Published:Updated:

என் ஊர்!

பாலை மரம் பார்த்து இருக்கீங்களா?

என் ஊர்!

பாலை மரம் பார்த்து இருக்கீங்களா?

Published:Updated:
##~##

''சொந்த ஊருங்கிற பிரயோ கமே ரொம்ப அழகு. ஒரு மனுஷனுக்கு எந்த ஊர் சொந்த ஊர் ஆகுது? இப்படிச் சொல்லலாம். ஊர் வளர்த்து இருக்கணும். வளர்த்து இருக்கணும்னா எப்படி? இந்த உடம்புல ரத்தமும் சதையும் எப்படிப் பிணைஞ்சிருக்கோ, அப்படி ஊரோட மண்ணும் பண் பாடும் பிணைஞ்சி இருக்கணும். என் வாழ்க்கையில அப்படிப் பிணைஞ்ச ஊர், எங்க அம்மா ஊரான எடஅன்னவாசல். நான் வளர்ந்த, என்னை வளர்த்த மண்!'' - நெகிழ்ச்சியோடு திருவாரூர் மாவட்டம், எடஅன்னவாசலைப் பற்றிப் பேசத் தொடங்கினார் ம.இராசேந்திரன். தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்.

 ''இடம்காண்கோட்டை. இதுதான் எங்க ஊரோட ஆதிப் பெயர். எட மேலையூர், எடகீழையூர், எடஅன்னவாசல்... இந்த மூணு பகுதிகளும் சேர்ந்ததுதான் அன்றைய இடம்காண்கோட்டை. இதில், எடஅன்னவாசல்தான் மையப் பகுதி. சுத்துப்பட்டுக் கிராமங்களுக்கு ஒரு தலைநகரம் மாதிரி.

என் ஊர்!

தமிழர்களின் வரலாறு பல ஆயிரம் வருஷத்துக்கு முந்தி யதுனு பெருமைப் பேசுறோம். பல ஆயிரம் வருஷங்களுக்கு முந்தி எழுதிய இலக்கியங்களைப் படிக்கிறோம். இப்படிப் பல்லாயிர வருஷங்களுக்கு முந்தி இங்கு வாழ்ந்த முன்னோர்களும் நாம இப்ப வாழ்ற மண்ணுலதான் வாழ்ந்திருப்பாங்கன்னு என்னைக்காவது உணர்ந்திருப்போமா? எங்க ஊர் எனக்கு அதை அடிக்கடி உணர்த்தி இருக்கு.

என் ஊர்!

எங்க ஊரும் அதைச் சுத்தியுள்ள ஊர்களும் ஒரு போர்க் களமாக இருந்ததற்கான தடயங்கள் நிறைய இருக்கு. எங்க ஊருக்குப் பக்கத்தில் உள்ள கோவில்வெண்ணியில்தான் கரிகாற்சோழன் ரெண்டாயிரம் வருஷங்களுக்கு முந்தி சேர மன்னன் பெருஞ்சேரலாதனைத் தோற்கடித்தான்!

நம்முடைய திணைகள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை... எல்லாமே தாவரங்கள் அல்லது மரங்கள் பெயரைக் கொண்டவைதான். பாலை மரத்தை நீங்க பார்த்திருக்கீங்களா? எங்க ஊரின் தனி அடையாளம் அது. பாலைங்கிறது பாலைவனத்தைக் குறிக்கிறது. வறண்ட நிலத்தைக் குறிக்கிறது. ஆனா, அதுக்கு நேர் எதிரா பச்சைப் பசேல்னு இருக்கும் எங்க கிராமம். இங்கே எப்படி இந்த மரம்? பெரிய ஆய்வுக்கான களம் இது!

தெய்வத்தில் மூணு வகை உண்டு. குலதெய்வம், காவல்தெய்வம், ராஜதெய்வம். குலதெய்வமும் காவல்தெய்வமும் எல்லா ஊர்களிலும் இருக்கும். ராஜதெய்வம் நகரங்கள்ல, குறிப்பா தலைநகரங்கள்ல தான் இருக்கும். அந்தக் காலத்தில் ராஜதெய்வத் துக்கு எங்கெல்லாம் கோயில் இருந்திருக்கோ, அதை ஒட்டி இருக்குற இடம் சந்தையா இருந்தி ருக்கு. எங்க ஊர்ல மூணு தெய்வங்களும் உண்டு. எங்க ஊரோட ராஜதெய்வம் நாகநாதசுவாமி.  வருஷத்துல பத்து நாள் அந்தக் கோயில்ல நடக்கிற கந்தசஷ்டி விழா ஊரோட பெரிய கொண்டாட்டம்.

என் ஊர்!

எல்லா சாதிக்காரங்களும் அண்ணன், தம்பி, மாமன், மச்சான்னு வாழ்ற ஊர் இது. இப்பவும் எனக்கு நல்லா நினைவிருக்கு. வருஷத்தோட ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு பகுதி வெளி யாட்கள் வந்து போய்க்கிட்டே இருப்பாங்க. கீதாரிங்க, வாத்துக்காரங்க, குறி சொல்றவங்க, குடுகுடுப்பைக்காரங்க, பாத்திரத்துக்கு ஈயம் பூசுறவங்க, சைக்கிள் சுத்துறவங்க, பொம்மலாட் டம் நடத்துறவங்க... இதுல கவனிக்க வேண்டியது என்னன்னா... இவங்க எல்லாருமே ஒரு குறிப்பிட்ட காலம் வரை இங்கேயே தங்கி இருப்பாங்க. ஒரு கிராமத்துக்குள்ள சர்வ சாதாரணமா இப்படி வெளியாட்கள் வந்து, பல நாட்கள் தங்கி தொழில் பண்ணிட்டுப் போக முடியாது. அப்படித் தங்கிப் போக முடிஞ்சதுன்னா அது இணக்கமான சூழலுக்கான அடையாளம்!

திராவிட இயக்கம் இங்கே பெரிய அளவுல பரவினதுக்கு இதுகூட காரணம்னு சொல்லலாம். பெரியாருக்குத் தஞ்சை மாவட்டத் தளபதியா இருந்த எடகீழையூர் க.நல்லதம்பி, தி.மு.க-வில் முக்கியப் பங்கு வகிச்ச சு.நாராயணசாமி, முன் னாள் அமைச்சர் அழகு. திருநாவுக்கரசு, முன்னாள் எம்.எல்.ஏ. ராஜமாணிக்கம்... இவங்க எல்லாம் எங்க ஊர்க்காரங்கதான்.

பத்திரிகைகள் எல்லாம் ஊருக்குள்ள வராத காலம். அப்ப டீக்கடை வெச்சிருந்த சின்னபிள்ளை தேவர், மன்னார்குடிக்குப் போயிட்டு வர்றவங்ககிட்ட பத்திரிகை வாங்கிட்டு வரச் சொல்வார். வாங்கிட்டு வர்ற பத்திரிகையை எங்களை மாதிரி படிக்கிற பசங்க கூடி நிற்கிற ஊர்க்காரங்களுக்குப் படிச்சுக் காட்டணும். ஊர்க்காரங்க விஷயம் தெரிஞ்சவங்களா இருக்கணுங்கிற உணர்வு, ஆர்வம். இதே உணர்வும் ஆர்வமும் ஊருல உள்ள ஒவ்வொருத்தர் நல்லது கெட்டதுலேயும் எல்லோ ருக்கும் இருக்கும்.

ஊருல எவ்வளவோ மாற்றங்கள் நடந்துருக்கு. ஊரைவிட்டு என்னைப் போல எவ்வளவோ பேர் வெளியே போய்ட்டாங்க. ஆனா, இந்த உணர்வும் ஆர்வமும் எல்லார்க்கிட்டேயும் அப்படியேதான் இருக்கு!''

- சமஸ்
படங்கள்: கே.குணசீலன், வீ.நாகமணி