Election bannerElection banner
Published:Updated:

என் ஊர் !

''காவிரி... இன்னொரு அம்மா!'' சமஸ்படங்கள்: கே.குணசீலன்

தில்லைஸ்தானம்

##~##

''திருவையாறு, திருப்பழனம், திருவேதிக்குடி, திருச்சோற்றுத்துறை, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, தில்லைஸ்தானம்... இந்த ஏழு ஊர்களையும் ஏழூர்னு சொல்வாங்க. எங்க ஊர் தில்லைஸ்தானம் ஏழாவது ஊர். அந்தக் காலத்துல திருநெய்தானம்னு பேர். தேவாரத்துலேயே பாடப்பட்ட தலம். 1,500 வருஷங்களுக்கு முன்னாடியே புகழ்பெற்ற தலமாக எங்க ஊர் இருந்திருக்கு!'' என்று வரலாற்றுப் பெருமைகளோடு தன் சொந்த ஊரான தில்லைஸ்தானம் பற்றிப் பேசத் தொடங்கினார் மூத்த இசைக் கலைஞரான ராம.கௌசல்யா. திருவையாறு இசைக் கல்லூரியின் முன்னாள் முதல்வர்.

''எங்க ஊர் பெருமையை நான் எப்படி வெளியாளுங்களுக்கு உணர்த்துறதுன்னு எனக்குத் தெரியலை. சரியாச் சொல்லணும்னா ஒரு குழந்தை சந்தோஷமா வாழ்றதுக்குப் பொருத்தமான ஊர்னு சொல்லலாம். குதிச்சுக் கும்மா ளம் போட ஆற்றங்கரை, ஓடியாடி விளையாட நெரிசல் இல்லாத தெருக்கள், ஒளிஞ்சுப் பிடிச்சு விளையாடுறதுக்கு ஏத்த வீடுகள்... எவ்வளவு பெரிய மழையிலும் எங்க ஊர்த் தெருக்கள்ல பொட்டுத் தண்ணீர் நிற்காது. அந்தக் காலத்துலேயே அப்படி ஒரு கட்டுமானத்தோட இந்த ஊரை அமைச்சு இருக்காங்க.

என் ஊர் !

காவிரிதான் எங்க உயிர்நாடி. பிறப்புல தொடங்கி வீட்டு விசேஷங்கள், கல்யாணம், பண்டிகைகள், திருவிழாக்கள்னு சாவு வரைக்கும் எல்லாமே காவிரியோடத்தான். காவிரியில புதுத்தண்ணி வர்றப்போ வீட்டுப் பெரியவங்க தண்ணிக்கு வழிபாடு நடத்தச் சொல்லிக் கொடுப்பாங்க. ஒரு தட்டுல வெத்தலைப் பாக்கு, தேங்காய், பழம், பூ, சந்தனம், குங்குமம், காதோலை கருகமணி மாலையோட ஆத்துல இறங்குவோம். தூரத்துல நுரைப் பொங்கும் தண்ணி தெரியும். 'அம்மாவை விழுந்துக் கும்பிட்டுக்கோ’னு சொல்லிட்டு பெரியவங்க கீழே விழ சின்னப் பிள்ளைகளும் விழுவோம். தண்ணீர் காலை நனைக்கும்போது அம்மா கை படற மாதிரி இருக்கும்.  காவிரி எங்களுக்கு இன்னொரு அம்மா!

எங்க ஊரோட அடையாளம் நெய்யடியப்பர் - பாலாம்பிகை திருக்கோயில். சின்ன ஊருக்கேற்ற பெரிய கோயில். வருஷம் முழுக்க ஏதாவது ஒரு உற்சவம் நடந்துகிட்டே இருக்கும். பெரியவங்களுக்குக் கோயில் போறது வழிபாடுன்னா, சின்னப் பசங்களுக்கு அது ஒரு விளையாட்டு. புளியோதரை, சுண்டல், பொங்கலை யாரு முதல்ல வாங்குறா, எவ்வளவு வாங்குறோம்கிற மாதிரியான விளையாட்டு. இந்த மாதிரி சின்ன ஊர்கள்லதான் கோயிலோட மக்களுக்கு இருக்கிற நெருக்கமான உறவை நீங்க பார்க்க முடியும். இன்னிக்கும் தில்லைஸ்தானத்தைச் சேர்ந்த யாருக்குக் கல்யாணம் நடந்தாலும் தவறாம சிவன் கோயிலில் அபிஷேகம், பெருமாள் கோயிலில் கருடசேவை, காளி கோயிலில் பூஜை பண்ணிடுவோம்.

ஏழூர் விழா எங்களுக்கு முக்கியமான விழா. ஏழூர்களைச் சேர்ந்த எல்லா சாமிகளும் ஒண்ணுசேர்ந்து திருவையாறுல தொடங்கி ஒவ்வோர் ஊராகக் கடைசியில் தில்லைஸ்தா னம் வந்து திருவையாறு போகும். அந்த நாட்கள்ல ஊரே விழாக் கோலம் பூண்டிருக்கும்.

எங்க ஊரோட தனித்துவமா நான் உணர்றது இந்த மக்களோட ரசனை. இங்கே எல்லோருக்குமே பாட்டு அத்துபடி. நல்ல ரசிகர்களா இருப்பாங்க. எங்களுக்குக் கல்வி தந்த ஸ்ரீராமகிருஷ்ணா நடுநிலைப் பள்ளியும் அதுக்கு ஒரு காரணம்னு சொல்லணும். வெறும் படிப்பைத் திணிக்காம வாழ்க்கையைக் கற்றுக் கொடுக்குற பள்ளிக்கூடம் அது.

என் ஊர் !

சுதந்திரப் போராட்டத்துல    தில்லைஸ்தானமும் பங்கு வகிச்சு இருக்கு. உப்பு சத்யாகிரகப் போராட் டத்துல முக்கியப் பங்கு வகிச்ச டி.எஸ்.எஸ்.ராஜன், சாம்பசிவ அய்யர், குஞ்சு மூணு பேரும் எங்க ஊர்க்காரங்க. தியாகராஜரோட முக்கியமான சீடரான ராம ஐயங்கார், எங்க ஊர்க்காரர். அவரோட சிஷ்யர்கள் பஞ்சு பாகவதரும் நரசிம்ம பாகவதரும்தான் தியாகராஜரோட கீர்த்தனைகளைப் பரப்பினவங்க. தியாகராஜரோட பஜனை மரபுப் பாடல்களை அச்சுக்குக் கொண்டுவந்தவர் நரசிம்ம பாகவதர். சேக்கிழார் அடிப்பொடி டி.என். ராமச்சந்திரன், காந்திய எழுத்தாளர் தி.ச.ராஜுவும் எங்க ஊர்க்காரங்கதான்.

என் ஊர் !

தில்லைஸ்தானத்தைத் தாண்டி எங்களுக்குப் பெரிய சந்தோஷம் இருக்கான்னு தெரியலை. அப்படிச் சொல்ல ணும்னா சின்ன சந்தோஷமா திருவையாறு ஜெயம்டாக்கீஸை யும் அசோகா அல்வாவையும் சொல்லலாம். அப்ப பெரிய சந்தோஷம் என்னன்னு கேட்குறீங்களா? சாயங்கால வேளை காவிரிக் கரை. சின்ன வயசுல அங்கே ஆடாத ஆட்டம் கிடையாது. இப்ப அதே கரையில ஒரு ஓரமா உட்கார்ந்து ஓடுற தண்ணியை அமைதியாப் பார்த்துட்டு இருக்கேன். அமைதி எவ்வளவு பெரிய சந்தோஷம் தெரியுமா?''

என் ஊர் !
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு