்கள் பாதியிலேயே வீட்டுக்குத் திரும்பினர்களாம்!

எங்கள் ஊரில் இருந்து நான்கு கல் தொலைவில் இருக்கும் அத்திவெட்டியில் மழவராயர் என்று ஒருவர் இருந்தார். அவரை நாங்கள் 'அத்திவெட்டி காந்தி’ என்போம். ஊரில் யாராவது தப்புதண்டா செய்துவிட்டால் அவர் தன்னைத் தானே தண்டித்துக்கொள்வார். அப்படி தனது மூன்று விரல்களை வெட்டிக்கொண்டவர் மழவராயர்!

மின்னல்கொடிக்கு கறுப்புக் கொடி!

சுதந்திரப் போராட்டக் காலகட்டங்களிலும் சரி; திராவிட இயக்கச் செயல்பாடுகளிலும் மதுக்கூர் தன்னுடைய பங்களிப்பைச் செய்து இருக்கிறது. திராவிட இயக்கச் சிந்தனையாளர் என்.பி.காளியப்பனும் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமனும் எங்கள் பக்கத்து ஊர்க்காரர்கள்தான்.

என் தந்தை பி.கே.கோவிந்தசாமி சுதந்திரப் போராட்ட வீரர். மதுக்கூரில் கதர் விற்பனையுடன் தையல் கடையையும் முதல்முதலாக வைத்தவர் அவர். அதனாலேயே ஊரில் எங்கள் குடும்பத்துக்கு பெரிய மரியாதை உண்டு. இன்றும் எங்கள் ஊர்காரர்கள் என் திருமணத்தை மறக்காமல் சொல்வார்கள்.

ம.பொ.சி. தலைமையில் மாநாடுபோல் கதர் சட்டைக்காரர்களுடன் ஊர் மக்கள் ஒன்றாக கைகோத்து பங்கேற்ற விழா அது.

அண்மையில் ஊருக்குப் போயிருந்தேன். ஊரில் நீண்ட கடைத்தெருவும் ஏகப்பட்ட வங்கிகளும் மதுக்கூருக்கு நகரத்தின் சாயலைக் கொடுத்துவிட்டன. சிற்றூராக இருந்த மதுக்கூர் இப்போது என் ஞாபக அலமாரியில் உள்ளது!'' 

 • பாவை சந்திரன், ஆரூர் தமிழ்நாடன், கோவி.லெனின், எம்.குணா, அண்ணா கண்ணன்... இப்படி பல பத்திரிகையாளர்கள் ஞானச்செல்வனின் மாணவர்கள்!
   
 • இவர் எழுதிய ‘புகாரில் ஒரு நாள்’ என்ற கவிதை இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டில், இரண்டாம் பரிசு பெற்றது. பரிசு வழங்கியவர் பேரறிஞர் அண்ணா!
   
 • மக்கள் தொலைக்காட்சியின் ‘தமிழ் பேசு... தங்கக் காசு’ நிகழ்ச்சியில் நடுவராக இரண்டு ஆண்டுகள் பங்கேற்றவர்!
   
 • இதுவரை 18 பட்டங்--கள், விருதுகளைப்  பெற்றுள்ளார்!
   
 • திரைப்பட இயக்குநர் ‘யார்’ கண்ணன், பட்டிமன்றப் பேச்சாளர் ராமலிங்கம் இருவரும் மதுக்கூர்க்காரர்கள்--தான்!
   
 • ஞானசெல்வன் இதுவரை 22 நூல்களை எழுதி உள்ளார். இவற்றில் ‘பாரதி வாழ்கிறார்’, ‘சொல்லறிவோம்’, ‘தமிழறிவோம்’, ‘எண்ணம் பதினாறு’, ‘சிந்தனைச்சுடர்’, ‘கல்வெட்டுகளில் கன்னித் தமிழ்’ ஆகிய நூல்கள் பலரால் ஆய்வு நூல்களாக எடுத்துக்கொள்ளப்-பட்டவை!

- மானா.பாஸ்கரன்
படங்கள்: கே.குணசீலன், சொ.பாலசுப்பிரமணியன்