##~##

''ரெட்டை நகரங்கள் தெரியும்ல? சான் ஃபிரான்சிஸ்கோ - ஆக்லாந்து, கொல்கத்தா - ஹெளரா, திருநெல்வேலி - பாளையங்கோட்டை... அப்படி ரெட்டை ஊர் எங்க திருநாகேஸ்வரமும்  உப்பிலியப்பன்கோவிலும். இந்தத் தெரு திருநாகேஸ்வரம்னா அந்தத் தெரு உப்பிலியப்பன்கோவில். நான் உப்பிலியப்பன்கோவில்ல பொறந்தவன். எங்க ஊரை அந்தக் காலத்துல திருவிண்ணகரம்னு அழைச்சிருக்காங்க. அப்படின்னா பூலோக சொர்க்கம்னு அர்த்தம். இங்கே பொறந்தவங்க நரகத்துக்குப் போக மாட்டாங்கங்கிறது நம்பிக்கை. இது எங்க ரெண்டு ஊருக்குமே பொருந்தும்! - ரெட்டை ஊர்களின் கதை சொல்ல ஆரம்பித்தார், தமிழின் முக்கியமான நவீன ஓவியர்களில் ஒருவரான வீர சந்தானம்.

 ''பச்சைப் பசேல்னு வயல்கள், அங்கங்கே குளம், வாய்க்கால்கள், ஊர் எல்லையில் ஆறு, தெருவுக்குத் தெரு கோயில்... தஞ்சாவூர் மாவட்டத்துக் கிராமங்களுக்கான இலக்கணம் மாறாத கிராமங்கள் திருநாகேஸ்வரமும் உப்பிலியப்பன்கோவிலும். திருநாகேஸ்வரத்துல சிவன் ஆட்சி. உப்பிலியப்பன்கோவிலில் பெருமாள் ஆட்சி. கோயில்கள்தான் ரெண்டு ஊர்களுக்கும் அடையாளம்.

என் ஊர்!

அந்தக் காலத்துல நீங்க எங்க ஊர்ப் பக்கம் வந்திருக்கணும். நுழையும்போதே ஒரு வித்தியாசமான இசை உங்களைப் பிடிச்சுக்கும். நாகஸ்வரம், நட்டுவாங்கச் சாதகச் சத்தம், குயவர்கள் பானை தட்டுற சத்தம், தறிச் சத்தம்... எல்லாம் கலந்த இசை அது. ஊருக்குனு தனி மணமும் உண்டு. வயக்காட்டைக் கடக்கும்போது வருமே நெல் வாசம்... அதுவும் கோயில் வீதிகள்ல வர்ற மணமும் கலந்த வாசம்.

என் ஊர்!

ஊர்  கூடித் தேர் இழுக்குற கதை கேள்விப்பட்டு இருப் பீங்க. ஊர் கூடி வளர்த்த கதை கேள்விப்பட்டு இருக்கீங்களா? எங்க மண்ணுல பிறந்தாலே போதும், ஊரே காப்பாத்திடும். அப்படித்தான் இருந்துச்சு அந்தக் காலத்துல. கோயில் சோத்தைத் தின்னே பிழைச்ச எத்தனையோ ஜீவன்கள் உண்டு. என்னோட இளமைக் காலப் பசியைத் தீர்த்தது கூடக் கோயில் சோறுதான். சாவைக்கூட ஊர் பார்த்துக் கும். ஊர்ல சாவு விழுந்தா யாரும் வேலைக்குப் போகக் கூடாதுங்கிறது ஊர்க் கட்டுப்பாடு. எல்லாத்தையும் எல்லாரும் முன்னாடி நின்னு செஞ்சு முடிப்பாங்க.

ஒரே காவிரிதான். ஆனா, ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு ருசி. எங்க நட்டாத்துத் தண்ணி ருசியை எங்க ஊர்ல வெளையுற புடலையும் கத்திரியும் கொத்தவரையும் சொல்லும். உப்பிலியப்பன்கோவிலில் புரட்டாசி, பங்குனில விசேஷம். ரதம் ஓடும். திருநாகேஸ்வரத்துல கார்த்திகையில விசேஷம். தெருவடைச்சான் ஊர்வலம் நடக்கும். உப்பிலியப்பன்கோவிலில் மதுரை சோமு, சூலமங்கலம் ராஜ லட்சுமி, சீர்காழி கோவிந்தராஜன்னு கச்சேரிகள் அமர்க்களப்படும். திருநாகேஸ்வரத்துல குன்றக்குடி அடிகளார், வாரியார் சுவாமிகள், கீரன்னு சொற் பொழிவுகள் களைகட்டும்.  

எதையுமே கொண்டாட்டமாப் பார்க்குறவங்க எங்க ஊர்க்காரங்க. அட, சினிமாவை அப்போலாம் எப்படிப் பார்த்தோம் தெரியுமா? 'திரிபுரசுந்தரி டாக்கீஸ்’னு ஒரு அரங்கம் இருந்துச்சு. ராஜமாணிக்கங்கிறவர் நடத்தினார். போஸ்டர் ஒட்டுறதுல இருந்து படம் ஓட்டுறவரைக்கும் சகலமும் அவர்தான் பார்ப்பார். சாயங்காலம் படத்துக்குப் போனா வாசல்ல பேண்டு வாசிச்சு வரவேற்பாங்க. படம் போடுறதுக்கு முன்னாடி 'சுந்தரி...’ பாட்டைப் போட்டு விடுவாங்க. படம் முடியும்போது 'இன்று போய் நாளை வா...’! சின்ன வயசுல அங்க நான் போஸ்டர் எழுதுற வேலை செஞ்சேன். கூலி என்ன தெரியுமா? வருஷம் முழுக்க இலவச சினிமா.

அந்த நாள்ல எங்களோட இன்னொரு சந்தோஷம் பெத்தான் டீக்கடை. இரட்டைக் குவளை முறை புழங்குன காலகட்டத்துல எல்லோருக் கும் சரிசமமா பரிமாறினவர் பெத்தான். பெரியார் இந்தப் பக்கம் வரும்போது பெத்தான் டீக்கடைக்கு வராமப் போக மாட்டார்.

பத்மபூஷண் விருது வாங்கின வேதாந்தி ஸ்ரீராமதேசிகர், தமிழ் அறிஞர் வெள்ளைவாரணார், நாகஸ்வர வித்வான்கள் சின்னத்தம்பி, சின்னப்பா பிள்ளை, சினிமா இயக்குநர் திருமலை மகாலிங்கம், எம்.ஜி.ஆருக்கு டூப் போட்ட ரமணி... இவங்க எல்லாம் எங்க ஊர் சாதனையாளர்கள்.

என் ஊர்!

காலம் நம்மளை இந்தப் பட்டணத் துல போட்டுடுச்சு. ஊரை நெனைக் கையில கண் கலங்குது. ஊருக்கு ஒருவாட்டி போயிட்டு வரணும்!''

- சமஸ், படங்கள்: கே.குணசீலன், வீ.நாகமணி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு