Published:Updated:

இட்லி மேளா!

இட்லி மேளா!
பிரீமியம் ஸ்டோரி
இட்லி மேளா!

கிச்சன் பேஸிக்ஸ்: விசாலாட்சி இளையபெருமாள்படங்கள் & வீடியோ: லக்ஷ்மி வெங்கடேஷ்

இட்லி மேளா!

கிச்சன் பேஸிக்ஸ்: விசாலாட்சி இளையபெருமாள்படங்கள் & வீடியோ: லக்ஷ்மி வெங்கடேஷ்

Published:Updated:
இட்லி மேளா!
பிரீமியம் ஸ்டோரி
இட்லி மேளா!

`இது என் வீட்டுக்காரருக்கு ஒப்புக்காது’, `இது என் பொண்ணுக்கு ஒப்புக்காது’ என்று இல்லத்தரசிகள் உணவுப்பொருள்கள் பட்டியல் ஒன்றை வைத்திருப்பார்கள். எல்லோர் உடலும் ஏற்றுக்கொள்ளும் சில உணவுகளில் இட்லிக்குத்தான் முதலிடம். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் எளிதில் ஜீரணமாகி, உடல்நலத்துக்கும் உறுதுணை புரிகிறது இட்லி. தொடர்ந்து சாப்பிட்டால் உடல்நலத்துக்கு ஊறுவிளைவிக்கும் `ஜங்க் புட்’ அதிக அளவில் உட்கொள்ளப்படும் இந்தக் காலகட்டத்தில், உணவு மேஜையில் இட்லியின் முக்கியத்துவம் உணரப்பட வேண்டியது.

இந்த `கிச்சன் பேஸிக்ஸ்' பகுதியில் கடந்த சில இதழ்களாக `இட்லி மேளா’ களைகட்டி வருகிறது. இந்த இதழில் ராமசேரி இட்லி, தட்டே இட்லி, மங்களூர் - கடுபு என மேலும் பல இட்லி வகைகள் அணிவகுக்கின்றன...

இட்லி மேளா!

கொள்ளு இட்லி வீடியோவை, உங்கள் மொபைலில் இந்த QR code-ஐ ஸ்கேன் செய்து காணலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கோவன் - ஸன்னாஸ் இட்லி

அரிசி மற்றும் உளுந்தை நன்கு கழுவி ஒன்றாக மூன்று மணி நேரம் ஊறவைத்துச் சற்று கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். தேங்காய் மற்றும் உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும். ஒரு டேபிள்ஸ்பூன் வெதுவெதுப்பான நீரில் சர்க்கரை மற்றும் ஈஸ்ட் சேர்த்து ஐந்து நிமிடங்கள் நுரைக்கவிடவும். இதை மாவுடன் சேர்த்துக் கலந்துகொள்ளவும். 4 – 5 மணி நேரம் புளிக்க வைக்கவும். மாவை எண்ணெய் தடவிய சிறிய கிண்ணங்களில் முக்கால் பாகம் வரை நிரப்பி இட்லிப் பாத்திரத்தில் வைத்து, ஆவியில்  வேகவைக்கவும். ஓரிரு நிமிடங்கள் ஆறவிட்டுப் பிறகு எடுத்துப் பரிமாறவும்.

இட்லி மேளா!
இட்லி மேளா!

காஞ்சிபுரம் இட்லி வீடியோவை, உங்கள் மொபைலில் இந்த QR code-ஐ ஸ்கேன் செய்து காணலாம்.

காஞ்சிபுரம் இட்லி

பச்சரிசி, உளுத்தம்பருப்பு மற்றும் வெந்தயம் மூன்றையும் நன்கு கழுவி ஒன்றாக மூன்று மணி நேரம் ஊறவைத்து கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். இதனுடன் மிளகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை, சுக்குத்தூள், உப்பு சேர்த்து, பிறகு நெய் மற்றும் தயிர் சேர்த்துக் கலந்து ஐந்து முதல் ஆறு மணி நேரம் புளிக்கவைக்கவும். பின்னர் மந்தாரை இலை அல்லது வாழையிலையை மூங்கில் குடலையில் இட்டு அதில் மாவை ஊற்றிக்கொள்ளவும். மூங்கில் குடலை இல்லை என்றால் உயரமான டம்ளர்களில் அல்லது கப்புகளில் ஊற்றி இட்லிப் பாத்திரத்தில் வைத்து வேகவைக்கவும். வெந்த இட்லியை ஒரு குச்சியால் அடி வரை குத்திப் பார்க்கவும். குச்சியில் மாவு ஒட்டாமல் இருந்தால் இட்லி வெந்துவிட்டது என்று அர்த்தம். இட்லி வெந்ததும் கொஞ்ச நேரம் ஆறவைத்துக் கவிழ்த்தால், காஞ்சிபுரம் இட்லி தயார்.

இட்லி மேளா!
இட்லி மேளா!

ஓட்ஸ் ரவா இட்லி வீடியோவை, உங்கள் மொபைலில் இந்த QR code-ஐ ஸ்கேன் செய்து காணலாம்.

ரவா இட்லி, ராகி ரவா இட்லி, கோதுமை ரவா இட்லி, மக்காச் சோளம் ரவா இட்லி, ஓட்ஸ் ரவா இட்லி செய்ய தேவையான இதர பொருள்கள்...

புளித்த கெட்டித் தயிர் – ஒரு கப்

முந்திரி – 5 (மிக சிறிய துண்டுகளாக உடைத்துக் கொள்ளவும்)

கடுகு -  ஒரு டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்

கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்

பச்சை மிளகாய் - ஒன்று

தோல் சீவிய இஞ்சி – ஒரு அங்குலம் (மிகவும் பொடியாக நறுக்கவும்)

கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு

சமையல் சோடா – கால் டீஸ்பூன்

எண்ணெய், உப்பு - தேவையான அளவு

காய்கறி சேர்க்க விருப்பப்பட்டால், கால் கப் துருவிய கேரட் அல்லது கோஸ் சேர்த்துக்கொள்ளலாம்.

இட்லி மேளா!

செய்முறை: வாணலியில் சிறிதளவு எண்ணெயைச் சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, முந்திரி தாளிக்கவும். பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். காய்கறி சேர்ப்பதாக இருந்தால், அவற்றையும் சேர்த்து வதக்கி, ஒரு பவுலுக்கு மாற்றிக்கொள்ளவும். சிறிதளவு எண்ணெயில் ரவையை மிதமான சூட்டில் நன்கு வாசனை வரும் வரை நிறம் மாறாமல் வறுத்து காய்கறி கலவையுடன் சேர்க்கவும். ஆறிய பிறகு தயிர், சமையல் சோடா, உப்பு, கொத்தமல்லித்தழை மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கலந்து, அரை மணி நேரம் ஊறவிடவும். பிறகு தேவைபட்டால் மீண்டும் தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்துக்கு கரைத்துக்கொள்ளவும். இட்லிப் பானையில் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவைக்கவும். இட்லித் தட்டில் மாவை ஊற்றி 10 – 15 நிமிடங்கள் வேகவைக்கவும்.

இந்த முறையைப் பின்பற்றி ரவா இட்லி, ராகி ரவா இட்லி, கோதுமை ரவா இட்லி, மக்காச் சோளம் ரவா இட்லி, சிறுதானியம் ரவா இட்லி செய்யலாம்.

குறிப்புகள்:

*
ராகி ரவா இட்லி செய்வதற்கு வெறும் வாணலியில் ராகி மாவு சூடு ஏறும் வரை வறுத்துச் சேர்க்கவும்.

சிறுதானியம் எதுவாக இருந்தாலும் அவற்றை மிக்ஸியில் ரவை போல பொடித்து, சிறிதளவு எண்ணெயில் மிதமான சூட்டில் நன்கு வாசனை வரும் வரை நிறம் மாறாமல் வறுத்துச் சேர்க்கவும்.

* ஓட்ஸ் இட்லி செய்யும்போது சமையல் சோடாவுக்குப் பதிலாக ஃப்ரூட் சால்ட் பயன்படுத்தி வார்க்கவும். ஓட்ஸை வெறும் வாணலியில் நன்கு வாசம் வரும் வரை நிறம் மாறாமல் வறுத்து மிக்ஸியில் ரவை போல பொடித்துக்கொள்ளவும். மாவைக் கலந்து ஐந்து நிமிடங்கள் மட்டும் வைக்கவும். இட்லிப் பானையில் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். ஓர் ஈடு இட்லி வார்ப்பதற்குத் தேவையான அளவு மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு அதில் கால் டீஸ்பூன் ஃப்ரூட் சால்ட் சேர்த்து, அதன் மேலே ஒரு டீஸ்பூன் தண்ணீர்விட்டுக் கலந்துகொள்ளவும். உடனடியாக இட்லித்தட்டில் ஊற்றி மூடிவைத்து 12-15 நிமிடங்கள் வேகவிடவும். மூடியைத் திறந்து, வெந்த இட்லியை ஒரு குச்சியால் அடி வரை குத்திப் பார்க்கவும். குச்சியில் மாவு ஒட்டாமல் இருந்தால் இட்லி வெந்துவிட்டது என்று அர்த்தம். இட்லிகளை எடுத்துச் சூடாகப் பரிமாறவும்.

இட்லி மேளா!
இட்லி மேளா!

ராமசேரி இட்லி வீடியோவை, உங்கள் மொபைலில் இந்த QR code-ஐ ஸ்கேன் செய்து காணலாம்.

ராமசேரி ஸ்பெஷல் இட்லி மிளகாய்ப் பொடி

தேவையானவை:

அரிசி – ஒன்றரை கப்

உளுத்தம்பருப்பு - கால் கப்

காய்ந்த மிளகாய் – 15-20

மிளகு - 2 டேபிள்ஸ்பூன்

சீரகம் - 2 டேபிள்ஸ்பூன்

பெருங்காயம் – ஒரு டேபிள்ஸ்பூன்

எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை: சிறிதளவு எண்ணெயில் மிதமான சூட்டில் உளுத்தம்பருப்பு, பெருங்காயம் மற்றும் காய்ந்த மிளகாயை நன்கு நிறம் மாறும் வரை தனித்தனியாக வறுத்துக்கொள்ளவும். அரிசியை நன்கு பொரிந்து வரும் வரை வறுத்துக் கொள்ளவும். மிளகு மற்றும் சீரகம் நன்கு வாசம் வரும் வரை வறுத்துக்கொள்ளவும். அனைத்தையும் சேர்த்து, உப்பு போட்டுச் சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

ராமசேரி இட்லி ரகசியம்!

பாலக்காடு அருகிலுள்ள சிறு கிராமம் ராமசேரி. வரித்தடங்கள் பதிந்த ஊத்தப்பம் போன்ற புதுமையான வடிவமே ராமசேரி இட்லியின் சிறப்பு. நான்கு நாள்கள் வரை கெடாது என்பதால், இந்த இட்லி பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சென்னை, கோழிக்கோடு, எர்ணாகுளம், கொல்லம், ஹைதராபாத், பெங்களூரு மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் பறக்கிறது. தேங்காய்ச் சட்னி, மிளகாய்ச் சட்னி, உருளைக்கிழங்கு ஸ்டூ ஆகிய மூன்றும் தொடுகைகள். கூடவே ராமசேரி ஸ்பெஷல் பொடி.

இட்லி மேளா!

எப்படிச் செய்வது? ஒரு மண்பானையில் பாதியளவு தண்ணீர் ஊற்றி அதன் வாய்ப்பகுதி முழுக்க குறுக்கும் நெடுக்குமாகக் கயிற்றால் கட்டவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் அதற்கு மேல் ஒரு ஈரமான வெள்ளைத்துணி விரித்து, வழக்கமான இட்லியை விட அகலமாக ஊற்றவும். அதன் மேலே ஓர் உயரமான பாத்திரத்தை வைத்து மூடவும். ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வரை வேகவைக்கவும்.

இன்னொரு முறை:
இடியாப்பம் வார்க்கும் மூங்கில் அல்லது ஓலைத் தட்டைப் பயன்படுத்தவும். இட்லிப் பானையின் உள்ளே அடியில் குக்கர் அடித்தட்டு அல்லது ஸ்டீல் தட்டை வைக்கவும். இது மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றவும். அதன் மேலே ஸ்டீம் தட்டு அல்லது துளைகள் உள்ள ஏதேனும் ஒரு தட்டை வைக்கவும். மூங்கில் அல்லது ஓலைத் தட்டின் மேல் சுத்தமான வெள்ளைத்துணியை நனைத்துப் பிழிந்து போட்டு இட்லிப் பானையில் வைக்கவும். புளித்த மாவை அதிகம் கிளறாமல் ஒரு பக்கமாகவே மாவை எடுத்து, ஊற்றி, சற்றுப் பரப்பிவிட்டு, மூடிவைத்து ஐந்து நிமிடங்கள் வேகவிடவும். துணியோடு இட்லியை எடுத்து மற்றொரு தட்டில் கவிழ்த்துவிடவும். கையில் கொஞ்சம் தண்ணீர் எடுத்துத் துணியின் மேலே தெளிக்கவும். பிறகு துணியை மெள்ள எடுக்கவும். இட்லியின் மேல் நல்லெண்ணெய் தடவி, சுடச்சுடப் பரிமாறவும். ராமசேரி இட்லியை, ராமசேரி ஸ்பெஷல் இட்லி பொடியுடன் (செய்முறை பக்கம் 45-ல்) தேங்காய் எண்ணெய் சேர்த்துப் பரிமாறவும். 

குறிப்பு: இட்லி வார்க்கும்போது சிறிது தேங்காய்ப்பால், ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்த்தால் மிக மிருதுவாக இருக்கும்.
 

இட்லி மேளா!
இட்லி மேளா!

மசாலா ரவா இட்லி வீடியோவை,  உங்கள் மொபைலில் இந்த QR code-ஐ ஸ்கேன் செய்து காணலாம்.

தட்டே இட்லி

கொடுக்கப்பட்டுள்ள பொருள்களை இட்லிக்கு அரைப்பது போல சேர்த்து அரைத்துப் புளிக்க வைக்கவும். எண்ணெய் தடவிய தட்டில் ஊற்றி இட்லிப் பாத்திரத்தில் வைத்து வேக வைக்கவும். வெந்ததும் ஓரிரு நிமிடங்கள் ஆறவிட்டுப் பிறகு எடுத்துப் பரிமாறவும்.

இட்லி மேளா!
இட்லி மேளா!

மக்காச் சோளம் இட்லி வீடியோவை,  உங்கள் மொபைலில் இந்த QR code-ஐ ஸ்கேன் செய்து காணலாம்.

மங்களூர் - கடுபு

கொடுக்கப்பட்டுள்ள பொருள்களை இட்லிக்கு அரைப்பது போல அரைத்துப் புளிக்க வைத்துக்கொள்ளவும். வாழையிலை, மஞ்சள் இலை, தாழை இலை (screwpine leaves) அல்லது பலா இலையில் கிண்ணங்கள் செய்து, அவற்றில் எண்ணெய் தடவி, மாவை ஊற்றி, இட்லி பாத்திரத்தில் வைத்து வேகவைக்கவும். வெந்ததும் இட்லி பானையில் இருந்து வெளியே எடுத்துச் சற்று ஆறியதும், இட்லிகளை இலையில் இருந்து பிரித்து எடுத்துப் பரிமாறவும்.

இட்லி மேளா!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism