Election bannerElection banner
Published:Updated:

அண்ணாவை நெகிழவைத்த நாகூர் சலீம் !

கரு.முத்து படங்கள்: கே.குணசீலன்

நாகூர் என்றால் எல்லோருக்கும் தர்ஹாவும் ஹனீபாவும் நினைவுக்கு வருவார்கள். இன்னொருவரும் இருக்கிறார். அவர் நாகூர் சலீம்!

'மெட்டு கொடுத்தவுடன் திறமான வார்த்தைகளைக் கொட்டிக்கொடுக்கும் கவி அருவி’ என்று கவிஞர் மு.மேத்தாவால் பாராட்டப்பட்டவர். பாப்பாக்குடி, முத்துப்பேட்டை தர்ஹாக்களின் ஆஸ்தான கவிஞர். நாகூர் ஹனீபா, இறையன்பன் குத்தூஸ் ஆகியோரின் அவைக்களப் புலவர் சலீம்!

இதுவரை 7,000 பாடல்களை எழுதியவர். நாகூரில் தனது மகன், மகள்களோடு வசிக்கும் சலீமுக்கு, இப்போது வயது 76. ஆனால், 26 வயது உற்சாகத்துடன் பேசுகிறார்.

''15 வயதில் நாடகங்களை எழுதி நடத்தத் தொடங்கினேன். அப்போது 'சந்தர்ப்பம்’ என்னும் நாடகத்தில் இடம்பெறும் ஒரு பாட லைப் பாட நாகூர் ஹனீபாவிடம் கேட்டபோது, 'கண்ட பேர் பாடல்களை நான் பாடுவது இல்லை’ என்று சொல்லிவிட்டார்.

அண்ணாவை நெகிழவைத்த நாகூர் சலீம் !

அதே ஹனீபா ஒரு வருடக் காலத்துக்குள் என் வீட்டு கதவைத் தட்டி என்னை அழைத்தார். அப்போது ஈ.வி.கே.சம்பத்தும் கண்ணதாசனும் தி.மு.க-வில் இருந்து வெளியேறி இருந்த காலம். அவர்களைச் சாடும்படி ஒரு பாடல் கேட்டார் ஹனீபா. அப்போது எழுதிய பாடல்தான் இன்றுவரை தி.மு.க. மேடையில் ஒலிக்கும் 'வளர்த்த கடா மார்பில் பாய்ந்ததடா’ பாடல். அதற்குப் பிறகு கலைஞருக்காக 'கல்லக்குடி கண்ட கருணாநிதி வாழ்கவே’ பாடலின் சரணத்தை எழுதிய பின்பு தி.மு.க-வின் ஆஸ்தான கவிஞன் ஆகிவிட்டேன்.

அண்ணாவை நெகிழவைத்த நாகூர் சலீம் !

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அவர்களை எதிர்த்து எழுதிய பாடல்கள், அண்ணாவிடம் பெரும் பாராட்டுதல்களைப் பெற்றவை. 'கீழே இறங்கு... மக்கள் குரலுக்கு இணங்கு.  ஆண்டது போதும்... மக்கள் மாண்டது போதும்’ என்ற பாடல் வரிகளையும்  'சோறு போடாத சோம்பேறியே பதவி நாற்காலி உனக்கொரு கேடா? ஏறிய பீடத்தில் இருந்து சுவைத்திட இது உன் பாட்டன் வீடா?’ என்ற பாடல் வரிகளையும் அண்ணா சொல்லிச் சொல்லிப் பாராட்டுவார்.

அதுபோலவே விருகம்பாக்கம் மாநாட்டில் 'எம்.ஜி.ஆர். என்ற மக்கள் சக்தி’ என்று முதன் முதலில் பாடல் எழுதியதும் நான்தான்.

அண்ணாவை நெகிழவைத்த நாகூர் சலீம் !

அரசியல் மட்டும் அல்ல; சமயம், சினிமா என்று எல்லாத் துறைகளையும் பார்த்தாயிற்று. இப்போது சில சின்ன கனவுகள் இருக்கின்றன. நான் எழுதிய 'ஜமீலா’ சிறுகதையைத் திரைப்படமாக எடுக்கவேண்டும். நாகூர் ஆண்டவரைப் பற்றி சில நூறு பாடல்கள் எழுதவேண்டும். கர்னாடக சங்கீதத்தில் 100 பாடல்களாவது எழுத வேண்டும். அவ்வளவுதான்!'' என்கிறார் அடக்கமாக.

வாழ்த்துகள் கவிஞரே!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு