Published:Updated:

என் ஊர்!

கல் இல்லாத சோறும்... முள் இல்லாத மீனும்!

என் ஊர்!

கல் இல்லாத சோறும்... முள் இல்லாத மீனும்!

Published:Updated:
##~##

''குன்றும் கோயிலும் இருக்கிற ஊர் ரொம்ப விசேஷம்னு சொல்வாங்க. எங்க ஊரே குன்றும் கோயிலும்தான். விசேஷத்துக்குக் குறைச்சல் இருக்குமா என்ன?''-தன்னுடைய நகைச்சுவைப் பேச்சால்  எல்லோரையும் வசீகரிக்கும் கவிஞர் நந்தலாலா தனது சொந்த ஊரான குன்றாண்டார்கோவில்பற்றிப் பேசத் தொடங்கினார்.

 ''புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரில் இருந்து 13 கி.மீ. உள்ளே இருக்கும் சின்ன ஊர் குன்றாண்டார்கோவில். எங்க ஊருக்கே சிறப்பு பல்லவர் காலத்துல கட்டப்பட்ட குடைவரைக் கோயிலான பர்வதகிரீஸ்வரர் திருக்கோயில்தான். ஊருக்கு மத்தியில் இருக்கும் பர்வதமலைனு சொல்லப்படும் குன்றைக் குடைஞ்சு கட்டப்பட்டது இந்தக் கோயில். பாறையிலேயே குடையப்பட்டு இருக்கும் வலஞ்சுழி விநாயகர் இன்னொரு சிறப்பு.

என் ஊர்!

கோயிலை ஒட்டி நூறு கால் மண்டபம் இருக்குது. சுவாமி புறப்பாடு எல்லாம் அங்கிருந்துதான் நடக்கும். ரெண்டு குதிரைகள் தேரை இழுத்துக்கிட்டுப் போவது போன்ற அமைப்பில் அந்த மண்டபம் இருக்கும். இது அமைஞ்சிருக்கும் சக்கரம் ஒரே கல்லால் ஆனது. இந்த சக்கரத்தைச் சுற்றிவிட்டால் சுற்றும். மலை மேல் சறுக்கு விளையாட லாம். விளையாடி டவுசர் கிழிந்து, வீட்டில் அடி வாங்கிய நாட்கள் ஏராளம். இந்தக் கோயிலும் மண்டபமும் இரண் டாம் நந்திவர்மனின் காலகட்டத்தில் (கி.பி. 710 - 775) கட்டப்பட்டதா வரலாற்று ஆய்வாளர்கள் சொல்றாங்க.

சாளுக்கியர்கள், சோழர்கள், பிற்காலப் பாண்டியர்கள், விஜய நகர மன்னர்கள் இந்த ஊரை ஆண்டதற்கான குறிப்புகள் கல்வெட்டுகளில் இருக்கு. அந்தக் கல்வெட்டுகள்படி பார்த்தால், எங்க ஊர் பெயர் திருகுன்றக்குடி. சமீப காலத்தில் உமையாள் சந்நிதியும் குன்றின் மேல் முருகன் கோயிலும் கட்டப்பட்டு இருக் கின்றன. குன்றின் மேல் ஆண்டவன் இருக்கும் காரணத்தால் இது குன்றாண்டார் கோவில்.

என் ஊர்!

'கல் இல்லாத சோறும் முள் இல்லாத மீனும்’னு எங்க ஊர் சிறப்பைப் பத்தி அக்கம்பக்கத்தில் சொல்வாங்க. பொதுவா, புதுக்கோட்டை மாவட்டத்தை வானம் பார்த்த பூமினு சொல்வாங்க. ஆனா, எங்க ஊரில் விவசாயம் அமோகமா நடக்கும். நிலத்தடி நீரும் வற்றாமல் கிடைக்கும். நான்கு குளமும் தோப்பில் ஒரு பொதுக் கேணியும் இருக்குதுனா பாத்துக்கங்க. நெல்லடிக்கும் களமானது பாறையாக இருப்பதால்... கல், மண் எதுவும் நெல்லில் கலப்பது இல்லை. அதுபோல், குன்றுக்கு நடுவில் ஒரு சுனை இருக்கு. குன்றில் பெய்யும் மழை நீர் வழிந்தோடி கீழே ஒரு இடத்தில் சேகரமாகும். ரெண்டு இடத்திலும் அயிரை மீன்கள் நிறைய கிடைக்கும். அயிரை மீனில் அதிகம் முள் இருக்காது. அதை வெச்சுத் தான் இந்தச் சொலவடை வந்தது.

மாட்டுப் பொங்கல்தான் எங்க ஊருக்கான திருவிழா. ஊர் கூடிக் கொண்டாடுவோம். ஊர்ப் பொது இடத்தில் பொங்கல் வைத்து, சாமி கும்பிட்டு, மஞ்சுவிரட்டு நடத்துவோம். அதேபோல் காமன் பண்டிகையும் அன்றைய தினம் சிறப்பாக நடக்கும். முருகன் கோயிலில் கொண்டாடப்படும் ஆடி மற்றும் தை கிருத்திகை சிறப்பானது. காவடி, கரகம் எடுத்து வருவார்கள். அதுபோல் உமையாளுக்குச் சாத்தப்படும்

மஞ்சள் காப்பும் மிகவும் விசேஷம். வேண்டுதல் என்றால் மஞ்சளை உமையாள் முன் இருக்கும் தொட்டியில் போட்டுவிடுவார்கள். தை வெள்ளி அன்றும் ஆடி வெள்ளியன்றும் அந்த மஞ்சளை அம்மனுக்கு அரைத்துப் பூசுவார்கள்.

என் ஊர்!

என் பாட்டனார், அப்பாவின் தாத்தா குப்புசாமிப் பிள்ளை, புதுக்கோட்டை சமஸ்தானத்தில் வேலை பார்த்தவர். தாத்தா திருமலை பிள்ளை 30 ஆண்டுகாலம் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர். அதனால், 'வாத்தியார் வீடு’ என்பதே எங்கள் வீட்டுக்கான அடையாளம். என்னுடைய தந்தை டி. சிங்காரவேலு 'திராவிட நாடு’ எழுத்தாளர்களில் ஒருவர். அதனால், ஊரில் எங்கள் குடும்பத்துக்குத் தனி மரியாதை உண்டு. காலமும் வேலைவாய்ப்புகளும் ஊரைவிட்டு வரும்படியான சூழலை உருவாக்கிவிட்டாலும், விழாக்களும் விசேஷங்களும் இன்னமும் எங்களை இணைத்துத்தான் வைத்து இருக்கின்றன!''

      - ஆர்.லோகநாதன், படங்கள்: என்.ஜி.மணிகண்டன்