"நீரால் அமைந்தது என் ஊர்!"

''திருச்சியில் இருந்து கரூர் போகும் சாலையின் வழியான பயணம் ரொம்பவே ரம்மியமானது. திரும்பிய பக்கம் எல்லாம் காவிரியோ, தென்னந்தோப்புகளோ, வாழைத் தோட்டங்களோ கண்களில் நிறையும். அதிலும் எங்கள் ஊரான சிறுகமணி இன்னமும் அழகு. அன்னை காவிரி ஒருபுறம், பச்சைப்பசேல்  வயல்கள் ஒருபுறம்... பார்ப்பவர் எவருக்கும் ஒரு கன்றுக்குட்டி போல் துள்ளித் திரியும் பரவசத்தைத் தரும் ஊர் என் ஊர்'' - சிறுகமணியின் அழகை வர்ணிக்க ஆரம்பித்தார் மூத்த இசைக் கலைஞர்களில் ஒருவரான அருணா சாய்ராம்.

"நீரால் அமைந்தது என் ஊர்!"
##~##

''சிறுகமணியின் வரலாற்றைவிடவும் அதைப் பற்றிச் சொல்லப்படும் கதைகள் சுவாரஸ்யமானவை. ஒருகாலத்தில் மாந்திரீகர்கள் நிறைய பேர் இந்த ஊரைக் கைப்பற்றிவிட்டார்களாம். இதனால் பேய் - பிசாசு, செய்வினை என்று பயத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள் எங்கள் ஊர் மக்கள். அப்போது கேரளத்தில் இருந்து வந்த ஒரு நல்ல மாந்திரீகர் அவர்களை எல்லாம் தன்னுடைய வல்லமையால் துரத்தி அடித்தாராம். அதற்குப் பின் பக்த சிரோன்மணிகள் நிறைய பேர் வாழும் ஊராக மாறியதாம் எங்கள் ஊர். இந்தக் கதையில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறதோ தெரியாது. ஆனால், இங்கு பழமைவாய்ந்த மலையாள சாமிக் கோயில் இருக்கிறது.

சின்ன ஊர்தான். ஆனால், நான்கு முக்கியமான கோயில்கள் இங்கே

உண்டு. அனந்தபத்மநாபசுவாமி கோயில், பக்தவத்சலேஸ்வரர் கோயில், புற்றுமாரியம்மன் கோயில், மலையாள சாமி கோயில். இந்த நான்கு கோயில்களையும் தாண்டியும் எங்களுக்கு ஒரு தெய்வம் உண்டு. அது அன்னைக் காவிரி. காவிரியின் கிளை நதியான குரம்புக் காவிரிதான் எங்களுடைய வாழ்வும் வளமும். இதுதவிர, ஊரில் வீட்டுப் பயன்பாட்டுக்காக குடியிருப் புக்குப் பின்புறம் அய்யன் வாய்க்கால் என்று ஒரு வாய்க்கால் உண்டு. பேட்டைவாய்த்தலைதான் எங்களுடைய சந்தையூர். எங்கள் ஊரின் நேந்திரம் பழங்கள், நாட்டுக் கத்திரிக்காய், இளநீர் எல்லாம் பேட்டைவாய்த்தலையில் இருந்து கேரளம் வரை ரொம்பவே பிரசித்தம்.

வேளாண்மையில் எங்கள் ஊருக்கு இருக்கும் சிறப்பால்தான் வேளாண் அறிவியல் நிலையத்தையும் கரும்பு ஆராய்ச்சி நிலையத்தையும் இங்கு அமைத்திருக்கிறார்கள்.

"நீரால் அமைந்தது என் ஊர்!"
"நீரால் அமைந்தது என் ஊர்!"

திருவிழா என்றால் எங்கள் ஊரில் அவ்வளவு விசேஷமாக இருக்கும். எங்கள் ஊரில் நடைபெறும் 'ராதா திருக்கல்யாணம்’ உற்சவம் ஒரு உண்மையான கல்யாணம் போலவே அத்தனை கோலாகலமாக இருக்கும். இந்த விழாவின்போது நடக்கும் கச்சேரி எங்கள் ஊரின் உன்னதமான இசை மரபை உலகுக்குச் சொல்லும். அதுவும் பாகவதர்கள் பெண்களைப் போல தங்கள் அங்கவஸ்திரத்தை மேலே அணிந்துகொண்டு கேரளத்தின் கைகொட்டிக்களி நிகழ்வுபோல விளக்கைச் சுற்றிப் பாடும் நிகழ்வை எப்போது நினைத்தாலும் எனக்குச் சிலிர்க்கும். இந்த மண்ணின் மகத்துவங்களை உலகுக்குச் சொன்ன நெரூர் சதாசிவ அவதூதர், ஆலத்தூர் சகோதரர்கள், ராமகோட்டி அய்யர் ஆகியோரின் நினைவு நெஞ்சை நெகிழச் செய்யும்.

செவிக்கு இவ்வளவு இனிமை சேர்ப்பவர்கள் நாக்குக்கு எவ்வளவு இனிமை சேர்ப்போம்? சாப்பாட்டு விஷயத்தில் எங்கள் ஊரை அடித்துக்கொள்ளவே முடியாது. எங்கள் ஊரின் விசேஷ பண்டம் செல்வரப்பம். அரிசியைப் பாதி உலர்ந்த நிலையில் கையால் பொடித்து, புளிக்காத பனைப் பாலில் இரு நாட்கள் ஊறவைத்து செய்யப்படும் அப்பம் இது. ஒரு வீட்டில் செய்தாலே ஊரே மணக்கும். ஊரே செய்தால்..?

என்ன சொல்ல என்ன சொல்ல. வார்த்தை இல்லை என் ஊரின் புகழைச் சொல்ல!''

"நீரால் அமைந்தது என் ஊர்!"
"நீரால் அமைந்தது என் ஊர்!"

- பூ.கொ.சரவணன்
படங்கள்: கே.ராஜசேகரன்,  ந.வசந்தகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு