Election bannerElection banner
Published:Updated:

பிரதமர் ஜெ!

அடித்துச்சொல்கிறார் திருச்சி ஆழ்வர்

##~##

மிழ்கூறு நல்லுலகத்துக்கு அரசியல் கணிப்புகளைக் கூற திருச்சியில் இருந்து ஒரு வெடிகுண்டு ஜோசியர் கிளம்பி இருக்கிறார். சுரேஷ் ஆழ்வர்! (அதென்ன 'ஆழ்வர்’? வித்தியாசமாக இருக்கிறதே என்கிறீர்களா... பெயர்க் காரணம் பின்னே!)

 ''பிரதமர் மற்றும் ஜனாதிபதி தகுதியும் அதற்கு உண்டான ஜாதக அமைப்பும் அமையப்பெற்றவர் நமது முதல்வர் ஜெய லலிதா. எண் கணித முறைப்படி இந்தியா என்பது எண் மூன்றைக் குறிக்கும். ஆகவே, இந்தியாவை ஆளக்கூடியவர்களின் பிறந்த தேதி அல்லது பிறந்த தேதி, மாதம், வருடம் மூன்றையும் கூட்டினால் வரக்கூடிய கூட்டுத் தொகை அல்லது பெயரின் கூட்டுத்தொகை... மூன்று அல்லது எட்டு வர வேண்டும் என்பது நியதி.

இதை நான் சும்மா சொல்லவில்லை. இதுவரையில் பிரதமர் மற்றும் ஜனாதிபதி களாக இருந்தவர்களின் பெயர்கள் மற்றும் பிறந்த நாட்களை எண் கணித முறைப்படி ஆராய்ந்து பார்த்துவிட்டுத்தான் சொல்கிறேன். ராஜீவ் காந்தி, இந்திரா காந்தி, பிரதீபா பாட்டீல், ஆர்.வெங்கட்ராமன்... இவர்கள் எல்லாம் எண் மூன்றைக் கொண்டவர்கள். சந்திரசேகர், பி.வி.நரசிம்ம ராவ், அடல்பிகாரி

பிரதமர் ஜெ!

வாஜ்பாய், மன்மோகன் சிங் இவர்கள் எல்லாம் எண் எட்டைக்கொண்டவர்கள். இங்கு இன்னொரு விஷயத்தையும் சொல்லியாக வேண்டும். எண் எட்டைக் கொண்டவர்களுக்கு, அவர்கள் ஆசைப்படாமலே உயரிய பதவிகள் தானாகத் தேடி வரும்! (அடடே...)

நமது முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் 24-2-1948. அதன் கூட்டுத்தொகை மூன்று. ஆகவே, அவர் பிரதமர் ஆவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அது மட்டும் இன்றி, அவரது பிறந்த நாளான 24 என்பது 6-ம் எண்ணுக்குரிய பலனைத் தரும். பொதுவாக, 6-ம் எண்காரர்கள் ராணுவ மேஜர் போன்ற உயரிய அதிகாரம் படைத்த பதவியில் இருப்பார்கள். திடமான முடிவுகளை எடுப்பார்கள்.

நமது முன்னாள் முதல்வர்கள் காமராஜர், அண்ணா ஆகியோர் 15-ம் தேதியில் பிறந்தவர்கள். கூட்டுத்தொகை ஆறு. ஜனாதிபதியாக இருந்த அப்துல் கலாமும் 15-ம் தேதியில் பிறந்தவர்தான். பிரதமராக இருந்த இந்திரா காந்தி பெயரின் கூட்டுத் தொகையும் ஆறுதான். அவர்கள் எத்தனை திடமான முடிவுகளை எடுத்தார்கள் என்பதை நான் சொல்லி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது இல்லை''-என்று தனது கணிப்புகளை எடுத்துரைத்த சுரேஷ் ஆழ்வர், அடுத்து சில ஊர்களைப் பற்றிய பலன்களையும் சொன்னார்.

''இலங்கையில் இப்போது நடைபெறும் பிரச்னைகளுக்குக் காரணம் அதன் பெயர் ஸ்ரீலங்கா என்று இருப்பதுதான். அதன் கூட்டுத்தொகை ஒன்பது என்பதுதான் ரண களமான சூழ்நிலையை ஏற்படுத்துகிறது. அதன் பெயர் சிலோன் என்று இருந்தவரை எத்தனை அமைதியாக இருந்தது என்று அனைவருக்கும் தெரியும். அதேபோல் சிவகாசி என்ற பெயருக்கான கூட்டுத்தொகை யும் கெடுதலான பலனைக் கொடுக்கக்கூடியது. அதனால்தான் அந்த ஊரில் அடிக்கடி வெடி விபத்துகள் நடந்தன. இப்போது பெயரில் ஒரு 'ஏ’ கூடுதலாகச் சேர்த்து மாற்றி இருக்கிறார்கள். அதனால், முன்புபோல் பிரச்னைகள் இல்லை'' என்கிற சுரேஷ் ஆழ்வர், ஜோதிடத்தைத் தொழிலாகக்கொண்டவர் அல்ல; திருச்சி புத்தூரில் மளிகைக் கடை நடத்திவருகிறார்.

''நான் ப்ளஸ் டூ வரைக்கும் படிச்சிருக்கேன். குடும்பச் சூழலால் மளிகைக் கடைக்கு வந்துட்டேன். முதல்ல நான் நிறைய பிரச்னைகளைச் சந்திக்க வேண்டி இருந்தது. அப்ப என் பெயரை ஆராய்ந்தபோதுதான், சுரேஷ் என்ற பெயருக்கான கூட்டுத்தொகை எண் கணித முறைப்படி கெடுதலான பலனைத் தரக்கூடியதுனு தெரிஞ்சுக்கிட்டேன். என் தாத்தா பெயரான ஆழ்வாரைப் பெயருக்குப் பின்னால சேர்த்துக்கிட்டேன். எண் ஒன்று வர வேண்டும் என்பதற்காக ஆழ்வார் என்பதை ஆழ்வர் என்று மாத்திக்கிட்டேன். அதன் பின்னர் வந்த பிரச்னைகள் எல்லாம் தானாகவே சரியானது. அப்போதுதான் மற்றவர்களின் பெயர்கள், பிறந்த நாட்களையும் ஆராய ஆரம்பித்தேன். நான் சொன்ன விஷயங்கள் சரியாக நடந்திருப்பதாக நண்பர்கள் சொன்னதை அடுத்தே, பிரபலங்கள் பற்றிக் கணிக்க ஆரம்பித்தேன். இப்போது முதல்வர் ஜெயலலிதாவைப் பற்றிக் கணித்த விவரங்களைக்கூட போயஸ் கார்டனுக்கு ஃபேக்ஸ் அனுப்பிவைத்திருக்கிறேன்'' என்ற சுரேஷ் ஆழ்வர், ''உங்க பிறந்த நாள் என்ன... அதோட பலனைக் கணிச்சுச் சொல்றேனே?'' என்று பேப்பரும் பேனாவுமாகத் தயாராக... எஸ்கேப்!

-ஆர்.லோகநாதன், படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு