Published:Updated:

தூண்டில் சொர்க்கம் !

கரு.முத்துபடம்: கே.குணசீலன்

##~##

காவிரி டெல்டா விவசாயிகளின் பொழுதுபோக்குகளில் ஒன்று... தூண்டில் மீன்பிடி. ஒரு நாள் விவசாயிகளுடன் மீன் பிடிக்கக் கிளம்பினோம்.

கொள்ளிடம் அருகில் உள்ள இச்சிலடி கிராமம். விவசாயி வீரசெல்வம் இரண்டு ரூபாய்க்கு நரம்பு, இரண்டு ரூபாய்க்குத் தூண்டில் முள், ஆக மொத்தம் நான்கு ரூபாய்க்குத் தளவாடச் சாமான்கள் வாங்கிக்கொண்டார். அதை, மரத்தில் ஒடித்த ஒரு சிறுகம்பில் கட்டித் தூண்டில் தயார் செய்துகொண்டு கிளம்பினார். கோரைத் தண்டு தக்கையானது. அவரு டைய வழியையே பின்பற்றினார்கள் அவருடைய நண்பர்கள் ராமமூர்த்தியும் தியாகராஜனும். மூன்று பேரும் வாய்க் காலைத் தேடிப் போகிறார்கள்.

கண்ணில்பட்ட  குளங்கள் எல்லாவற் றையும் ஒதுக்கிவிட்டு, பெரும் வேகத்தில் சுழித்துக்கொண்டு ஓடும் வாய்க்காலைத் தேடிப் போனார்கள். ''தண்ணி அதிகமா வர்றதால குளத்தில் இருக்கிற மீன் எல்லாம் தண்ணியோட போக்கில் போயிடும். அதனால் குளத்தில் தூண்டில் போடுவது வீண். எல்லா இடத்தில் இருந்தும் அடிச்சுக் கிட்டு வர தண்ணி வடிகாலுக்குப் போற இடத்தில் தூண்டில் போட்டாதான் பெரிய மீனா மாட்டும்'' என்றார் வீரசெல்வம்.

அவர்கள் விரும்பியபடி இருந்தது கடப்படி வாய்க்கால். ஆச்சாள்புரம், ஆரப்பள்ளம், முதலைமேடு, அனுமந்தபுரம், மாங்கனாம்பட்டு ஆகிய கிராமங்களில் இருந்து வரும் எல்லா தண்ணீரையும் வடிகாலுக்குக் கொண்டுசேர்க்கும் வாய்க்கால் அது. அருகிலேயே மண்வெட்டியால் குப்பையைத் தோண்டி, மண்புழுக்களைப் பிடித்து வைத்துக்கொள்கிறார்கள். வாய்க்காலை ஒட்டி இருக்கும் ஒரு மதகுக் கட்டையின் அருகில் வரிசைகட்டி அமர்ந்துகொண்டார்கள் மூன்று பேரும்.

தூண்டில் சொர்க்கம் !

இருப்பதிலேயே பெரிய புழுவாகப் பார்த்து எடுத்து தூண்டில் முள்ளில் கோத்து, வாய்க்காலில் தூக்கிப் போட்டார் தியாகராஜன். போட்ட வேகத்திலேயே தூண்டிலில் இருந்தத் தக்கை தண்ணீருக்குள் இழுபட்டது. பட்டென்று தூண்டிலைத் தூக்கினார் தியாகராஜன். சிறிய ஜிலேபி மீன் மாட்டி இருந்தது. மீனை லாகவமாக எடுத்து பைக்குள் போட்டுக்கொண்டு, இன்னொரு புழுவை மாட்டி திரும்பவும் தூண்டிலைத் தூக்கி வாய்க்காலில் போட்டார். இந்த முறையும் ஜிலேபிதான்.

ராமமூர்த்தியும் வீரசெல்வமும் கொஞ்சம் தள்ளிப்போய்த் தூண்டிலைத் தண்ணீரில் வீசினார்கள். அவர்களுக்கும் ஜிலேபி மாட்டுகிறது. ''குரவை, கெழுத்தி, சென்னல், உளுவை, மடவானு பல வகை மீனும் கிடைக்கும். குரவையும் விறால் மீன் போலதான். சாப்பிட நல்ல ருசியா இருக்கும். ஆனா, முள்ளுதான் தொல்லை. விறால் விக்கிற விலையில அதை எல்லாம் வாங்க முடியுமா? இப்படித் தூண்டில் போட்டு கிடைக்கிற குரவைதான் எங்களுக்கு விறால். பிடிக்கிற எந்த மீனையும் விக்க மாட்டோம். அப்படியே குழம்புதான். மொளகாத் தூளும் புளியும் இருந்தாப் போதும்.  பெரிசா வேற எதுவும் தேவையில்லை'' என்கிறார் ராமமூர்த்தி.

தூண்டில் சொர்க்கம் !

தூண்டிலில் சிக்கிய மீன்களை வீட்டுக்குக் கொண்டுசெல்வதற்கு முன்பாகவே குழம்புக் கரைசல் தயாராக இருக்கிறது. ''வீட்டுக்கு வந்தோமா, சுத்தம் பண்ணினோமா, குழம்புல போட்டோமானு இருக்கணும். மீனு உடம்புல உசுரு ஒட்டிக்கிட்டு இருக்கும்போதே குழம்புல விழுந்துட்டுன்னா அந்த ருசியே தனி'' என்று சொல்லிவிட்டு வெற்றிலைப் பாக்கு வாங்கச் சென்றார்கள் மூவரும். மீன் குழம்புச் சோறும் கொஞ்சூண்டு தயிர்ச்  சோறும் சாப்பிட்டப் பிறகு, வாய் மணக்க வெற்றிலைப் பாக்குப் போட்டால், 'அடடா... அதுதான் சொர்க்கம்’ என்கிறார்கள் கோரஸாக.

பின்குறிப்பு: இந்தச் சொர்க்கம் தூண்டில் மீன்களில்தான் இருக்குமாம். ஒரு முறை நீங்களும்தான் தூண்டில் போடுங்களேன்!

அடுத்த கட்டுரைக்கு