Election bannerElection banner
Published:Updated:

திருச்சி வாசகர் திருவிழா களைகட்ட என்ன வழி ?

ஆர்.லோகநாதன்படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

##~##

திருச்சி புத்தகக் காட்சிக்கு இது வெள்ளி விழா ஆண்டு! ஆனால், யாரும் கொண்டாட முடியவில்லை. காரணம், குட்டிக் குட்டி நகரங்கள் எல்லாம்  பிரமாண்டப் புத்தகக் கண்காட்சி களில் கலக்கிக்கொண்டு இருக்க தமிழகத்தின் இரண்டாம் தலை நகரிலோ புத்தகக் காட்சிகள் நாளுக்கு நாள் வெறிச்சோடு கின்றன.

 என்ன காரணம்?

திருச்சியைச் சேர்ந்த இலக்கியவாதியான வீ.ந.சோமசுந்தரத் திடம் பேசியபோது, ''சென்னையை அடுத்து ஈரோடு, மதுரை, நெய்வேலி ஆகிய ஊர்களில் புத்தகத் திருவிழாவை மிகச் சிறப்பாக நடத்துகிறார்கள். ஈரோட்டில் 2005-ல் 75 அரங்குகளோடு தொடங்கப்பட்ட புத்தகக் காட்சி இந்த வருடத்தில் 200 அரங்குகளை எட்டி இருக்கிறது. கிட்டத்தட்ட 200 பதிப்பாளர்கள் பங்கேற்று இருக்கிறார்கள். திருச்சியில் மட்டும் ஏன் இந்த நிலை? புத்தகக் காட்சியை ஒரு எழுத்தாளரோ, இலக்கியவாதியோ நடத்த முடியாது. அந்தந்தப் பகுதியில் வேர் பதித்து இருக்கும் பதிப்பகங்கள்தான் முன்னின்று நடத்த வேண் டும். ஆனால், இங்கோ ரோட்டரி சங்கம் நடத்துகிறது. அதுவும் வணிக நோக்கோடு. முக்கியமான காரணம் இதுதான்'' என்று வருத்தப்பட்டார்.

திருச்சி வாசகர் திருவிழா களைகட்ட என்ன வழி ?
திருச்சி வாசகர் திருவிழா களைகட்ட என்ன வழி ?

காந்தி இலக்கியப் பேரவையின் தலைவர் ம.முருகேசன், ''புத்தகக் காட்சிக்கான ஸ்டால் அமைப்பு, நுழைவாயில் எதுவும் சரியில்லை. உள்ளே நுழைந்ததும் கேன் டீனில் பஜ்ஜி சுடுவதுதான் கண்ணில்பட் டது. அதுபோல், புத்தகங்களுக்கு ஐந்து முதல் 10 சதவிகிதம் தள்ளுபடியே தரப் பட்டது. சாதாரண புத்தகக் கடைகளி லேயே இந்தத் தள்ளுபடி தருகிறார்களே? அதுபோல் கூட்டம் இல்லாததால் மாலையில் சொற்பொழிவாற்ற வந்த நடிகர் சிவகுமார் ரொம்பவே அப்செட் ஆனார். 'என் கூட்டங் களுக்கு ஆயிரம் பேர் வர ரெடியா இருக்காங்க. வெறும் 150 பேரைத்தான் சேர்த்திருக்கீங்க’ன்னு மேடையிலேயே ரெண்டு முறைச் சொல்லி வருத்தப்பட்டார்'' என்று குறைகளை அடுக்கி னார்.

தமிழ் கலை இலக்கியப் பேரவையின் செய லாளர் ராஜா ரகுநாதன், ''புத்தகக் கண்காட்சி என்றால் புதிய புத்தகங்களை வெளியிட வேண் டும். அதுதொடர்பாக திறனாய்வு செய்ய வேண் டும். புதிய வாசிப்பாளர்களை உருவாக்கும் விதமாக மதிய நேரங்களில் கல்லூரி, பள்ளி மாணவர்களை பார்வையிட அழைத்துக்கொண்டு வரவேண்டும். அவை எதுவுமே இங்கு செய்யப்படவில்லை. மாறுவேடப் போட்டி, பாடல் நிகழ்ச்சி களை நடத்தியதன்

திருச்சி வாசகர் திருவிழா களைகட்ட என்ன வழி ?

மூலம் அப்பர் மிடில் கிளாஸ் மக்களுக்கான பொழுதுப்போக்கு இடமா அதை மாத்திட்டாங்க. மாவட்ட நூலக ஆணைக் குழு இக் கண்காட்சிக்குப் பொறுப் பேற்று நடத்தினால், நல்ல வரவேற்பு கிடைக்கும்'' என்று ஆலோசனை சொன்னார்.

'காவிரி பதிப்பகம்’ உரிமையாளரும், எழுத்தாளருமான க.முருகானந்தம், ''இம்முறை நடந்த புத்தகக் கண்காட்சிக்கு போதிய விளம்பரங்கள் இல்லை. ஊடகங்களிலும் விளம்பரங்கள் தந்திருக்க வேண்டும். நகரின் முக்கிய இடங்களில் ஃப்ளெக்ஸ், பேனர்கள் வைத்திருக்க வேண் டும். இவை எதுவும் செய்யாததால், புத்தகக் கண்காட்சி நடந்ததே மக்களுக்குப் போய்ச் சேரவில்லை'' என்றார்.

புத்தகக் காட்சியின் செயலரான பஞ்சநாதனிடம் பேசியபோது, ''திருச்சியில் தொடர்ந்து 25 வருடங்களாக சிறப்பான முறையில் புத்தகக் கண்காட்சியை நடத்திவருகிறோம். இந்த முறை மக்கள் கூட்டம் குறைவாகிப்போனது உண்மைதான். அதற்கு பல காரணங்கள். காத்மாண்ட் விமான விபத்தில் இறந்தவர்களில் நால்வர் எங்கள் ரோட்டரி கிளப்பைச் சேர்ந்தவர்கள். அதில் ரொம்பவே இடிந்துபோய்விட்டோம். இதுவும் ஒரு காரணம். சின்னச்சின்ன குறைகளைத் தாண்டி அடுத்த வருஷம் திருச்சி புத்தகக் காட்சி பிரமாண்டமாக நடக்கும்'' என்றார்.

அதுதான் வாசகர்களின் விருப்பமும் ! 

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு