Published:Updated:

கமலாலய தெப்பமும்... பெரியாரின் வெங்காயமும்!

கமலாலய தெப்பமும்... பெரியாரின் வெங்காயமும்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கமலாலய தெப்பமும்... பெரியாரின் வெங்காயமும்!

ர் ஆயுதப் போராளியாகத் தன் வாழ்க்கையைத் தொடங்கி, இன்று தமிழர்களின் தன்னுரிமைக்காகவும், இன மானத்துக்காகவும் உரிமைக் குரல் கொடுத்துவரும் தோழர் தியாகு, தான் பிறந்த திருவாரூர்பற்றி தன் நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார்.

கமலாலய தெப்பமும்... பெரியாரின் வெங்காயமும்!
##~##

''திருவாரூர் என்றாலே குளங்களும் கோயிலும்தான் எல்லோருக்கும் நினைவுக்கு வரும். அப்படிப்பட்ட ஊரின் தனித்துவமான அடையாளம் தியாகராஜர் ஆலயம். தியாகராஜப் பெருமானின் நினைவாக ஊரில் உள்ள பல குழந்தைகளுக்குத் தியாகராஜன் எனப் பெயரிடுவர். அப்படிப் பெயரிடப்பட்ட தியாகராஜன்களில் நானும் ஒருவன். கோயிலுக்கு இணையான புகழ்பெற்றது கமலாலயம் என அறியப்பட்ட தெப்பக் குளம். அந்தத் தெப்பக்குளம் ஐந்து ஏக்கர் பரப்பு உள்ளது. அந்தத் தெப்பக்குளத்தில் வழுக்கி விழுந்து இறந்தவர்கள் பல பேர். அதனால்தான், 'வழுக்கி விழுந்தால் வைகுண்டம் கிட்டும்’ எனும் பழமொழி ஏற்பட்டது.

தெப்பக்குளத்தில் தெப்பம் விடும்போது தெருவின் இன்னொரு முனையில் தந்தை பெரியாரின் கூட்டம் நடைபெறும். அவர் அங்கே, 'தெப்பம் விடுறானாம் தெப்பம்... வெங்காயம்!' என்பார். அதைக் கைதட்டி இங்கு இருக்கிற பக்தர்கள் ரசிப்பார்கள். எந்த வகையான வெறுப்பும் இன்றி அன்றைக்கு எம் மக்கள் வாழ்ந்தது பெருமையோடு நினைத்துப் பார்க்கக்கூடிய ஒன்று. கோயிலைக் கடந்துதான் பள்ளிக்குப் போக முடியும். தெற்குக் கோபுர வீதி வழியாகப் புறப்பட்டு, கிழக்கு வீதி வழியாகக் குறுக்கு வழியில் பள்ளிக்குச் செல்வேன்.

கமலாலய தெப்பமும்... பெரியாரின் வெங்காயமும்!

நான் பள்ளியில் படித்தபோது எனக்கு நான்காம் வகுப்பில் ஆசிரியராக வாய்த்தவரும் ஒரு தியாகராஜன்தான். பின்னாளில் அவர் பத்திரிகையாளராகப் பிரபலம் அடைந்தார். அவர்தான் சின்னக்குத்தூசி. எனக்கு வாய்த்த இன்னுமொரு ஆசிரியர் பி.சி.கணேசன். தேர்ந்த எழுத்தாளர். ஆனால், மனிதர் பிரம்பாலே பேசுவார். முகத்தில் கனிவைத் தேக்கிவைத்து இருக்கும் ஆசிரியர் சிவசண்முகம் அவர்களை ஆயுள் முழுக்க மறக்க முடியாது. எங்கள் ஊரில் கதைகளுக்குப் பஞ்சம் இல்லை. ஆயிரங்கால் மண்டபம் ஒன்று உண்டு. ஆனால், அதில் ஆயிரம் கால்கள் இருக்காது. அதற்கு ஒரு சுவையான கதை சொல்வார்கள். பூதங்கள் அந்த மண்டபத்தை இரவில் கட்ட ஆரம்பித்ததாகவும், கட்டி முடிப்பதற்குள் பகற்பொழுது வந்துவிட்டதால், மண்டபம் முழுமை பெறாமல் போனதாகக் கூறுவார்கள். அடியக்காமங்கலம் என்றொரு பகுதி உண்டு. இரு சகோதரிக் குருவிகள் நீர் தேடி பிரிந்து சென்றதாகவும், இரை தேடி தங்கைக் குருவி செல்ல... அக்காக் குருவி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாம். அதைப் பார்த்து தங்கைக் குருவி, 'அடியக்கா!’ என ஒப்பாரி வைத்துக் கதறியதால் இந்தப் பெயர் வந்தது என்பார்கள்.  

எங்கள் ஊரில் 'இங்க்’ பிள்ளையார் இருக்கிறார். தேர்வு எழுதச் செல்வதற்கு முன் மாணவர்கள் இரண்டு பேனா முழுக்க மை நிரப்பி, அந்த மையாலேயே பிள்ளையாரைக் குளிப்பாட்டுவார்கள். அப்படிச் செய்தால், தேர்வில் வெற்றி பெறலாம் என்பது நம்பிக்கை. ஓரம்போக்கி என்கிற நதியில் வருடம் முழுக்க நீர்வரத்து இருந்து கொண்டே இருக்கும். அதற்குக் காரணம், வடபாதிமங்கலம் எனும் சர்க்கரை ஆலை அமைந்த பகுதிக்கு நீர் தொடர்ந்து தேவைப்பட்டதால், கல்லணையில் இருந்து நீர் வந்துகொண்டே இருக்கும். இன்றைக்கு ஓரம்போக்கியில் சாக்கடை நீர் தேங்கி நிற்கிறது. ஓடம்போக்கிய ஓரம்போக்கி நீர்நிலை, இன்று ஒட்டகம் போகும் பாலைவனம் ஆகி இருப்பது வலி நிறைந்த விஷயம்.

கமலாலய தெப்பமும்... பெரியாரின் வெங்காயமும்!

எங்கள் ஊர் திரு.வி.க. நூலகம் அற்புதமான பல நூல்களைத் தன்னகத்தே கொண்டு இருந்தது. திராவிட இயக்கம் அன்றைக்குப் பல படிப்பகங்களைத் தெரு முனைகளில் உருவாக்கி இருந்தது. அங்கே எல்லாம் சின்னஞ் சிறுவர்கள் நூலின் மீது படுத்துக்கொண்டே வாசிப்பார்கள். எங்கள் ஊரைச் சேர்ந்த தனபால் என்பவர் தொடாத விளையாட்டு இல்லை... செய்யாத சாதனை இல்லை. தற்போது அவர் குதிரை வண்டி ஓட்டுகிறார் எனக் கேள்விப்பட்டேன். மாவட்டத் தலைநகரமான பிறகு தூய்மை, அமைதி ஆகியவற்றை இழந்து, பரபரப்பில் மூழ்கிவிட்டது என் ஊர். கொசுக்களும் யானைக் கால் வியாதிகளும் பல்கிப் பெருகி இருக்கிறது. குதிரைவண்டி ஓட்டப்போன விளையாட்டு வீரனைத் தான் இப்போது நினைவுபடுத்துகிறது என் திருவாரூர்.

கமலாலய தெப்பமும்... பெரியாரின் வெங்காயமும்!
கமலாலய தெப்பமும்... பெரியாரின் வெங்காயமும்!

-பூ.கொ.சரவணன்
படங்கள்: ந.வசந்தகுமார், ப.சரவணகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு