Published:Updated:

அடடே, அன்னை சித்தர்!

அடடே, அன்னை சித்தர்!

அடடே, அன்னை சித்தர்!

அடடே, அன்னை சித்தர்!

Published:Updated:
##~##

''இந்தக் காலத்துல சாமியாரா இருக்கறது சாதாரணமானது இல்லை ராஜா. அதுக்கு உலக நடிப்பு வேணும். ஆனானப்பட்ட நடிகர் திலகமே இவனுங்க நடிப்பைப் பார்த்தார்னா கிறுகிறுத்துப்போயிருவாரு!' - அட்டகாசச் சிரிப்போடு பேசும் ராஜ்குமார், பெரம்பலூர் ஏரியாவின் பிரசித்தி பெற்ற சாமியார்.

 மேலுக்கும் இடுப்புக்குமாக இரண்டு எளிமை யான வெள்ளை வேட்டிகள் மட்டுமே உடுப்பு. இடுப்பைத்  தொடுகிறது ஜடாமுடி. பெரம்பலூரின் வடக்கே இருக்கும் எளம்பலூர் என்ற கிராமத்தில் அமைந்திருப்பதால் எளம்பலூர் மலை என்றளவே அறியப்பட்டதை, பிரம்மரிஷிமலை என்றாக்கியவர். அதோடு, மலை அடிவாரத்தில் ஆசிரமம், யாகம், பூஜை, தோஷ நிவர்த்தி என எப்போதும் பக்தர்கள் பரிவாரம் சூழப் பரபரப்பாக இருக்கிறார் ராஜ் குமார். உள்ளூர் தவிர்த்து இலங்கை, சிங்கப்பூர், மலேசியா என 'கோபால் பல்பொடி’ விளம்பர வாசகத்தின் அனைத்துத் தேசங்களிலும் பறந்து பறந்து ஆன்மிகப் பணியாற்றுகிறார்.

அடடே, அன்னை சித்தர்!

'எங்கிட்ட ஒண்ணுமே இல்லை ராஜா. யோகம் தெரியும், சித்தர்கள் சகவாசம் உண்டு. அவங்க ரகசியமா விட்டுப்போன வைத்தியங்கள் தெரியும். அவ்வளவுதான். மத்தபடி என்னை நம்பி வர்றவங் களை விரட்டவா முடியும்? அதுலயும் இந்த சினிமாக்காரங்க தொல்லை தாங்கலை. விட்டா இந்த பிரம்மரிஷிமலையை ஸ்டுடியோ ஆக்கி ஆசிரமத்தை ஏவி.எம். பிள்ளையார் கோயில் ஆக்கிடுவாங்க ராஜா'- சந்தோஷச் சலிப்போடு சொல்லும் ராஜ்குமாரும் ரிஷிமூலப்படி பக்கா கோலிவுட் பார்ட்டியாக ஒரு காலத்தில் வலம் வந்தவர்தான்.

'ஸ்ரீலஸ்ரீ பிரம்மரிஷி காகபுஜண்டரின் அன்னை சித்தர்’ என்ற நாமகரணத்தோடு இன்றைக்குப் பிரபலமாக இருக்கும் ராஜ்குமார், தனது இளம் வயதில் கோடம்பாக்கத்தில் ஏராளமான கனவுகளுடன் தவம் இருந்தவராம். 'அப்பா பெரிய போலீஸ் அதிகாரி. அவர் எவ்வளவோ அடிச்சும் திட்டியும்கூட சினிமா தியேட்டரே பள்ளிக்கூடம்னு  கிடந்தேன். சரி... அதுலயாவது உருப்படப் பாருனு தன்னோட செல்வாக்குல பிரபல இயக்குநர்கள்கிட்ட உதவியாளரா சேர்த்து விட்டார். அது ஒரு கனாக்காலம் ராஜா. ரூம் போட்டுக் கதை எழுதறதும், வசனம் எழுதறதும், அட்டகாசமா ஸீன் நெய் யறதுமா... திரைக்குப் பின்னாடி கொஞ்சம் பேரோடத்தான் இருந்தேன். கமலும் நானும் வாடா போடா ரேஞ்சுக்கு நெருக் கம்னா உங்களால நம்ப முடியுமா? 'எல் லாம் இன்பமயம்’, 'கரையெல்லாம் செண் பகப்பூ’, 'கோழி கூவுது’, 'மீண்டும் கோகிலா’... இதெல்லாம் நான் வேலை செஞ்ச படங்கள்.

அடடே, அன்னை சித்தர்!

அர்ஜுன், மாதவி காம்பினேஷன்ல அப்போ பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டான ஒரு இந்திப் படத்தின் ரீ-மேக்கை இயக்கும் வாய்ப்பு வந்தது. புரொடியூசர் வெயிட்டான பார்ட்டி. 'ஆஹா! நாமளும் ஆரம்பிச்சுட்டோம்ல’னு  சிரத்தையா பெரியவங்க பலரைச் சந்திச்சு ஆசீர்வாதம் வாங்கினேன். அந்த வகையில அப்ப பெரம்பலூர் பக்கம் இருந்த தலையாட்டிச் சித்தரைச் சந்திக்க வந்தேன். சினிமாவை விட்டுட்டு இங்கேயே தங்கிட்டேன்!'' - ரிஷிமூலம் சொல்கிறார் ராஜ்குமார்.

அதற்குப் பின் நடந்தது எல்லாம் வரலாறு.             தமிழ்கூறும் நல்லுலகின் எந்த மூலையில் இருந்தும் ஹீரோ, இயக்குநர், தயாரிப்பாளர் கனவோடு  கிளம்பு பவர்கள் ஒரு நடை பிரம்மரிஷிமலைக்கு வந்து செல்வது வழக்கமானது. இளையராஜாவும் கங்கை அமரனும் அடிக்கடி இங்கே இசை நிகழ்ச்சிகள்நடத்தி உள்ளனர். ராஜ்குமார் வெளியிடும் ஆன்மிகப் பத்திரி கையில் எழுதுபவர்கள் எல்லாம் சினிமா புள்ளிகள். இன்றைக்கும் கிரிவலம், தீபத் திருநாள் என்று வந்து விட்டால் செந்தில், போண்டாமணி போன்றவர் களாவது மாஸ் அட்ராக்ஷனுக்கு வந்துவிடுகிறார்கள். இது தவிர, ராஜ்குமாரைச் சந்திக்க வரும் அனைவருக் கும் தலைவலி முதல் மூலம் வரை சர்வரோக நிவாரணியாக ஒரு தைலம் கிடைக்கும்.

அடடே, அன்னை சித்தர்!

எந்தப் பிரச்னையும் இல்லைஎன்றால்கூட சித்த வைத்தியப் பல்பொடி வாங்கிக்கொள்ளலாம். மனைவி, இரு மகன்கள் என இல்லறத்தோடு ஆன் மிகப் பணியையும் தொடர்வதால், சக சாமியார்களை நேரம் கிடைக்கும்போது எல்லாம் சகட்டுமேனிக்குத் திட்டுகிறார்.

'எல்லாம் சரி,  என்னோட அவதார நோக்கத்தைக் கேட்க மறந்துட்டியே ராஜா. பரவாயில்லை. நானே சொல்றேன். 2020-ல இதுவரை இல்லாத மிகப் பெரிய நிலநடுக்கம், சுனாமி எல்லாம் வரப்போகுது. அப்போ உயிர் பிழைச்ச எல்லாரும் 'அன்னை சாமி அபயம் கொடு’னு பிரம்மரிஷி பக்கம் வந்து சேவிப்பாங்க. அவங்கள்ல பாவம் பண்ணாத மனுஷ ஜீவனுங்களை எலிகளா மாத்தி இந்த மலையோட குகையில பத்திரப்படுத்தப்போறேன். இன்னும் ரெண்டு வருஷத்துல அணுக் கதிர்வீச்சால கடல் கெட்டுப்போய் உப்பு கிடைக்காம மனுஷப் பயலுங்க சாவப்போறாங்க. அவங்களுக்காக மலை அடிவாரத்துல ஆயிரம் டன் உப்பு சேமிக்க குடோன் கட்டப்போறேன். அப்புறம்...' இடுங்கிய கண்கள், மாறிய குரல் என அன்னை சித்தரின் தொனி அமானுஷ்யம் காட்டக் காட்ட... கண்ணைக் கட்ட ஆரம்பித்தது!

- எஸ்.சுமன்