Published:Updated:

"விழி இழந்தும் வழி பெற்றோம்!"

"விழி இழந்தும் வழி பெற்றோம்!"

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ரபரப்பாக இயங்கிக்கொண்டு இருக்கும் அந்தத் தொழிற்கூடத்தில் நுழைந்தால் ஆச்சர்யத்தில் நம் விழிகள் விரியும். மிகமிகக் கவனத்தோடு வேலை செய்ய வேண்டிய தொழிற்கூடம் அது. ஒரு பக்கம் கூரான இரும்புத் தகடுகளை மெஷினில் சிலர் துண்டாக்கித்தர... வேறு சிலர் அனாயசமாக அதை அடுக்கிக்கொண்டு இருந்தார்கள். இன்னொரு பக்கம் லேத் மெஷின்களை இயக்கிக்கொண்டு இருக்கிறது ஒரு குழு. ஆபத்தான அந்த வேலையை அனாயாசமாகச் செய்யும் 80 சொச்சம் தொழிலாளர்களுக்குப் பார்வைத் திறன் கிடையாது என்பது ஆச்சர்யமான செய்தி!

"விழி இழந்தும் வழி பெற்றோம்!"
##~##

36 வருட அனுபவம் உள்ள பாண்டி நம்மிடம், '1973-ல் திருச்சியின் பிரபல கண் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் ஜோசப் பார்வையற்றோர் நலனுக்காக ஆரம்பித்ததுதான் இந்த ஆர்பிட் (Organisation for Rehabitation of the Blind in Trichy). அப்போது ஐந்து பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளோடு, அவர்களை வழிநடத்த பார்வை உள்ள மாற்றுத்திறனாளிகள் இணைந்து சாக்பீஸ், சோப் ஆகியவற்றை உற்பத்திச் செய்ய ஆரம்பித்தோம். நாளடைவில் பார்வையற்ற தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தும் எங்களை நம்பி உருப்படியான வாய்ப்பை யாரும் கொடுக்கவில்லை.  

"விழி இழந்தும் வழி பெற்றோம்!"

ஞானதுரை மைக்கேல் என்பவரின் உதவியோடு, ஜெர்மனியைச் சேர்ந்த பார்வையற்றோர் நலனுக்காகச் செயல்படும் 'கிறிஸ்டோபர் பிளைண்ட் அண்டு மெஷின்’ என்கிற சேவை நிறுவனத்தின் தொடர்பு கிடைத்தது. ஆர்பிட் அடுத்தகட்டப் பாய்ச்சலைத் தொடங்கியது. டேராடூனில் படிப்பை முடித்த ஐ.டி.ஐ. மாணவர்களின் வழிகாட்டுதலின்படி, இந்தத் தொழிற்கூடத்தை உருவாக்கினோம். பார்வையற்றவர்கள் இயக்கும் தொழில் நிறுவனம் இந்தியாவில் இது ஒன்றுதான். கடந்த எட்டு வருடங்களாக திருச்சி பெல் நிறுவனத்தின் 'பெஸ்ட் சப்-கான்ட்ராக்டர்’ விருதை வாங்கியிருக்கிறோம். எங்கள் உழைப்பைப் பார்த்து நம்பிக்கைவைத்து 'ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா’ வருடத்துக்கு 10 லட்சம் வரை கடன் தருகிறது. இது தவிர, சிறந்த சமூகத் தொழில் நிறுவனத்துக்கான தேசிய மாநில விருதுகளை வாங்கியிருக்கிறோம்' - சொல்லும்போது பார்வை இழந்த பாண்டியின் விழிகளும் பெருமிதத்தில் மின்னுகின்றன.  

செந்தண்ணீர்புரத்தில் இருந்து தினசரி பஸ் பிடித்து வந்துபோகும் பாண்டியன் என்பவர், 'இதுக்கு முன்னாடி ஊதுபத்தி, மெழுகுவத்தினு தெருத் தெருவா அலைஞ்சுட்டு இருந்தேன். இங்கே வந்ததுக்கு அப்புறம், மாசம் மூவாயிரம் சம்பளம் கிடைக்குது. அதோடு, அரசு ஊழியருக்கான பணிப் பாதுகாப்பு அம்சங்களும் இருக்கு. இப்போ பிள்ளைகளை ஸ்கூலுக்கு அனுப்புறதோட, கால் வராத மனைவியையும் பத்திரமா பாத்துக்குறேன். 'குறை ஒன்றும் இல்லை’னு சொல்வாங்களே... இப்போ நான் அப்படி இருக்கிறேன்!'' என்கிறார் நெகிழ்ச்சியோடு.

"விழி இழந்தும் வழி பெற்றோம்!"

'பார்வையற்ற தொழிலாளர்களுக்குச் சிரத்தையும் அர்ப்பணிப்பும் அதிகம். இவர்களுக்காக வழக்கமான இயந்திரங்களில் பாதுகாப்பு அம்சங்களை அதிகமாக்கியிருந்தாலும், இங்கே தொழில் பழக ஆரம்பிக்கும்போது, ரத்தம் சிந்தாத தொழிலாளர்களே கிடையாது. ஆனாலும், இந்த வேலை தரும் வாழ்க்கை ஸ்திரமும் சமூக மதிப்பும் இவர்களை இயக்கிட்டு இருக்கு' என்று விரல்கள் துண்டான கையை வருடியபடியே பேசும் சகாபுதீன், இங்கே ஃபோர்மேனாகத் தொழிலாளர்களை வழி நடத்துகிறார். தொழிலாளர்களை மேற்பார்வையிட இவரைப் போன்ற பார்வை பழுதில்லாத சில வழிகாட்டிகள் இருக்கிறார்கள். ''அவ்வப்போது எங்கள் நிறுவனத்துக்கு இரக்கக் குணம் உள்ளவர்கள் எட்டிப்பார்ப்பார்கள். அவர்கள் தரும் நிதியை நாசூக்காக மறுத்துவிடுவோம். பதிலுக்கு  'ஆர்டர்கள் கொடுங்கள்’ என்று தொழில்வாய்ப்பை கோரிக்கையாகவைப்போம். ஏன்னா, பல ஊர்களில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மெழுகுவத்தி வித்து, பாட்டுப் பாடினு அவல நிலையில் இருக்காங்க. அவங்க எல்லாரையும் முன்னேத்துற மாதிரி மாவட்டத்துக்கு ஒண்ணா ஆர்பிட் கிளைகள் அமைக்கணுமே!'' - சிலிர்க்கிறார் பாண்டி.

நிஜம்தான்!

"விழி இழந்தும் வழி பெற்றோம்!"

-எஸ்.சுமன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு