Published:Updated:

தென்னை மரம் கிராப் வெட்டிக்கொள்கிறது!

தென்னை மரம் கிராப் வெட்டிக்கொள்கிறது!

##~##

நெல்லுக்குக் களை எடுப்பார்கள், கரும்புக்குக் களை எடுப்பார்கள்...  தென்னைக் குக் களை எடுத்துக் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?

 வயலில் களை எடுப்பது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் தென்னைக்குக் களை எடுப்பதும். மரத்தில் இருக்கும் தேவை இல்லாத கூராஞ்சி, பாளை, மட்டை, பன்னாடை ஆகியவற்றை மரத்தில் இருந்து அகற்றினால்தான் மரம் ஆரோக்கியமாகவும் செழிப்பாகவும் இருக்கும். ஆண்டுக்கு ஒரு முறையாவது இந்தக் களை எடுப்பு நடக்க வேண்டும்.

கொள்ளிடம், நரிமுடுக்குக் கிராமத்தைச் சேர்ந்த சேகர் இந்தக் களை எடுப்பில் கெட்டிக்காரர். களை எடுப்பைப் பார்க்கக் காலையிலேயே அவரைக் கூட்டிக்கொண்டு புறப்பட்டேன்.

தென்னை மரம் கிராப் வெட்டிக்கொள்கிறது!

சேகர் முதலில் சட்டையைக் கழற்றிவிட்டு அரிவாளை எடுத்தார். கீழே கிடந்த கட்டையில் கொஞ்சம் மண்ணை அள்ளிப் போட்டு அதில் அரிவாளை தீட்டிக்கொண்டார். காலில் தடையை (இரண்டு கால்களையும் இணைக்கும் கயிறு போன்றது. மரம் ஏறும்போது கால்கள் சறுக்காமல் இறுகப் பிடித்துக்கொள்ளும்)  மாட்டிக்கொண்டு அரிவாளைத் தொங்கவிட்டுக்கொண்டு மளமளவென மரத்தில் ஏறினார். ஏறும்போதே இடையூறாக இருந்த கொடிகள், பழுத்த மட்டைகள் ஆகியவற்றை அறுத்துத் தள்ளிவிட்டு, மட்டைகளுக்கு இடையே புகுந்து மேலே ஏறி வாகாக நின்றுகொண்டார்.

இப்போது அவர் கண்கள் நாலாபுறமும் மரத்தை எடை போட்டன. எவை எல்லாம் தேவை இல்லாதவை என்பதைச் சில நிமிடங்களில் முடிவு செய்தவர், அடுத்து அரிவாளால் அவற்றை வெட்டித் தள்ள

தென்னை மரம் கிராப் வெட்டிக்கொள்கிறது!

ஆரம்பித்தார். காய்க்கத் தயாராக இருக்கும் குருத்துகளுக்கு எந்தவித இடைஞ்சலும் இல்லாமல் செய்துவிட்டு, சுமார் 15 நிமிட நேரத்தில் மரத்தில் இருந்து கீழே இறங்கினார். பல மாதங்கள் முடிவெட்டாமல் இருந்து இன்று சுத்தமாக முடிவெட்டிக் கொண்டவரைப்போல் மிகச் சுத்தமாக இருந்தது தென்னை மரம்.

''அஞ்சாவது படிக்கும்போது மரம் ஏறக் கத்துக் கிட்டேன். பல வருஷமா கள்ளுமரம் வெட்டுறதுதான்  பொழைப்பா இருந்துச்சு. கள்ளுக்கு அரசாங்கம் தடை விதிச்சதும் பொழைப்பு இல்லாமப் போச்சு. வருமானம் இல்லைனாலும் வயிறு சும்மா இருக்குமா? அப்பதான் யாராவது தென்னை மரம் ஏறி தேங்காய் பறிச்சுப்போடக் கூப்பிட்டா போக ஆரம்பிச்சேன். அதுவே ஒரு கட்டத்துல முழு நேரத் தொழிலா ஆயிடுச்சு. அப்ப மரத்துல இருக்கிற தேவை இல்லாத அசம்பை எல்லாம் எடுக்க ஆரம்பிச்சேன். இப்ப இதுவே முழுநேரத் தொழிலா ஆயிடுச்சு.

தேளும், கட்டுவிரியன் பாம்பும்தான் மரத்தில் இருக்கிற பெரிய ஆபத்து. பன்னாடைக்குள் சுருட்டிக்கொண்டு படுத்திருக்கும் கட்டுவிரியன். பன்னாடையைக் கையால் பிடித்து இழுக்கும்போது வழவழனு கையில் தட்டுப்படும். அப்படியே கீழே தள்ளிவிட்டுடுவேன். இப்பல்லாம் கத்தியாலதான் பன்னாடை இழுக்கிறது. தேளும் அப்படித்தான். மட்டையில காலை வைக்கும்போது பார்த்துத்தான் வைக்கணும். இல்லைனா கால்ல போட்டுடும். மரத்தில் இருக்கும்போது ஒவ்வொரு நொடியும் புத்தியும் கண்ணும் விழிப்பா இருக்கணும். இல்லைனா மரத்தில் இருந்து நாம இறங்க மாட்டோம், பாடிதான் இறங்கும்'' என்று சிரித்தபடி சொல் கிறார் மரமேறி சேகர்!

_ கரு.முத்து

அடுத்த கட்டுரைக்கு