என் விகடன் - மதுரை
என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - திருச்சி
என் விகடன் - சென்னை
Published:Updated:

ஆபரேஷன் சுடுகாய்!

சங்கராம்பேட்டை கலகல...க.ராஜீவ்காந்தி

ரு ஞாயிறு மதியம். மெலட்டூர் அருகில் உள்ள சங்கராம்பேட்டை கிராமம். 5 முதல் 10 வயது சிறுவர்கள் அடங்கிய மங்காத்தா குரூப்பின் மீட்டிங் நடைபெற்றுக்கொண்டு இருந்தது. நாம் எட்டிப் பார்த்தோம். முண்டாசு கட்டி இருந்த அரை டவுசர் ஒன்று, நடுவில் நின்று ஆர்டர் போட்டுக்கொண்டு இருந்தது. 'செட்டியார் தோப்புல ரெண்டு நெத்துத் தேங்காய் பாத்து வெச்சிருக்கேன். நாம இன்னிக்கு சுடுகாய் போடுறோம். ஏய் பட்ரு (பட்டர்... ஒரிஜினல் பெயர் வெங்கட்) நீ பொட்டுக்கல்ல கொண்டுவந்துடு. ஏய் பார்த்தி... (பார்த்திபன்) நீ அவுலு கொண்டுவா. ஏய் நந்தினி... நீ நாட்டுச் சக்கரை. சூர்யா, நீதான் காய் பறிக்கப்போறது. வீட்டுக்குப் போயி எல்லா சாமானையும் ரெடிபண்ணி எடுத்துக்கிட்டு காளவா பக்கம் வாங்க..!'

ஆபரேஷன் சுடுகாய்!

எல்லோரும் கலைந்தனர். குரூப்பில் கொஞ்சம் பெரிய ஆளாகத் தெரிந்த சூர்யாவை நிறுத்தி விசாரித்தோம். ஏற இறங்க பார்த்துவிட்டு 'உனக்குச் சுடுகாய் தெரியாதா? வா வந்து தின்னுப் பாரு... எவ்வளவு ருசினு தெரியும்!' - சஸ்பென்ஸ் வைத்துவிட்டு நகர்ந்தான்.

சொன்னபடியே அடுத்த அரை மணி நேரத்தில் காளவாயில் கூட்டம் கூடியது. வழக்கம்போல முண்டாசுதான் தலைமை (பெயர் விஜியாம்!).

ஒருவர் பின் ஒருவராக வேலிச் சந்துக்குள் நுழைகிறார்கள். பார்த்து வைத்திருந்த மரத்தின் கீழ் எல்லோரும் நின்றுகொள்ள சூர்யா சரசரவென மரத்தில் ஏறி தேங்காய்களைப் பறித்து கீழே போடுகிறான். ''டேய் காலைலேயே பாத்தேன்டா! சுப்புரமணி (காவல்காரர்) வெள்ளையும் சொள்ளையுமா பஸ்ல ஏறுனான். பாபநாசம் போயிருக்கான் போல இருக்கு. கவலைப்படாம ஏறு!'' - நம்பிக்கை கொடுக்கிறான் தினேஷ்.

அடுத்த 10 நிமிஷங்களில் தேங்காய்கள் ரெடி. ரொம்பவே பக்குவமாக தேங்காயின் மூன்று கண்களில் ஒரு கண்ணை கொத்தி ஓட்டை போடுகின்றனர். அதிலிருந்து பாதி தண்ணீரை வெளியேற்றிவிட்டு, அடுத்து பொட்டுக் கடலை, அவல், சர்க்கரை மூன்றையும் உள்ளே திணித்து பூவரசு மரக் குச்சியால் ஓட்டையை அடைக்கின்றனனர். இன்னொரு பக்கம் மூன்று செங்கல்களால் அடுப்பு அமைக்கும் பணியும் விறகு பொறுக்கும் பணியும் செவ்வெனவே நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.

ஆபரேஷன் சுடுகாய்!

அடுப்பில் ஆப்பு செருகப்பட்ட இரண்டு தேங்காயையும் வைத்து பற்றவைத்தனர். அடுத்த அரை மணி நேரத்தில் தேங்காய்களில் வெடிப்பு விழ ஆரம்பிக்கிறது. இரண்டே நிமிடங்களில் படார்... படார்... தேங்காய்கள் வெடிக்கின்றன. சுடுகாய் ரெடி. நமது கையிலும் ஒரு பீஸ். சாப்பிட்டுப் பார்த்தோம். வெந்த தேங்காயில் பொட்டுக்கடலை, அவல் கலந்த சர்க்கரைப்பாகு ஒட்டிக்கொண்டு இருந்தது.

ஆபரேஷன் சுடுகாய்!

''அடுத்து என்னடா பண்ணலாம்?''

- குரூப் யோசித்துக்கொண்டு இருக்கிறது! 

படங்கள்: ந.வசந்தகுமார்