Published:Updated:

அது ஒரு கனாக் காலம்!

அது ஒரு கனாக் காலம்!

##~##

நாடக ஆசிரியர், முத்தமிழ் வித்தகர், இசைவாணர் என்றெல் லாம் ஒரு காலத்தில் திராவிட இயக்கத் தலைவர்களால்கொண்டாடப் பட்டவர் யோகராஜன். திருச்சி மாவட்டம், திருவெள்ளறை கிராமத்தில் ஹோம் ஒன்றில் வசித்துவரும் யோகராஜனை ஒரு காலை வேளையில் சந்தித்தேன்.

''இதுவரைக்கும் 2 ஆயிரம் பள்ளிக்கூடங்கள், பல கல்லூரிகள், கோயில் திருவிழாக்கள், கல்யாண நிகழ்ச்சிகளில் இசை நிகழ்ச்சி நடத்தி இருக்கேன். இசை நிகழ்ச்சின்னா ஏதோ சினிமாப் பாட்டு பாடுறதுனு நினைச்சுக்காதீங்க. இலக்கியம், சுயசிந்தனை, அறிவுரைகள், நகைச்சுவைனு எல்லாமே கலந்து இருக்கும். நான் பாடினா பயலுக எல்லாம் குஷியாகிடுவானுங்க.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
அது ஒரு கனாக் காலம்!

என்னோட 19 வயசில் நாடகம் எழுத ஆரம்பிச்சேன். எல்லாமே சமூகச் சீர்த்திருத்தம், மூடநம்பிக்கை எதிர்ப்பு நாடகங்கள்தான். அப்புறம் மதுரை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சினு போய், நாடகத்தில் ஆர்வம் உள்ளவங்களைப் பிடிச்சு நாடகம் சொல்லிக் கொடுத் தேன். அங்கங்க ஒவ்வொரு குழு வெச்சு இருந்தேன். எல்லா ஊருக்கும் போய் நாடகம் போடுவோம். இது வரைக்கும் 55 நாடகங்களுக் குக் கதை, வசனம் எழுதி, இயக்கி இருக்கேன். பலருக் கும் நாடகம் கத்துக்கொடுத்து இருக்கேன்.

அண்ணா ஆட்சி மலர்ந்த நேரம். அண்ணா, அன்பில் தர்மலிங்கம்னு பெரிய பெரிய ஆட்கள் மேடையில் இருக் காங்க. '67 அழைக்கிறது... அறிஞர் அண்ணா ஆட்சி நிலைக்கிறது’னு பாடினேன். அங்கே இருந்த கூட்டம் எல் லாம் ஒரே உற்சாகமாகி கத்த ஆரம்பிச்சுட்டாங்க. அண்ணா ரொம்ப சந்தோஷப்பட்டாரு. நிகழ்ச்சி முடிஞ்சதும் என்னை ஆரத் தழுவிப் பாராட்டினார் அண்ணா. வானத்தின் உச்சிக்கே போனது மாதிரி இருந்துச்சு. அப்புறம்தான் இசையில் முழு மூச்சோட ஐக்கியமாயிட்டேன்.

அதுக்கப்புறம் மதுரை தமிழ்ச் சங்கத்தில் நடந்த தமிழிசை விழாவில் 5 நிமிடங்களில் 50 ராகங்களில் பாடினப்ப 'இசைவாணர்’ பட்டம் கொடுத்தாங்க. 1972-ல் திருச்சியில் எம்.ஜி.ஆர். தலைமையில் ஒரு பெரிய தமிழிசை விழா நடந்துச்சு. அதில் எம்.ஜி.ஆர். என்னை 'முத்தமிழ் வித்தகர்’னு பாராட்டினார். 1990... இசை, நாடகம்னு நான் ரொம்ப பிஸியா இருந்த காலம். அப்பத்தான் கிருஷ்ணகிரியில 'உலகத் தமிழ்க் கவிஞர்கள் மாநாடு’ நடந்துச்சு. அதில் கலந்துகிட்ட ஆயிரக்கணக்கான கவிஞர்களில் 100 கவிஞர்களுக்கு 'கவிமாமணி’ விருது கொடுத்தாங்க. அதில் நானும் ஒருத்தன். கலைஞர்தான் அந்த விருதைக் கொடுத்தார்'' என்று அந்தக் காலத்தைப் பேசிக்கொண்டு இருந்தவர், ''ஆனா, அதெல்லாம் இப்ப கனாக் காலமாயிடுச்சு தம்பி'' என்று நிகழ்காலத்தில் நுழைந்தபோது, நமக்கும் மனம் கனத்தது!

-த.கார்த்திக் ராஜா
படம்: ர.அருண் பாண்டியன்