Published:Updated:

மனிதன் என்பவன் தெய்வமாகலாம் !

அ.சாதிக்பாட்ஷா ,படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

மனிதன் என்பவன் தெய்வமாகலாம் !

அ.சாதிக்பாட்ஷா ,படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

Published:Updated:
##~##

'மகான் குப்பைத்தொட்டி மாணிக்கம் அவர்களுடைய குருபூஜை விழாவுக்கு அனைவரும் வருக!’ எனத் திருச்சி மாநகரம் முழுக்க ஒட்டப்பட்டு இருந்த போஸ்டர்கள் நம்மையும் அந்த நிகழ்ச்சிக்குச் செல்லத் தூண்டியது.

காவிரி ஆற்றின் தென்கரையில் தில்லை நாயகம் படித்துறை என்னும் இடத்தில் அமைந்து உள்ள சின்ன கோயிலின் முன்,  நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் குடும்பத்தோடு குழுமி இருந்தனர். 'குப்பைத்தொட்டிமாணிக் கம்’ என்பவரின் சமாதியைச் சுற்றிக்கட்டப் பட்டு உள்ள அந்தச் சின்ன கோயிலில், அவருடைய புகைப்படத்தை வைத்துபூஜை செய்து வழிபட்டனர் வந்திருந்த பக்தர்கள். பக்தர்கள் பலருடைய சட்டைப்பைகள், மணி பர்ஸ்கள், கைப்பைகள், வாகனங்களின் முகப்புகளில் மாணிக்கத்தின் புகைப் படத்தைப் பார்க்க முடிந்தது. பலரும் தெய்வமாகப் போற்றும் குப்பைத்தொட்டி மாணிக்கத்தின் கதையைக் கேட்டோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பூர்வீகம் சேலம் மாவட்டமாம். 1903-ம் ஆண்டு இவர் பிறந்ததாகச் சொல்லப்படு கிறது. சிறு வயதில் திருச்சிக்கு வந்துவிட்ட மாணிக்கம், இந்த நகரில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அலைந்து திரிந்து மக்களுடைய பாசத் துக்கு உரியவராக மாறி  இருக்கிறார்.

மனிதன் என்பவன் தெய்வமாகலாம் !

''மாணிக்கம் யாரிடமும் பேச மாட்டார். எது சொன்னாலும் கோபப்படாமல் எப்போ தும் சிரித்த முகத்துடன் இருப்பார். குப்பைத் தொட்டியின் பக்கத்தில்கூட படுத்துவிடுவார். கோவணம் மட்டும் அணிந்தபடி திருச்சி முழுக்கச் சுற்றிக்கொண்டு இருப்பார். அவர் எந்த வீட்டில் அல்லது கடையில் நுழைந்து  உட்காருகிறாரோ அங்கே செல்வம் கொழிக்கும், பிரச்னைகள் அகலும் என்ற நம்பிக்கை உண்டு.

அவரைப் பார்க்கும் பலர் தங்கள் வீட்டுக்குச் சாப்பிட வருமாறு அழைப்பார்கள். ஆனால், அவர் விரும்புகிற நபரின் வீட்டுக்கு மட்டும்தான் செல்வார். அப்படி ஒருமுறை எங்கள் வீட்டுக்கு வந்து சாப்பிட்டுவிட்டு சிரித்த முகத்துடன் என் தலையில் காலைவைத்து ஆசீர்வதித்துவிட்டுப் போனார். நகை ஆசாரி தொழில் செய்துவந்த என் அப்பா, அப்போது தங்கக் கட்டுப்பாட்டுச் சட்டம் காரணமாக வேலை இல்லாமல் இருந்தார். மாணிக்கம் வந்து சென்ற பிறகு அப்பாவுக்கு நல்ல வருமானம் கிடைத்தது. குடும்பத்தில் செல்வமும் நிம்மதியும் அதிகரித்தது. உண்மையில் அதிர்ஷ்டத்தின் மறு உருவம் மாணிக்கம்!'' என்று நம்மிடம் கூறி புளங்காகிதம் அடைந்தார் உறையூரைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்.

மனிதன் என்பவன் தெய்வமாகலாம் !

''பல ஆண்டுகளுக்கு முன்பு உயர் நீதிமன்ற நீதிபதி பதவிக்கான பணிமூப்புப் பட்டியலில் 14-வது இடத்தில் இருந்த எங்க உறவினர், மாணிக்கத்திடம் ஆசீர் வாதம் பெற்ற மறுநாள் உயர் நீதி மன்ற நீதிபதியாக அறிவிக்கப்பட் டார்'' என்கிறார் நீதிபதியின் உறவினர் ஆன விஸ்வநாதன் என்பவர்.

மனிதன் என்பவன் தெய்வமாகலாம் !

இந்தக் குருபூஜை விழாவுக்குத் தொழில் அதிபர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், வழக்குரைஞர்கள் எனப் பலதரப்பட்ட மனிதர்களும் குடும்பத்தோடு ஆஜராகி இருந்தனர். நம்மைச் சூழ்ந்துகொண்டு ஒவ்வொருவரும் மாணிக்கம் தங்கள் குடும்பத்தில் ஏற்படுத்திய அதிசயங்கள் பற்றி கதை கதையாகக் கூறினர்.

மனிதன் என்பவன் தெய்வமாகலாம் !

1969-ம் ஆண்டு மரக்கடை பகுதியில் இறந்துகிடந்த மாணிக்கத்தின் உடலை ஊரே திரண்டுவந்து இறுதிச் சடங்கு நடத்தி காவிரிக் கரையில் அடக்கம் செய்திருக்கிறது. அந்த இடத்தில் கோயில் கட்டி கடவுளாக இன்று வரை வழிபட்டு வருகின்றனர் திருச்சி மக்கள். இந்த வகையில் உண்மையிலேயே 'அதிர்ஷ்ட சாலிக் கடவுள்’தான் குப்பைத்தொட்டி மாணிக்கம்!