Election bannerElection banner
Published:Updated:

மரணம்கூட நம்பிக்கைதான் !

எஸ்.சுமன்

##~##

''இப்படியும் மனிதர்கள்  நம்பிக்கையோடு இயங்கும்போது  உங்களுக்கும் தன்னம்பிக்கை வேண்டாமா?' திருச்சி ஏரியாவில்  தொழில் முனைவுப் பயிலரங்கங்கள், பட்டிமன்றங்களில் அடிக்கடி உரக்கச் சொல்லப்படும் உதாரணம் இது. அந்த உதாரண மனிதர்கள் திருச்சி அரசு மருத்துவமனை முன்பாக பூக்கடைவைத்து இருப்பவர்கள். அங்கு தயார் ஆகும்மாலை கள், பெரும்பாலும் மருத்துவமனையில் இறப்பவர்களுக்கு ஆனவை. பூடகமின்றிச் சொல்வதானால், திருச்சி அரசு மருத்துவ மனையில் சராசரியாகத் தினசரி நடக்கும் சாவு எண்ணிக்கையை மனதில்வைத்து மாலை தொடுப்பதுதான் இவர்களுடைய வாழ்வாதாரப் பணி. 'இறக்கும் உடலை நம்பி உழைப்பதற்கு நபர்கள் இருக்கும் போது, உருப்படியான தன்னம்பிக்கையோடு நீங்கள் இயங்கக் கூடாதா..?'என்பது தான் முதல் வரியில் தொக்கி இருக்கும் ஆற்றாமை. சரி, இந்தப் பார்வைபற்றி அந்தப் பூக்கடைவாசிகள் என்ன நினைக்கிறார்கள்?

மரணம்கூட நம்பிக்கைதான் !

'கொஞ்சம் சங்கடமான சமாச்சாரம்தாங்க இது. வீட்டுக்கும் சாமிக்கும் பூ தொடுக்கிறதுதான் எல்லாப் பூக்கடைக்காரங்களுக்கும் வழக்கமா இருக்கும். ஆனா, இப்படிப் பெரிய காரியத்துக் காகவே பூ மாலை தயார் செய்கிறது தனிப்பட்ட விதத்தில் சங்கடமானதுதான். அதிலேயும் தினசரி பிசினஸ் தேவையை எதிர்பார்த்து பூ கட்ட ஆரம்பிக்கும்போது என்னமோ உள்ள பூந்து குடையும்!' -அவஸ்தையாகச் சமாளித்துப் பேசுகிறார், மாலை தினசரியில் ஒரு கண்ணும் பூ மாலையில் மறுகண்ணுமாக இயங்கிக்கொண்டு இருந்த  ரவிசங்கர்.

மரணம்கூட நம்பிக்கைதான் !

'இதே புத்தூர் ஏரியா  பூ வியாபரத்தில் அப்பாவுக்கு நாற்பது வருஷ அனுபவம்.  நானும் தொழில்ல இறங்கறதுனு முடிவானதும், 'நல்லா ஓடும்’ன்னார். வியாபாரம் நல்லா போனாலும் அதில் முழு சந்தோஷம் கிடையாது. ஒருங்கிணைஞ்ச திருச்சி மாவட்டத்துக்கே மிகப் பெரிய அரசு ஆஸ்பத்திரி இந்த மகாத்மா காந்தி நினைவு மருத்துவமனைதான். அங்கங்க அரசு மருத்துவமனைகள்ல தாக்குப் பிடிக்க முடியாத கேஸுங்களை எல்லாம் கடைசி முயற்சியா இங்கதான் தூக்கி வருவாங்க.  இது தவிர விபத்து கேஸுங்க தனி. டாக்டர் கன்ஃபார்ம்பண்ண தும் பாடியை வீட்டுக்குக் கொண்டுபோக முதல் மாலை வேணுமே? அதுக்கு இங்கதான் வருவாங்க' என்ற ரவிசங்கர்,  'ஆனா எப்ப வாது இன்னைக்கும் கடை ஏறக்கட்டும்போது, கட்டின மாலைகள் மீந்து கிடக்கிறதைப் பார்க்கும்போது வருத்தத்துக்குப் பதிலா ஏனோ நிம்மதிதான் வருது' என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு