Published:Updated:

பழங்கள் சாப்பிட உகந்த நேரம் காலையா, மாலையா, எப்போது சாப்பிடுவது நல்லது?

பழங்கள் சாப்பிட உகந்த நேரம் காலையா, மாலையா, எப்போது சாப்பிடுவது நல்லது?
பழங்கள் சாப்பிட உகந்த நேரம் காலையா, மாலையா, எப்போது சாப்பிடுவது நல்லது?

மிகப்பெரிய விருந்து அது. சாப்பிடும் நேரத்தில் எண்ணமுடியாத அளவுக்கு விதம்விதமான உணவு ரகங்கள், பஃபே முறையில் நமக்காக அடுக்கப்பட்டிருக்கின்றன. திரைப்படத்தில் சொல்வதைப் போல ஊர்வன, பறப்பன, நீந்துவன… என எல்லா வகையறாக்களையும் நின்றபடி, நடந்தபடி ஒரு கட்டுக் கட்டிவிட்டு சிறிது இளைப்பாறலாம் என்று நினைத்தால், நம் கண்முன்னே அடுத்த ஆச்சர்யம்..!ஐஸ்கிரீமைக் கொண்டு மெழுகிய பழத்துண்டுகள், நம்மைப் பார்த்து `டிக் டிக்…' என ஆசையாகக் கண்சிமிட்டும் வகையில் வாசலுக்கு அருகே வைக்கப்பட்டிருக்கும். 

`ஏற்கெனவே அளவுக்குமீறி சாப்பிட்டுவிட்டாய், இதற்குமேல் எதுவும் வேண்டாம்’ என மூளை எச்சரிக்கை சிக்னல் கொடுத்தாலும், ஆசை  நம்மை விடாது. `ஆஹா பழங்கள்… அதுவும் பனிக்கூழ் (ஐஸ்கிரீம்) ஒழுக… பழத்துடன் முடித்தால்தான் விருந்து விருந்தாக இருக்கும்’ என்ற நவீனக் கண்ணோட்டத்தில் தவறுக்குமேல் தவறுகள் தொடரும். முதல் தவறு அளவுக்கு மீறி சாப்பிடுவது… இரண்டாவது தவறு உணவின் இறுதியில் பழங்களைச் சாப்பிடுவது. கூட்டிக் கழித்துப் பார்த்தால், கலோரிகளின் எண்ணிக்கையும் உச்சத்தைத் தொட்டுவிடும்; பழங்களால் கிடைக்க வேண்டிய முழுப் பலன்களும் கிடைக்காது. 

`ஆதாம் ஏவாள் சுவைத்த அந்தக் கனி…’ `சுட்ட பழம் வேண்டுமா, சுடாதா பழம் வேண்டுமா' என்ற கேள்விக் கனி, `அவ்வைப் பாட்டி பெற்ற நெல்லிக் கனி…’, `கடவுளர்களுக்கு இடையே குடும்பச் சண்டை உண்டாக்கிய கனி…’  எனப் பழங்கள் சார்ந்த பல்வேறு செய்திகள் நம்மிடம் உண்டு. பழங்களைத் துணைக்கு வைத்துக்கொண்டேதான் நமது வரலாறும் பயணித்திருக்கிறது. பழங்களின் அருமை பெருமைகளை இப்போது ஓரளவுக்கு உணரத் தொடங்கிவிட்ட நாம், பழங்களை முறையாகச் சாப்பிடுகிறோமா? விடை தேடுவோம்… 

உணவுக்கு முன் இனிப்பு (பழங்கள்): ஒருகாலத்தில் `இனிப்பு’ என்ற பிரிவுக்குள் பழங்களும் அடக்கம். தேன், பனைவெல்லத்தைத் தாண்டி, பழங்களில் இருக்கும் பழச் சர்க்கரையையும் இனிப்பாகவே ஏற்றுக்கொண்டனர் நமது முந்தைய தலைமுறையினர். ஆனால் இன்றோ இனிப்பு என்றால், கலர் கலராக காட்சி தரும் செயற்கைக் கலவைகள் சேர்க்கப்பட்ட பண்டங்கள்தாம் என்று மூளையின் மேற்பரப்பில் அச்சிடப்பட்டுவிட்டது. பழங்கள் என்னும் இனிப்பை, உணவுக்கு முன்பு எடுத்துக்கொள்ளலாமா? இல்லை உணவுக்குப் பின்பா! என்ற சந்தேகம், பலருக்கும் ஏற்படத் தொடங்கியிருப்பது ஆரோக்கியமான விஷயமே. 

பொதுவாக இனிப்புச் சுவையை உணவுக்கு முன்பாக அமைத்துக்கொள்வதே நமது மரபு. அந்தவகையில் பழங்களை உணவுக்கு முன்பு சிறிதளவு எடுத்துக்கொள்ளலாம். உணவின் தொடக்கத்தில் எச்சில் சுரப்பை வரவழைத்து செரிமானத்தைத் தூண்டும் `இனிப்புக் கருவி’ பழங்களாக இருக்கட்டும். தலைவாழை இலையில் முதலில் வைக்கப்படும் இனிப்புத் துண்டுக்குப் பதிலாக, ஒரு பலாச்சுளையோ, நான்கைந்து திராட்சையோ, சிறிது மாதுளை முத்துகளோ இடம்பெறட்டும். அதிலிருக்கும் இனிப்புச் சுவையை உணர்ந்துவிட்டு, உணவை அனுபவியுங்கள். இலையில் வைக்கப்படும் ஒரு ஸ்வீட்டுடன் திருப்தியடையாமல், `இன்னொரு ஸ்வீட் சேர்த்து வைப்பா’ என்று சர்வரிடம் கேட்டு வாங்கி, முழு உணவைச் சாப்பிடும் முன்பே, கலோரிகள் உச்சத்தைத் தொட்டுவிடும் நிகழ்வுகள்தாம் இன்றைக்கு அதிகம் நடக்கின்றன. 

இடை உணவாக ஆரோக்கியமற்ற நொறுக்குத் தீனிகளுக்கு மாற்றாக பழங்களைச் சுவைக்கலாம். உணவைச் சாப்பிட்டதும் பழங்களைச் சாப்பிடும்முறை செரிமானத்தில் பாதிப்பை உண்டாக்கும். மேலும் பழங்களின் மூலம் கிடைக்கவேண்டிய ஊட்டங்களும் பலன்களும் முழுமையாகக் கிடைக்காது. பொதுவாக விரைவில் செரிமானமாகிவிடும் பழங்கள், மற்ற உணவுகளோடு சேர்ந்து செரிமானத்துக்கு ஆட்படும்போது, செரிமானமடைய கூடுதல் நேரம் எடுத்துக்கொள்கின்றன. மேலும் உணவின் மூலம் கிடைத்த சர்க்கரையுடன் பழத்தின் மூலம் கிடைக்கும் சர்க்கரையும் கூட்டு சேர்ந்து, ரத்தச் சர்க்கரையின் அளவை விரைவாக அதிகரிக்கும். (உணவோடு பழங்கள் – அதிஉணவு)

ஒரு தட்டு நிறைய பழத்துண்டுகளை மட்டும் எடுத்துக்கொள்வதாக இருந்தால், உணவுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு அல்லது சாப்பிட்ட ஒரு மணி நேரம் கழித்து சுவைக்கலாம். இடை உணவாக, காலை 11 மணி… மாலை 4-5 மணி அளவில் ருசிக்கலாம்.

காலையில் பழங்கள்: `இரவு சாப்பிட்டதும் சில வாழைப் பழங்களை வாயில போட்டாதான், அடுத்த நாள் மலம் முறையாக வரும்’ என்று சொல்பவர்கள் பலர். ஆனால் சாப்பிட்டு முடித்து ஒரு மணி நேரம் கழித்து பழம் சாப்பிடுவதுதான் முறை. மூன்று வேளை உணவுகளின் செரிமானத்துக்கு இடையூறு செய்யாமல், பழங்களை மென்று சாப்பிட்டாலே, அதிலுள்ள நார்ச்சத்து மலத்தை எளிமையாக்கும். ஒரு வேளை உணவைப் பழங்களாகவே எடுத்துக்கொள்ளலாம் என முடிவு செய்தால், உங்கள் தேர்வு காலை வேளையாக இருக்கட்டும். 

எப்படிச் சாப்பிடலாம்: பலாப் பழம் சாப்பிட்டால் உண்டாகும் மந்த உணர்வைத் தடுக்க, அதனுடன் தேன் சேர்த்துக் கொள்ள வேண்டும். கொய்யாப் பழம் சாப்பிடும்போது, தொண்டை கரகரப்பது போலத் தோன்றினால், இருக்கவே இருக்கிறது மிளகு. வெள்ளரிப் பழம் மற்றும் விளாம்பழத் தசையுடன் பனைவெல்லம் சேர்த்துச் சாப்பிட்டால், சுவை அதிகரிக்கும்; வயிற்று உபாதைகள் மறையும். கொட்டையுள்ள மாதுளையும் திராட்சையுமே முழுப் பலன்களைக் கொடுக்கும். ஹைபிரிட் ரகங்கள் சுவை கொடுக்குமே தவிர, சத்துகளைக் கொடுக்காது. ஆரஞ்சு ரகப் பழங்களை அதிலிருக்கும் நார்ச்சத்துடன் முழுமையாகச் சாப்பிடவேண்டும். 

சிறுவர்களுக்கான பழ உணவுகள்: பழங்களைப் பதப்படுத்தி, அதில் வெள்ளைச் சர்க்கரை, கிரீம், ஜாம்… ஆகியவற்றைச் சேர்த்து செய்யப்படும் பேக்கரியின் `பழ-சிற்றுண்டி’ ரகங்கள் தவிர்க்கப்பட வேண்டியவை. பழங்களின் இயற்கைத் தன்மையை அதிகம் சிதைக்காமல் செய்யப்படும் சிற்றுண்டி உணவுகள் நம்மிடையே அதிகம். கிஸ்மிஸ், முந்திரி, பேரீச்சை, அன்னாசி, திராட்சை போன்றவற்றுடன் பனைவெல்லம் சேர்த்து உருட்டப்பட்ட `பழ உருண்டை…’ பழத் துண்டுகளோடு தேன் ஊற்றிய ஃபுரூட்-சாலட் போன்றவை உடலுக்குத் தேவையான ஆரோக்கியத்தை இலவசமாக வழங்கக்கூடியவை. பள்ளி செல்லும் சிறுவர்களின் `லன்ச் – பாக்ஸில்’ இவை இடம்பெறட்டும். பள்ளி முடிந்து சோர்வாக வீடு திரும்பும் குழந்தைகளுக்கு அன்புடன் பரிமாறப்படும் சிற்றுண்டியாகவும் பழ உணவுகள் இருக்கட்டும். 

பழச்சாறு எப்போது, முழுப் பழங்கள் எப்போது: `ஒரு மனிதனுக்குத் தேவையான சர்க்கரையின் அளவைப் பழங்களிலிருந்தே எடுத்துக்கொள்ளலாம்’ என்கிறது ஓர் உணவு நூல். சுவையூட்டிகள் சேர்க்கப்பட்டு, பதப்படுத்தப்பட்ட பானங்களையும் அளவுக்கு மீறிய சர்க்கரை சேர்க்கப்பட்ட பன்னாட்டுக் குளிர்பானங்களையும் முற்றிலுமாக தவிர்த்துவிட்டு, உடனடி ஆற்றல் கொடுக்கும் சர்க்கரைச் சுரங்கங்களான பழங்களை எடுத்துக்கொள்ளலாம். வெயில் காலங்களில் மட்டும், நீரிழப்பை ஈடுகட்ட பழச்சாறுகளைப் பருகலாம். பழச்சாறுகளில் வெள்ளைச் சர்க்கரைக்குப் பதிலாக நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம். மற்ற காலங்களில் பழங்களை ருசித்து மென்று சாப்பிட்டால்தான், அவற்றில் பொதிந்து கிடக்கும் நார்ச்சத்தும் ஊட்டங்களும் நம்மிடம் முழுமையாகத் தஞ்சமடையும்.

பழங்களைச் சாப்பிடுவதால் உள்ளுறுப்புகளின் செயல்பாடு அதிகரிக்கும். மூளையின் செயல்திறன் கூடும். தேகத்தின் மினுமினுப்பைக் கூட்டும். ஆனால் அதன் பலன்களைப் பெற, அதை எப்படிச் சாப்பிடுகிறோம், எந்த அளவில் சாப்பிடுகிறோம் என்பது மிக முக்கியம். `அற்றால் அளவறிந்து உண்க…’ என்ற குறள் கூறும் தத்துவத்தின்படி பழங்களையும் தேவையானஅளவு பயன்படுத்துவதுதான் நல்லது. பருவ காலத்தில் இயற்கையாக விளையும் பழங்களைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிட்டால், வாழ்க்கைப் பருவமும் அதிகரிக்கும். பழங்களை வெட்டியவுடன் சாப்பிடுவது நல்லது. அவற்றை வெட்டி, குளிர்சாதனப் பெட்டியில் வைத்து சில நாள்கள் கழித்து சாப்பிடுவது முறையல்ல! 

பாட்டில்களிலும், டப்பாக்களிலும் அடைக்கப்பட்ட பழச்சாறுகளைக் கண்டால் தூரமாக விலகிவிடுங்கள். பாலையும் பழங்களையும் கைகளில் ஏந்தி வந்தாலும், பாலுடன் அனைத்துப் பழங்களின் சேர்க்கையும் பொருந்தாது என்பதைக் கவனத்தில் கொண்டு, பாலுடன் பழங்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். பழங்கள் பற்றி அதிகம் பேசும் சித்த மருத்துவம், விளாம்பழத்தை மட்டும் உணவுக்கு முன்போ அல்லது பின்போ சாப்பிடலாம் என்ற குறிப்பை வழங்குகிறது. 

சர்க்கரை நோயாளிகள் பழங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்பது, நமது சமூகத்தில் நிலவும் தவறான நம்பிக்கை. தினமும் சில துண்டுகள் கொய்யா, ஆப்பிள், கொஞ்சம் மாதுளை ஆகியவை அவர்களுக்குத் தேவையான ஊட்டங்களைக் கொடுக்கும். நாவல் பழம் சர்க்கரை நோயாளிகளுக்காகவே இயற்கையால் படைக்கப்பட்ட பிரத்தியேகப் பழமாகும். பழங்களைச் சாப்பிடலாம் என்பதற்காக ஒரே நேரத்தில் வயிறுநிறைய மா, பலா, வாழை என்ற முக்கனிக் கூட்டணியைச் சுவைத்தால் சர்க்கரைகூடத்தான் செய்யும். பழங்களைப் பொறுத்தவரை கட்டுப்பாடு மிகவும் அவசியம்.

கூகுளைத் தட்டிப்பார்த்தால், `ரேஸ்பெர்ரிகளும், ஸ்டிராபெர்ரிகளும்தான் உயர்ந்த பழங்கள்’ எனும் முடிவு அதிகமாக வெளிவருவதைப் பார்க்கலாம். உங்கள் சுற்றுச் சூழலையும், வாழ்க்கைச் சூழலையும் நினைத்து, மனதில் குடிகொண்டிருக்கும் கூகுளைத் தட்டிப் பாருங்கள். கொய்யாவும், விளாம்பழமும், நெல்லியும்தான் உயர்ந்தது என்பதை ஆழமாக உணர்த்தும்.