Published:Updated:

என் ஊர்!

இரும்புலிக்குறிச்சியின் அன்னப் படையல்!

##~##

''என் ஊர் அப்போது புலிகள் வாழ்ந்த கானகம் சூழ இருந்திருக்கிறது. கானகம் என்றால்... நான்கு மைல் அகலமும் 16 மைல் நீளமும்கொண்ட, அகன்று விரிந்த கானகம். அந்தக் கானகத்தின் எச்சமாக இருப்பது என் ஊரின் பெயர் மட்டும்தான். இரும்புலிக்குறிச்சி'' - ஒரு மறக்கப்பட்ட வரலாற்றைச் சொல்லத் தொடங்கினார், கல்வியாளரும் தமிழ் அறிஞருமான பொற்கோ!

 '' 'பணப் பயிர் பயிரிடச் சொல்லித் தருகிறோம்; பயிரைப் பணமாக்கக் கற்றுத்தருகிறோம்’ என்று சொல்லித்தான் அரசாங்கம் ஏராளமான காடுகளை அழித்தது. அப்படி அழிக்கப்பட்ட வனங்களின்

என் ஊர்!

கதைதான் என் ஊரின் கதையும்.

காடும் இருளர்களும்தான் இந்த ஊரின் ஆதி அடையாளங்கள். ஆனால், இன்றைக் குக் காடும் கிடையாது; இருளர்களும் கிடையாது. தைல மரங்கள்தான் எங்கும் வியாபித்து நிற்கின்றன.

அந்தக் காலத்திலேயே தன்னிறைவு பெற்ற ஊராக இருந்தது எங்கள் ஊர். எல்லா வகையான தொழில்களைச் செய்யும் மக்களும் இங்கு இருந்தார்கள். வன்னியர், தட்டார், தச்சர், கன்னார், கொல்லர், தாசர், வண்ணார், வள்ளுவர் எனப் பலப் பிரிவு மக்களும் ஒன்றாக வாழ்ந்தோம்.

சளைக்காமல் உழைக்கிறவர்கள் எங்கள் மக்கள். சோளம், வரகு, கேழ்வரகு, மிளகாய், கடலை ஆகியவற்றை விளைவித்து உழைப்பாலேயே இந்த மண்ணைப் பொன்னாக்கியவர்கள் அவர்கள். ஊரின்  கிழக்கு, மேற்கு, வடக்குப் பகுதிகளில் இருந்த  ஏரிகள் அவர்களுடைய உழைப்புக்கு உரம் சேர்த்தது. எங்கள் ஊரில் எல்லாருக்கும் குறைந்தபட்சம் அரை ஏக்கர் நிலமும் ஒரு சொந்த வீடும் கட்டாயம் இருக்கும். எங்கள் மண்ணில் பாலும் பசுமையும் வழிந்து ஓடின. பால் விற்பதை அவமானமாகக் கருதி, வெண்ணையை மட்டும் விற்றுவிட்டு மற்ற அனைத்தையும் இலவசமாகப் பகிர்ந்துகொள்வோம்.

என் ஊர்!

எங்கள் ஊர் பிரபலங்களில் முக்கியமானவர் அறிவானந்த அடிகள். சங்க இலக்கியங்களில் நிறைந்த புலமையும் ஆழ்ந்த கவித் திறனும் பெற்றவர் அவர். கலியபெருமாள் சுவாமி மீது அவர் இயற்றிய தலப்பிரபந்தம் மிக முக்கியமானது. அவர் எழுதிய மற்றொரு முக்கியமான நூல், 'சிறுத்தொண்டர் நாடகம்’. கலை, சோதிடம், யோகம், மருத்துவம் என அந்த நாடகத்தில் அவருடைய அனைத்து அறிவும் வெளிப்பட்டு இருக்கும். எங்கள் ஊரில் அந்தக் காலத்திலேயே அத்தனை பட்டதாரிகள்! இதற்குக் காரணம்... அரசு. அறவணன், மணியன், ராமசாமி, சர்வாதிகாரி ஆகிய பெரியவர்களின் தன்னலம் பாராத உழைப்பு. சுப்பராயன் எங்கள் ஊரின் பொது நல ஊழியர். விண்ணப்பம் எழுதியே ஊருக்குப் பல நன்மைகளைக் கொண்டுவந்தவர் அவர். கணக்கப்பிள்ளை துரைசாமி நல்ல கவிஞர். சுற்று வட்டார மக்களை என்றைக்கும் சிரிக்கவைத்த சிவசாமி ஒரு பிறவிக் கலைஞன்!  

என் ஊர்!

எங்கள் ஊரின் தனித்துவமான விழா, அன்னப் படையல். வள்ளலாரின் வடலூர் மடத்தில் உணவிடுவதை முன்மாதிரியாகக்கொண்டு நடத்தப்படும் விழா இது. சித்திரை அமாவாசை அன்று மலைபோல அன்னத்தைக் குவித்து மதியத்தில் இருந்து இரவு வரை வந்தவருக்கு எல்லாம் வயிறார உணவிடுவோம். சுப்பிரமணியர் கோயில் திருவிழாவின்போது வள்ளித் திருமணம், மாரியம்மன் கோயில் திருவிழாவின்போது சிறுத்தொண்டர் நாடகம், காமன் கோயிலில் நடக்கும் காமன் தகனம்... இவை எல்லாம் எங்களுடைய அன்றைய சந்தோஷங்கள்!''

பூ.கொ.சரவணன், படங்கள்: ந.வசந்தகுமார், ப.சரவணகுமார்

அடுத்த கட்டுரைக்கு