Published:Updated:

ஆடோடி வாழ்க்கை!

ஆடோடி வாழ்க்கை!

ஆடோடி வாழ்க்கை!

ஆடோடி வாழ்க்கை!

Published:Updated:
##~##

''ம்மே... ம்மே...'' - சாலை முழுவதையும் ஆக்கிரமித்துச் செல்லும் ஆட்டு மந்தையின் சத்தம். ''ந்தா... ஹை... ஹை... டுர்ர்ர்ர்...'' - ஆளுயரக் கம்போடு சாலையின் இருபுறமும் ஆடுகளோடு அல்லாடிச் செல்லும் ஆட்கள். பின்னாலேயே ஓலையால் வேயப்பட்ட கூட்டைத் தூக்கிச்செல்லும் பெண்கள். இப்படி ஆடுகளோடு மல்லுக்கட்டும் கீதாரிகளின்  வாழ்க்கையை அறிய அவர்களோடு நடந்தோம். மாரிமுத்து பேசத் தொடங்கினார்.

 ''எங்களப் பத்திச் சொல்ல பெரிசா என்ன சாமி இருக்கு? ராமநாதபுரம், பரமக்குடினு வானம் பாத்த மண்ணுல பொறந்தவுக நாங்க. ராப்பகல்னு கண்ணு முழிச்சி ஆட்ட மேய்ச்சி வவுத்த கழுவுறோம். இந்தக் குலத்தொழிலை விட்டாலும் வேற வேலை தெரியாது நமக்கு. அதனால, போற எடமெல்லாம் பொறந்த ஊருன்னும் கெட போடுற நெலமெல்லாம் எங்க நெலமுன்னும் வாழ்க்கை நகருது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பயிரு பச்சை வெளையிற எடத்துலதானே எங்க பொழப்பைப் பாக்க முடியும்? அதனாலதான் கால்நடையாவே இதுகளை ஓட்டித் திரியுறோம். எனக்கு நாலு துண்டு ஆடுக நிக்கிது. ஒரு துண்டு ஆடுகனா நூத்தம்பது ஆடுகள்னு கணக்கு. ஒருத்தருகிட்ட ஐநூறு ஆடுக இருந்தா அதுல அஞ்சி மட்டும்தான் எரக்கிடா(ஆண் ஆடுகள்) நிக்கும். மிச்சம் எல்லாம் பிறுவக்குட்டிகளா (பெண் ஆடுகள்) இருக்கும். அதுக்குப் பொறவு போடுற கிடாக்குட்டியளை வித்துருவோம்.

ஆடோடி வாழ்க்கை!

எங்கிட்ட இருக்குற நாலு துண்டு ஆடுங்களை மட்டும் பத்திக்கிட்டு வர முடியாதுங்கிறதால, ஒத்தாசைக்கி பக்கத்துல இருக்கறவுக ஆடு களையும் பத்தியாறோம். முன்ன மாதிரி ரோட்டுல பயமில்லாம ஆட்டைப் பத்தியார முடியலை. காரு வண்டி பெருத்துப்போச்சி. கண்ணு மண்ணு தெரியாம ஓட்டியாராக. என்னதான் பார்த்துப் பார்த்து நாங்க ஆட்டை ஓட்டிப்போனாலும், சமயத்துல அடிபட்டுப் போவுதுங்க. எங்க கண்ணு முன்னாலயே துடிதுடிச்சி அதுக சாவுறதைப் பாத்தா பத்து நாளைக்கி பச்சத்தண்ணி உள்ளே எறங்காது.

எந்த ஊருல கெடை போட்டாலும் எல்லா ரும் ஒண்ணுசேர்ந்துதான் போடுவோம். ஒரு மா நெலத்துல ஒரு துண்டு ஆட்டை அடைய வெப்போம். அப்படியே பக்கத்து பக்கத்து நெலத்துக்காரவுககிட்டயும் பேசி அங்கனயே கெடை போட்டுட்டு, அந்த ஊரு முடிஞ்சதும் அடுத்த ஊருக்குக் கௌம்பிருவம்.   எங்கள் ளேயே வயசுல மூத்த ஆளைக் கீதாரின்னு சொல்லுவோம். அவருதான் எங்க நல்லது கெட்டது எல்லாம் பாத்துக்குவாரு. கெடை போடுறதுலருந்து பணம் வாங்கிப் பங்குப் போட்டுக் குடுக்குறவரைக்கும் அவரு சொல் படிதான் கேக்கணும்.

ஆடோடி வாழ்க்கை!

கெடை போடுறது பெரிசில்ல சாமி. ராத்தி ரியானா நாய், நரித் தொல்லை எங்கே பாத் தாலும் இருக்கும். அதுக்காவவே ஒத்தை ஆளு மொற வெச்சி ராக்கண்ணு முழிச்சிப் பாத்துக் கணும். இல்லைனா வாய்க்கு மாட்றதைத் தூக்கிட்டுப்போய்ப் பிச்சித் தின்னுடும். கெடை போடக் கௌம்பிட்டா அப்பறம் அவசர ஆத்திரத்துக்குக்கூட ஊரைப் பார்க்கப் போவ முடியாது. அஞ்சு மாசம் கழிச்சித்தான் ஊருக்குத் திரும்புவோம். அந்த நாளையில ஊருல நடக்குற நல்லது கெட்டதுகள்லதான் நாங்க போயிக் கலந் துக்குவோம். இப்பனாலும் பரவால்லை. ஊட்டுல இருக்கவுகளுக்கு முடியலைனா போனுல கூப்புட்டு சொல்லிர்றாக. அப்ப அப்படியா? எத்தனை மாசம் கழிச்சிப் போனாலும் அப்பதான் எதுவா இருந் தாலும் தெரிஞ்சிக்க முடியும்.

என்னதான் ஊருல வீடு வாசல்னு கட்டிவெச்சிருந்தாலும், நாங்க போற எடத்துல எங்க வீடு இந்தப் பனைமட்டைக் கூடுதான். சமைக்கிறது, சாப்புடுறது, ராப் படுக்கைனு எல்லாமே இதுக்குள்ளேதான். ராத்திரியில பூச்சி, பொட்டு வந்து கடிச்சா, எங்க கதி அதோகதிதான். ஆனாலும், இதுவரைக்கும் அந்த மாதிரியெல்லாம் நடக்கலை. எங்க குலசாமிதான் விஷம் தீண்டவுடாம எங்களைக் காப்பாத்துது.

எங்களோட பெரிய கஷ்டம் இந்த மழை நாள்ல இதுகளுக்குச் சீக்கு வந்து தொலைக்குறது. அப்ப நாங்க படுற பாடு அந்த ஆண்டவனுக்குதான் தெரியும். ஒரு ஆட்டுக்கு சீக்கு வந்துட்டா மத்த ஆட்டுக் கும் ஒடனே பரவிரும். அதனால, ஐநூறு ஆடுகள் நிக்கிற எடத்துல சீக்கு வந்ததை மட்டும் தனியாப் பிரிச்சிக் கூடையைப் போட்டு கவுத்து வெச்சிரணும். அதனால, மழை சீஸனுக்கு முன்னால ஆட்டு ரோமத்தை அறுத்துவுட்ருவோம். இல் லைனா ஈரம் கோத்துகிட்டு சீக்கு சீக்கி ரமாவே வந்துரும். இப்படியெல்லாம் பொத்தி பொத்தி வளக்குற ஆட்ட நாங்க திங்க மாட்டமுங்க. வெள்ளாடு வாங்கித்தான் திம்போம். வளர்த்த புளளைய இல்லையா. அதான் மனசு வராது!''

காதில் செருகி இருந்த பீடியை எடுத்துப் பற்ற வைத்துக்கொண்டே ஆட்களை விரட்டத் தொடங்குகிறார் மாரிமுத்து!

_ வீ.மாணிக்கவாசகம், சி.சுரேஷ்
  படங்கள்: கே.குணசீலன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism