Published:Updated:

என் ஊர் !

மத நல்லிணக்கத்துக்கு துவரங்குறிச்சியே உதாரணம் !சமஸ் படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

என் ஊர் !

மத நல்லிணக்கத்துக்கு துவரங்குறிச்சியே உதாரணம் !சமஸ் படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

Published:Updated:
##~##

''தமிழ்ப் பண்பாட்டை வரிச்சுகிட்ட முஸ்லிம்களோட வாழ்க்கைக்கும் இந்து - முஸ்லிம் ஒத்துமைக்கும் உதாரணம் சொல்லணும்னா, நீங்க துவரங்குறிச்சியில இருந்துதான் உங்க பட்டியலைத் தொடங்கணும்!''

மத நல்லிணக்கப் பெருமையோடு தன் ஊரைப் பற்றிப் பேசத் தொடங்கினார் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியின் துணை முதல்வரும் மூளை, நரம்பியல் நிபுணருமான முஹம்மது அலீம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''பழமையான கிராமம் எங்க ஊரு. ராணி மங்கம்மா இந்த ஊர் பக்கமா போன கதை எல்லாம் சொல்வாங்க சின்ன வயசுல. விவசாயம்தான் ஊருக்கு உயிர்நாடி. ஆனா, வியாபாரத்துலயும் கெட்டிக்காரங்க எங்க மக்கள். 1930 வரைக்கும் வெறும் 30 வீடுகள் இருந்த துவரங்குறிச்சி இன்னைக்குச் சுத்தி இருக்குற நூத்துக்கணக்கான கிராமங்களுக்கு மையச்  சந்தை ஆனதுக்கும் மண்டி வியாபாரம் இங்கே செழிக்குறதுக்கும் இதுதான் பின்னணி. தென்னை, மா, தக்காளி சாகுபடி இங்கே பிரதானம். சனிக் கிழமைகள்ல எங்க ஊர்ல கூடுற வாரச் சந்தையில எல்லாம் கிடைக்கும். குறிப்பா நவதானியங்கள். இவ்வளவு செழிப்பா, சுத்தமா வேற எங்கேயும் நீங்க வாங்க முடியாது.

என் ஊர் !

பெரிய ஆறோ, ஏரியோ எங்க ஊருக்கு வாய்க்கலை. காட்டாறு இருக்கு. வெள்ளம் வர்ற நாள்ல மட்டும் தண்ணி ஓடும். ஆனா, மூணு குளங்கள் இருக்கு. செட்டியார் குளம், கொல்லாங்குளம், பூதங்குளம். இதுல பூதங்குளம் கோயில் குளம். செட்டியார் குளம் குளிக்குற குளம். கொல்லாங்குளம் குடிநீர்க் குளம். இன்னைக்கும் கொல்லாங்குளத் தண்ணியைக் குடிக்கப் பயன்படுத்துறோம்.

என் ஊர் !
என் ஊர் !

ஊர்ல ரெண்டு பழமையான கோயில்கள் இருக்கு. பூதநாயகி அம்மன் கோயில், மீனாட்சி அம்மன் கோயில். ஊரோட பெரிய விழா பூதநாயகி அம்மன் கோயில் திருவிழா. இந்துக்களுக்கு மட்டும் இல்ல; எங்க முஸ்லிம் சமூகத்துக்கும் முக்கியமான விழா இது. அம்மன் ஊர்வலம் வரும்போது பாத்தியா ஓதுன மரபும் பள்ளிவாசல்கிட்ட வந்ததும் அம்மன் ஊஞ்சல் ஆடுற மரபும் இங்கே உண்டு. அதேபோல, நூற்றாண்டு கண்ட முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் கந்தூரி விழாவிலும் பஹ்ருதீன் பாவா தர்காவின் நேர்ச்சைகள்லயும் நிறைய கலந்துக்குறவங்க இந்துக்கள். வழிபாடு சம்பந்தப்பட்ட விஷயத்துல மட்டும் இல்லாம ஊரோட நல்லது கெட்டது, தனிப்பட்டவங்க நல்லது கெட்டது வரை இந்த நல்லிணக்கத்தைப் பாதுகாக்குறோம். ரெண்டு சமூகத்திலேயும் ஊர் நலனுக்காக உழைச்ச நல்ல தலைவர்கள் இருக்காங்க. குருநாத பிள்ளை, ஆறுமுகம், பாண்டியன், வையத்தா, கே.எம்.பாவா, காதர் மீரான், ஏ.ஜமால்னு இவங்க ஏழு பேரும் அதுல முக்கியமானவங்க.

என் ஊர் !

அரசுப் பள்ளிக்கூடம்தான் எங்க ஊரோட கல்விக்கு வழிகாட்டி. எங்களுக்கு ஒரே பொழுதுபோக்கு சினிமா. ஆனந்தன்கிறவரு மொதமொதல்ல இங்கே சினிமா டாக்கீஸ் ஆரம்பிச்சாரு. அப்புறம் அழகப்பா டாக்கீஸ் வந்துச்சு. பின்னாடியே ராஜா டாக்கீஸ் வந்துச்சு. இப்ப ஆனந்தனை மூடிட்டாங்க, அழகப்பா பரணி ஆயிடுச்சு.

புரோட்டா - கறி குருமா ஊர் பிரசித்தம். ஒருவாட்டி ஊர்ப் பக்கம் வாங்க. கிராமத்து சினிமா டாக்கீஸோட புரோட்டா - கறி குருமா சாப்பிட்டுப்போகலாம்!''

துவரங்குறிச்சியின் முதல் மருத்துவர் அலீம். மூளை, நரம்பியல் துறையில் தமிழகத்தின் குறிப்பிடத்தக்க நிபுணர்களில் ஒருவரானபோதிலும்கூட ஊர்ப் பாசம் காரணமாக இன்னமும் சொந்த ஊரிலேயேதான் வசிக்கிறார்!

 மூளை நரம்பியல் தொடர்பாக 11 நூல்களை எழுதி இருக்கும் இவர், இதற்காக இந்திய மருத்துவக் கழகத்தின் விருது உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்று இருக்கிறார்!

 அலீமின் மனைவி பாத்திமா, துவரங்குறிச்சியின் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் பேரூராட்சித் தலைவர்!

கவிஞர்கள் மனுஷ்யபுத்திரன், சல்மா... இருவரும் துவரங்குறிச்சிக்காரர்கள்!