என் விகடன் - சென்னை
என் விகடன் - மதுரை
என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - திருச்சி
என் விகடன் - கோவை
Published:Updated:

கல்லைத் தூக்கிக்கோ கல்யாணம் கட்டிக்கோ!

மேலதேமூத்துப்பட்டி அலேக்

புதுக்கோட்டையில் இருந்து மதுரை செல்லும் சாலையில் இருக்கிறது, நமணசமுத்திரம். இங்கு இருந்து அரை கி.மீ. தொலைவில் மேலதேமூத்துப்பட்டி. ''இன்னமும் எங்க ஊரில் கல்லு தூக்குனாத்தான் கல்யாணம்!'' என்கிறார்கள் இந்த ஊர் இளந்தாரிகள்!

கல்லைத் தூக்கிக்கோ கல்யாணம் கட்டிக்கோ!
##~##

ஊரின் காவல் தெய்வமான அய்யனார் கோயில் திடலில்  கிடக்கிறது அந்தக் கல். ''என்ன எடை இருக்கும்?'' என்ற நம்மிடம், ''அது இருக்கும் 100 கிலோ. யாரு எடை போட்டுப் பார்த்தா?'' என்றவாறே அருகில் வந்தார் ஊர்ப் பெரியவர் ராமு.  

''எனக்கு இப்ப 75 வயசு. எனக்கு விவரம் தெரிஞ்ச காலத்துல இருந்தே இந்தப் பழக்கம் எங்க ஊர்ல இருக்கு. அய்யனார் கோயில் திருவிழா வைகாசியில நடக்கும். ஒன்பது நாள் திருவிழாவுல, நாலாம் நாளும் எட்டாம் நாளும் இந்தக் கல்லைத் தூக்குறப் போட்டி. கல்லைச் சும்மாச்சுக்கும் தூக்குனா மட்டும் போதாது. தூக்கித் தோள்ல வெச்சுக்கிட்டு, கோயிலைச் சுற்றி வரணும். இடையில இந்தக் கல்லைக் கீழே போட்டா, நம்ம சோலி முடிஞ்சுது!

கல்லைத் தூக்கிக்கோ கல்யாணம் கட்டிக்கோ!

திருவிழாவுல ஏகப்பட்ட பொம்பளப் புள்ளய நிக்கும். எங்க ஊரு சனமுன்னாலும் பரவாயில்லை. மேல தேமூத்துப்பட்டி, கீழதேமூத்துப்பட்டி, சிவபுரம், எலங்குடிப்பட்டினு நாலு ஊரு மனுச மக்க சேர்ந்து இந்தத் திருவிழாவ நடத்துவாக. அதனால, நாலு ஊரு பொண்டுப் புள்ளய இங்க கூடி நிக்கும். அதுகளும் யாரெல்லாம் கல்லைத் தூக்குறாகனு பார்த்துக்கிட்டே நிக்கும். அதுக்காகவே மல்லுக்கட்டி தூக்குற ஆளும் உண்டு. உசுரக்கொடுத்து தூக்கி கை, கால்ல போட்டுக் கிட்ட ஆளுகளும் உண்டு. ஆனா, கல்லைத் தூக்கினாத்தான் ஆம்பளை!'' என்றார் ராமு.

சுற்றித் திரண்டு இருந்த ராக்கு, செல்வகுமார், சுரேஷ்  ஆகியோரிடம் பேச்சுக்கொடுத்தோம். ''கோயில் திருவிழாவில் ஒரு பக்கம் பெண்கள் கும்மி அடிச்சு குலவைப் போட்டுட்டு இருப்பாக. இந்தப் பக்கம் இளைஞர்கள் கல்லைத் தூக்கிட்டுக் கோயிலைச் சுற்றி வந்தா ஐம்பது ரூபாய் பரிசுனு மைக்ல விளம்பரப்படுத்து வாக. நாலு ஊரு பசங்களும் ஒண்ணுகூடினா கேக்கவா வேணும்? சுயமரியாதையைக் காப்பாத்திக்கவாவது கல்லைத் தூக்கிருவோம். இந்தக் கல்லைத் தூக்கினாலே, 'புள்ளைக்கு கல்யாண ஆசை வந்துருச்சுடோய்’னு சொந்தபந்தங்களும் புரிஞ்சுக்கிட்டு மளமளனு கல்யாண வேலையைத் தொடங்கிடுவாங்க. 17, 18 வயசுல கல்லைத் தூக்கிப் பார்க்க ஆரம்பிப்போம். 20 வயசுல கைக்கு அகப்பட்டுரும். அப்புறம் என்ன? டண்டணக்கா டணக்குணக்காதான்!'' என்றனர்.

கல்லைத் தூக்கிக்கோ கல்யாணம் கட்டிக்கோ!

பேசிக்கொண்டு இருக்கும்போதே, ''இந்தக் கல்லை யாரெல்லாம் தூக்குகிறீர்கள்?'' என்று நாம் கேட்க, ஓர் இளைஞர் கல்லோடு மல்லுக்கட்டத் தொடங்கினார். தொடர்ந்து மற்றவர்களும் வரிசையாகக் கைகளில் மண்ணைத் தேய்க்க ஆரம்பித்தனர். வயது வித்தியாசம் இல்லாமல் ஆளாளுக்குத் தூக்கிவிட்டு, ''கல்லைத் தூக்கிட்டோம், பொண்ணு எங்கே?'' என்று கேட்க... வுடு ஜூட்!

கல்லைத் தூக்கிக்கோ கல்யாணம் கட்டிக்கோ!
கல்லைத் தூக்கிக்கோ கல்யாணம் கட்டிக்கோ!
  • கரூர் மாவட்ட பெரியார் திராவிடர் கழகச் செயலாளர் தனபால்... சாதி மறுப்பு, மத மறுப்புத் திருமணங்களுக்கு ஆதரவானவர். இதுபோன்ற திருமணங்களைப் பெற்றோரின் எதிர்ப்புகளைச் சமாளித்து நடத்திவைப்பதில் சாதுர்யமான இவர்தான், இந்தப் பகுதி காதலர்களின் ரட்சகன். 1968-ல் ஆரம்பித்து சராசரியாக இரண்டு மாதத்துக்கு ஒருமுறை காதல் திருமணம் நடத்திவைத்திருக்கிறாராம்!

- வீ.மாணிக்கவாசகம்  
படங்கள்: பா.காளிமுத்து