Published:Updated:

என் ஊர்!

திராவிட கோட்டை குளித்தலை!

என் ஊர்!

திராவிட கோட்டை குளித்தலை!

Published:Updated:
##~##

''சுற்றியுள்ள ஊர்களுக்கு நடுவில் பள்ளத்தில் உள்ள ஊர் இது என்பதால் குழித்தலை  என்று அழைக்கப்பட்டது, காலப்போக்கில் மருவி குளித்தலை ஆகிவிட்டது. இதுதான் என் ஊரின் பெயர்க் காரணம். திராவிட இயக்கத்தின் கோட்டை என்றும் சொல்லலாம்'' என்று குளித்தலைபற்றிப் பேசத் தொடங்கினார் தி.மு.க-வின்  ஆரம்ப கால முன்னோடிகளில் ஒருவரும் எழுத்தாள ருமான பொற்செல்வி இளமுருகு.

 ''கி.பி. 12-ம் நூற்றாண்டு வரை மக்கள் வாழ்வதற்கான சூழல் இல்லாத ஊராகத்தான் இருந்திருக்கிறது குளித்தலை. அதன் பிறகு சோழர்கள் இப்போதைய தட்டையூரைத் (அப்போது தட்டைநாடு) தலைநகராகக்    கொண்டு ஆண்டனர். அவர்களால் கட்டப் பட்டதே அய்யர் மலை கோயில்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

என் ஊர்!

அய்யர் மலைக்குக் காகம் பரவாத மலை என்ற பெயரும் உண்டு. காகங்களுக்கு எதிரான உயிரினங்கள் இங்கு உலவுவதுதான் இதற்குக் காரணம் என்று புராணங்கள் கூறுகின்றன. இங்கு 50-க்கும் மேற்பட்ட கல் வெட்டுகள் உள்ளன. அவற்றில் கிராமி எழுத்து கள் பொறிக்கப்பட்ட ஒரு கல்வெட்டும் அடங்கும். எங்கள் ஊரின் பழமையான இன்னொரு கோயில் கம்பனேஸ்வரர்கோயில். ஆயிரம் ஆண்டுகள் வரலாறுகொண்டது இது.

என் ஊர்!

மங்கம்மாள், மீனாட்சி போன்ற பெண் அரசிகள் ஆண்ட பூமி இது. 1775-க்குப் பிறகு எங்கள் ஊர் ஆங்கிலேயர்கள் ஆட்சியின் கீழ் வந்தது. அவர்கள் காலத்தில்தான் 1920-ல் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தொடங்கப்பட்டது. தொடர்ந்து நாட்டாமை உயர்நிலைப் பள்ளியும் உதயமானது. எங்கள் ஊரின் கல்வி ஆதாரம் இந்த இரு பள்ளிகள்!

1956-57ல் நடந்த நங்கவரம் போராட்டம் குளித்தலை வரலாற்றில் முக்கியமானது.விவசாயத் தொழிலாளர்களைப் பண்ணை ஆண்டைகள் அடிமைகளாக வைத்திருந்த காலம் அது. இதைக் கேள்விப்பட்ட கலைஞர், விவசாயிகளுக்காகப் பண்ணையார்களிடம் கூலி உயர்வு கேட்டார். அவர்கள் தர முடியாது என மக்கள் மீது வன்முறையை ஏவ, தி.மு.க. அந்த முதலாளிகள் மீது மிளகாய்ப் பொடியைத் தண்ணீரில் கலந்து ஊற்றும் போராட்டத்தைத் தொடங்கியது. இந்தக் கலகத்துக்குப் பிறகே விவசாயிகள் பிரச்னை தீர்ந்தது. அவர்களின் உழைப்புக்கேற்ற கூலி கிடைக்க ஆரம்பித்தது.

தமிழகத்தில் தமிழ்தான் ஆட்சிமொழியாக இருக்க வேண்டும். சமூகத்தின் எல்லாச் செயல்பாடுகளிலும் தமிழ்  நடைமுறைக்கு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி குன்றக்குடி அடிகளார் தலைமையில் 1957-ல் இங்குதான் 'தமிழ் ஆட்சிமொழி மாநாடு’ நடந்தது. இப்படி தமிழ், தமிழர் நலன் சார்ந்த எவ்வளவோ விஷயங்களுக்கு அடித்தளம் அமைத்துக்கொடுத்த ஊர் குளித்தலை.

விவசாயத்தின் மகத்துவத்தால், இதுவரை தொழிற்சாலைகள் எட்டிப்பார்க்காத ஊர் எங்கள் ஊர். வாழை மற்றும் கரும்புச் சாகுபடியில் எங்கள் ஊர் தனித்துவம் வாய்ந்தது. கேரள மக்கள் குழாய்ப்புட்டு உணவுக்குத் தொட்டுச் சாப்பிடும் நேந்திரம் வாழைப்பழத்தைப்  பெரும் அளவில் ஏற்றுமதிசெய்வது நாங்கள்தான். பழங்கள் மாநிலம் கடந்தால், இந்த ஊர் வாழை இலைகளோ வெளிநாடுகளில் விற்பனையா கின்றன.

தமிழறிஞர்கள் கி.வா.ஜகந்நாதன், கடவூர் மணிமாறன், எழுத்தாளர்கள் ஏகாம்பரம், வையாபுரிச்சோழன், மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி சேது என்று குளித்தலையின் சான்றோர்களை அடுக்கிச் செல்லலாம்.

70 ஆண்டுகளுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட லட்சுமி திரையரங்கம்,  அதைத் தொடர்ந்துவந்த சண்முக நந்தன், பாலாம்பிகை திரையரங்குகள் எங்கள் பொழுதுபோக்குக் கூடங்கள். அந்த நாட்களில், படத்துக்குப் போய்விட்டு வரும் போது, சுப்பு ராமையர் கடையில் தோசையும் கேசரியும் சாப்பிட்டுத் திரும்பினால் அது பெரிய சந்தோஷம். காவிரி ஆற்றங்கரையில் நடக்கும் கடம்பர்கோயில் தைப்பூசத் திருவிழா எங்கள் ஊரின் மிகப் பெரிய கொண்டாட்டம். ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் கூடும் விழா இது.

என் ஊர்!

வயலாக இருந்தாலும் சரி, கோயிலாக இருந்தாலும் சரி, காவிரி சார்ந்த வாழ்க்கை எங்கள் ஊருடையது. ஆனால், மணல் கொள்ளை இப்போது காவிரியைத் தின்றுகொண்டு இருக்கி றது. மணலையும் ஆற்றையும் இழந்து குளித்தலை 'குழித்தலை’ ஆகிவிடுமோ என்ற அச்சத்துடன் ஊரைத் திரும்பிப்பார்க்கிறோம் நாங்கள்!'

- ஞா.அண்ணாமலை ராஜா, படங்கள்: ஜெ.வேங்கடராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism