Published:Updated:

நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது!

நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

''நல்ல காலம் பொறக்குது, நல்ல காலம் பொறக்குது...''

- மார்கழிக் குளிரில் வீதியில் சூழும் நாய்களைச் சர்வசாதாரணமாகக் கடந்துபோகிறது குடுகுடுப்பைக்காரர் ஆறுமுகத்தின் குரல்.

நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது!
##~##

''அம்மா, குடுகுடுப்பை வந்திருக்கேன், கை ரேகை பார்க்கிறது, ஜோசியம் பார்க்கிறது'' என்று அவர் குரல் கொடுக்க... உள்ளேயிருந்து வருகிறது அரிசி. அரிசி போட விருப்பம் இல்லாதவர்கள் காசு போடுகிறார்கள். அப்படித் தருகிறவர்களின் முகம் பார்த்தே அவர்களுக்குக் கைரேகையோ ஜோசியமோ பார்க்க முடியுமா என்று முடிவுசெய்துவிடுகிறார் குடுகுடுப்பை.

''அம்மா, உன் மனசுல ஒரு சஞ்சலம் இருக்கு, எல்லாம் இருந்தும் நிம்மதி இல்லை, ராத்திரி படுத்தா கண்ணுல தூக்கமில்லை, சரிதானா?'' என்று கேட்டதும் அசந்துபோகிறார் அந்தப் பெண்மணி. ''சரி'' என்று கை பார்க்க அமர்ந்தால், ''20 ரூபாய் கொடுக்கணும்'' என்று முதலிலேயே ஒப்பந்தம் போடப்படுகிறது.

சில பொதுவான விஷயங்களை மனோதத்துவ முறையில் சொல்லிவிடுவது தான் அடிப்படை உத்தி. 'கொஞ்ச நாளா உனக்கு ஒரு பிரச்னை இருக்கு’ என்று ஆரம்பிக்கிறார். இப்படி எல்லோருக்குமான பொதுவான பிரச்னைகளை வரிசைப்படுத்திச் சொல்லிவிட்டு ''எல்லாம் இன்னும் ரெண்டு மாசக் காலம்தான். மலைபோல வந்ததெல்லாம் பனிபோல் விலகிடும்'' என்று கடைசியாக இரண்டு மாத காலம் அவகாசம் கொடுத்துவிட்டு அடுத்த வீட்டை நோக்கி நகர்கிறார் குடுகுடுப்பை.

ஜோசியம் பார்க்கிறவர் பெண்ணாக இருந்தால் ''உன் வீட்டில் உள்ள கன்னித்தேவதை மஞ்சளாடைக்காரிதான் வீட்டை காத்துவருது. அதோட சேர்ந்து தலைப்பா கட்டின ஆண் தேவதை ஒண்ணு வெள்ளைக்குதிரையேறி வீட்டைக் காக்குது'' என்று சொல்கிறார்கள். அதுவே ஆண் என்றால், ''உனக்கு மங்கை ரெண்டு. ஒண்ணு தாலி கட்டிவெச்சிருக்கே. இன்னொன்னை மனசில வெச்சிருக்கே'' என்று சொல்கிறார்.

நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது!

''கடலூர் சானாரப்பாளையம்தான் சொந்த ஊர். அங்க ஒரு பத்து குடும்பம் இருக்கோம். நாலைஞ்சு பேர் சேர்ந்து ஒரு குரூப்பா கிளம்பி ஏதாவது ஒரு பக்கம் போய் அங்க இருக்கிற திடல்ல கேம்ப் போடுவோம். கேம்ப்னா கூடாரம், கட்டில், மெத்தைனு நினைச்சுக்காதீங்க. டிரஸ் வைக்கிறதுக்கு ஒரு பை. ராத்திரி சமைக்கிறதுக்கு கொஞ்சூண்டு பாத்திரம். காலையில மூணு மணிக்கெல்லாம் எந்திரிச்சி குளிச்சு முடிச்சிட்டு நெத்தி நிறைய பட்டை போட்டுகிட்டு, தோள்ல மாட்டின பையும் கையில ஒரு சுவடிக்கட்டும் கோலும் எடுத்துகிட்டு ஆளுக்கொரு திசையா பிரிஞ்சு நடப்போம்.

போகும்போதே ஒவ்வொரு வீட்டுக்கும் ஆத்தா ஜக்கம்மா எங்களுக்கு என்ன சொல்ல உத்தரவு போடுறாளோ, அதை அப்படியே சொல்லிட்டுப் போயிடுவோம். காலைல எந்த வீட்டுக்கு என்ன சொன்னோம்னு எங்களுக்கே தெரியாது, ஆனா காணிக்கை வாங்கப்போகும்போது அந்த வீட்டுக்காரங்க 'இப்படிச் சொன்னீங்களே அதுக்கு என்ன அர்த்தம்?’னு கேட்கிறப்பதான் என்ன சொன்னோம்கிறது எங்களுக்கே தெரியும். அப்புறம் அவங்க கையைப் பார்த்து பலன்கள் சொல்லுவோம்'' என்று தங்கள் தொழிலின் இயல்பை விவரிக்கிறார் ஆறுமுகம்.

நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது!

இரவு வேளைகளில் சாமத்தில் கோடாங்கி குறி சொல்லுவது கார்த்திகை முதல் மாசி மாதம் வரையிலும்தான். கார்த்திகையில் முதன்முதலில் குறி சொல்லப் போகும்போது சுடுகாட்டுக்குப் போய் ஜக்கம்மாவுக்குப் பூஜை செய்து அருள்வாக்கு சொல்ல இறங்கிவரும்படி வேண்டி வழிபாடு செய்துவிட்டே தொழிலைத் தொடங்குகிறார்கள்.

இந்த நான்கு மாதங்கள் தவிர மற்ற நாட்களில் குறி சொல்லுதல், ஜோசியம் பார்த்தல், கை ரேகை பார்த்தல் ஆகியவற்றைச் செய்கிறார்கள். நான்கு பேர் கொண்ட குழுவாக இருப்பவர்களில் ஒவ்வொருவரும் தாங்கள் ஈட்டிய பொருளை, அது எவ்வளவாக இருந்தாலும் அதை அப்படியே கொண்டுவந்து ஒரு பையில் போட்டு வைக்கிறார்கள். அதில் சாப்பாட்டுக்காகப் பத்து ரூபாய் எடுத்துக்கொள்வதோடு சரி. இப்படி  ஒவ்வொரு நாளும் கொண்டுவந்து சேர்க்கும் பணம் அவர்கள் அங்கிருந்து கிளம்பும் நாளில் எண்ணி சம பங்காகப் பிரிக்கப்படுகிறது.

ஆண்கள் இப்படி வெளியில் சென்று பொருள் ஈட்டி வர, பெண்கள் தையல் கடை, துணிக் கடை ஆகியவற்றுக்குச் சென்று, அங்கு மீதமாகியுள்ள துண்டுத் துணிகளை வாங்கிவந்து சுருக்குப்பை தைத்து அதை பஸ் ஸ்டாண்ட், கோயில் ஆகிய இடங்களுக்குச் சென்று விற்கிறார்கள்.

நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது... ஆறுமுகத்தின் குரல் காற்றில் கரைகிறது!

- கரு.முத்து
படங்கள்: கே.குணசீலன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு