'மணப்பாறை காளைகள்’ என்று பெயர் பெற்றாலும் உண்மையில் மணப்பாறைக்கு அருகில் உள்ள 'செவலூர்’தான் காளைகளின் ஸ்பாட். ''செவலூர் காளைகள்னா, சிங்கமா இருந்தாலும் எதிர்த்து நிக்கும்ண்ணே!'' என்ற ஊரார் குரல்களைத் கடந்து செவலூர் பெரிய தம்பியின் வீட்டை அடைந்தோம்.

'மணப்பாறை மாடு, கட்டி...
##~##

''30 வருஷமா மாடு வளர்க்கிறோம் தம்பி. எங்க அப்பா பேரு மணிக்கவுண்டர். எங்க வீட்டு மாடுன்னா, ஊருக்கே ஒரு மருவாதி இருக்கும்''- பேசிக்கொண்டே மாட்டுத் தொழுவத்துக்கு அழைத்துச் சென்றார். திமிறிய திமில், கூர்வாள் கொம்பு, கொழுத்த தேகம் என ரணகளமாக மூச்சுக் காற்றால் புழுதியைக் கிளப்பிக்கொண்டு நின்றது காளை. 'அஞ்சு வருஷமா வளர்த்துட்டு வர்றேன். ஒரு பய இதைத் தொட்டது கிடையாது. இதுகளுக்குப் புதுசா பயிற்சி எதுவும் கொடுக்கிறது இல்ல. 'மொச புடிக்கிற நாய மூஞ்சியப் பார்த்தாலே தெரியும்’ங்கிற கதைதான். மாட்டை ஒரு எட்டு தள்ளி நின்னு பார்த்தாலே 'ஏறுவானா... தேறுவானா?’ன்னு கண்டுபிடிச்சிருவோம். மாட்டுக்கு அதோட பொறப்புலேயே வீர குணம் இருக்கணும். அப்படி இருந்தாத்தான் நிக்கும்'' என்று அவர் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே முன்னங்காலை உள்ளிழுத்து, தலையைச் சிலுப்பி முறைக்கிறது காளை.

''இங்க பாருங்க... நாம சொல்லியா வித்தை காமிக்கிறான்? காளைக்கு மரியாதை களத்துல விளையாடுற வரைக்கும்தான். ஒரு முறை காளை களத்துல தோத்துருச்சுன்னா, அதை உடனே வித்துருவோம். இவனுக்கு முன்னாடி அஞ்சாறு காளை வெச்சிருந்தோம். அதுல 'ராமு’ன்னு... ஒருத்தன் யார் வம்புக்கும் போக மாட்டான். ஆனா போட்டின்னு வந்துட்டா விடமாட்டான். ஆறு பேரைச் சரிச்சிருக்கான். ஆனா பாசக்காரன். தடவிக்கொடுத்தா, சொன்ன சொல்லு கேட்பான்'' என்கிற பெரிய தம்பி இறந்துபோன 'ராமு’வுக்காக வீட்டின் பின்புறம் சின்ன சிலை வைத்திருக்கிறார். ''ராமுவுக்காக ஊரே கூடி நின்னு காரியம் பண்ணினோம். ஒவ்வொரு பொங்கலுக்கும் படையல் போட்டு சாமி கும்புட்டுட்டுதான் ஜல்லிக்கட்டுக்கே போவோம்'' என்றபடி ராமு வின் சிலையைத் தடவிக்கொடுக்கிறார் பெரிய தம்பி.

'மணப்பாறை மாடு, கட்டி...

''தம்பி... அங்க பாருங்க!' என்று அவர் காட்டிய திசையில் குள்ள மனிதர்கள்போல, இரண்டு அடி உயரமே இருக்கும் குட்டைக் காளைகள் நின்றுகொண்டு இருந்தன. ''இந்த மாதிரி மாடு எங்கேயும் பார்க்க முடியாது. நான் மூணு வெச்சிருக்கேன். இதனால பைசா பிரயோஜனம் இல்லை. ஆனாலும் ஆசைக்கு வளர்க்கிறேன்'' - ஆசையாகத் தடவிக்கொடுக்கிறார் பெரிய தம்பி.

'மணப்பாறை மாடு, கட்டி...

- ஆ.அலெக்ஸ்பாண்டியன்
படங்கள்: ர.அருண் பாண்டியன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு