Published:Updated:

கோலாட்டம் ஒயிலாட்டம் கொண்டாட்டம்!

இது இளசுகளின் திருவிழா

##~##

திருச்சியே கொஞ்சம் மிரண்டுதான் போனது. பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த 'பி.டி.யு. ஃபெஸ்ட்’ பிரமாண்ட கலை விழாவால். எங்கு திரும்பினாலும் இளசுகளின் ஆட்டம் பாட்டம், கொண்டாட்டம்!

 முதல் நாள் நடந்த கலாசாரப் பேரணியில் தீச்சட்டி, சூலாயுதம், வேல்கம்பு என டெரர் காட்டினார்கள் மாணவிகள். அம்மன் வேடமிட்ட பெண் ஆவேசமாக ஆடிக்கொண்டு இருக்கும்போதே மழை வந்துவிட... 'ஆத்தா உன் மகிமையே மகிமை!’ என்று மாணவர்கள் ரவுண்ட் கட்டி ஆடினர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தப்பாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், உறுமியடி என்று பட்டியல் நீள... பல்கலைக்கழகமே கோயிலாக மாறிப்போனது. அதிலும் உடல் முழுவதும் கறுப்பு மை பூசிக்கொண்டு, கையில் அரிவாளோடு ஒரு பெண் ஆவேசம் காட்ட... பசங்க கூட்டம் தெறித்து ஓடியது. நடந்த களேபரங்களால் உண்மையிலேயே ஒரு பெண்ணுக்கு சாமி வந்து, 'நான் ஆத்தா வந்திருக்கேன்டீ’ என்று ஆட ஆரம்பித்துவிட்டார்.

கோலாட்டம் ஒயிலாட்டம் கொண்டாட்டம்!

வெரைட்டி பல்சுவை நிகழ்ச்சியில்... டப்பா, டின், வாளி, உடைந்த பலகை சகிதமாக ஒரு கச்சேரியே நடத்திக் காட்டிய மாணவர்களுக்கு, பெண்கள் பக்கம் இருந்து பலத்த வரவேற்பு. அதேபோல், கோமாளி வேஷம் போட்டு வந்த மாணவிகள் காமெடி டிராக்கைக் கையிலெடுத்து 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் வரையில் வம்பிழுத்து அப்ளாஸ் அள்ளினர்.

'ஊழல் நதி எப்போது வற்றும்?’ என்ற தலைப்பில் பேசிய மாணவர்கள், கவுன்சிலர் முதல் கல்மாடி வரை  கிழித்துப்போட்டனர். எல்லாப் போட்டிகளிலும் இப்படி மாணவர்களின் சமூக அக்கறையைப் பார்க்க முடிந்தது. கிராமிய நடனத்தில் தூக்கலாகப் பெண்களின் செல்வாக்கு. களைகட்டிய போட்டிகளைப் படம் எடுக்க, போட்டோ கிராஃபர்கள் ஸ்டேஜை மறைக்க, ''எல்லாத்தையும் பிடிச்சு ஜெயில்ல போடுங்க சார்'' என்று 'சந்தானம்’ பாடிலாங்குவேஜில் கோரஸ் எழுப்பினர் காலேஜ் மாணவர்கள்.

கோலாட்டம் ஒயிலாட்டம் கொண்டாட்டம்!

காடுகளை அழித்தால், அழிவு நமக்குத்தான் என்று பாடை, தப்பு, சங்கு சகிதம் சேதி சொன்ன மாணவர்களைப் பார்த்து, ''ஃபாரஸ்ட்டை அழிச்சாலும் சங்கு... பக்கத்தில இருக்கிற பொண்ணை அணைச்சாலும் சங்கு!'' என்று தத்துவ மழை பொழிந்தார் மாணவர் ஒருவர் (யார் பெத்த புள்ளையோ!).  

ரங்கோலி போட்டி நடந்துகொண்டு இருந்த ஸ்பாட்டை வலம் வந்த மாணவர் ஒருவர், ''கேர்ள்ஸ், நீங்க சிரிச்சாலே ரங்கோலி மாதிரிதான் இருக்கு. பின்ன எதுக்குக் கஷ்டப்பட்டு வரையறீங்க?'' என்று வழிந்து நிற்க, ''பாத்துடி... ஜொள்ளுல ரங்கோலி அழிஞ்சுடப்போகுது!'' என்று கேர்ள்ஸ் ரிப்ளை கமென்ட் அடிக்க... ரோமியோ முகத்தில் அசடு!

எல்லாப் போட்டிகளிலும் கிராமத்து மணம் வீசியதைக் கண்டு நொந்துபோன மாடர்ன் வாலிபர் ஒருவர், 'டாம் குரூஸ் படம் பார்த்தே பழகிப்போச்சா... இதெல்லாம் உடம்புக்கு ஒப்புக்கலை மச்சான்’ என்று ரொம்பவே அலுத்துக்கொண்டார்.

'ரோட்டோரம் நடந்து போற சிங்காரி... என்னைப் பார்வை யாலே கொல்லாதடி கொலைகாரி’ என்று மாணவர் ஒருவர் உருகி உருகிப் பாட... பெண்கள் கூட்டத்தில் ஆங்காங்கே சிரிப்பு!

- ஆ.அலெக்ஸ் பாண்டியன், படங்கள்: ர.அருண் பாண்டியன்