Published:Updated:

ஏழைகளின் பாத்திரம் !

நீரை.மகேந்திரன்படங்கள்: இ.ராஜவிபீஷிகா

##~##

என்னதான் பளபளா எவர்சில்வர் பாத்திரங்கள் வந்துவிட்டாலும், அலுமினியப் பாத்திரங்களுக்கு ஈடு இல்லை. இன்றைக்கும் பலர் வீடுகளில் இட்லிப் பானை, எண்ணெய்ச் சட்டி, பெரிய சட்டிகள் அலுமினியம்தான். ஒரு வகையில் ஏழைகளின் பாத்திரம் என்று சொல்லப்படும் இந்த அலுமினியப் பாத் திரங்கள் எப்படித் தயாரிக்கப்படுகின்றன?

 அலுமினியப் பாத்திரத் தயாரிப்புக்குப் பேர் போன கும்பகோணம், அம்மாசத்திரத்துக்கு ஒரு விசிட்!

ஏழைகளின் பாத்திரம் !
ஏழைகளின் பாத்திரம் !

காலையிலேயே பரபரப்பாக இருக்கின்றன பட்டறைகள். விதவிதமாக குவிந்துகிடக்கின்றன விற்பனைக்குத் தயாரான பாத்திரங் கள். மறுபுறம் தயாரிப்புப் பணிகள் நடந்து கொண்டே இருக்கின்றன.

முதல் யூனிட்டில் சுத்தமான அலுமினிய பார்களோடு பழைய அலுமினியப் பொருட்களையும் சேர்த்து உருக்குகிறார்கள். சுமார் 660 டிகிரி செல்சியஸில்தான் அலுமினியம் உருகும். பர்னஸ் ஆயில் அடுப்பில் பெரிய சட்டி மூலம் உருக்கத் தொடங்கினால் அரை மணி நேரத்தில் குழம்புபோலக்  கொதிக்கத் தொடங்கிவிடுகிறது அலுமினியம். இந்தக் கொதிக்கும் குழம்பைத் தேவையான அளவு டைகளில் ஊற்றி

ஏழைகளின் பாத்திரம் !

சில நிமிடங்கள் ஆறவிட்டு பிரிக்கிறார்கள். தடிமனான பிளேட்போல வரும் அதை ரோலிங் இயந்திரத்தில் கொடுத்து தட்டையாக நீட்டுகிறார்கள். அதற்குப் பிறகு அதை மீண்டும் இன்னொரு அடுப்பில் வைத்து இலகுவாக்கி மீண்டும் ரோலிங் இயந்திரத்தில் கொடுத்து செவ்வக அளவில் தட்டையாக்குகிறார்கள்.  

இந்த வேலைகள் எல்லாம் சூட்டோடு சூடாகத்தான் நடக்க வேண்டுமாம். இல்லை என்றால் திரும்பவும் கொதிக்கவைத்தால்தான் உண்டு என்பதால் இந்த யூனிட்டுக்குள் உடனுக்குடன் வேலை முடிகிறது. மிகுந்த பாதுகாப்போடும் கவன மாகவும் நடக்கின்றன  முதற்கட்ட வேலைகள்!  

அடுத்து ஒவ்வொரு பாத்திரத் துக்கும் ஏற்ற அளவுபடி அலுமினியப் பிளேட்டுகளை வட்டமாக வெட்டுகிறார்கள். இப்படி வெட்டப்பட்ட வட்ட பிளேட்டுகளை லேத் மெஷினில் பொருத்தி இயக்குகிறார்கள். இயந்திரம் ஓடிக்கொண்டு இருக்கும்போதே பிளேட்டுகளை மடக்கி, நெளித்து சில வேலைகள் செய்கிறார்கள். அந்த இரண்டு நிமிடத்தில் அழகான இட்லிப் பானை ரெடியாகிவிடுகிறது. இட்லித் தட்டுகள் செய்வதற்கும் தனி இயந்திரம். இதற்கடுத்து பாலிஷ் போடும் யூனிட். இந்த வேலையும் முடித்துவந்தால் விற்பனைக்கான பாத்திரங்கள் தயார்.

''விற்பனையில் தேக்கம் இல்லாத அளவுக்கு பல ஊர்களில் இருந்தும் வியாபாரிகள் வாங்கிச்செல்கிறார்கள் என்றாலும், ஆட்கள் பற்றாக்குறையால் தேவைக்கு ஏற்ப உற்பத்தி செய்ய முடியவில்லை!'' என்கிறார் 'எவர் பிரைட்’ அலுமினிய பட்டறையின் ஜெகந்நாதன்!

அடுத்த கட்டுரைக்கு