Published:Updated:

ஆதலினால் காதல் செய்வீர்!

சாருநிவேதிதா

'நான் பிறந்து வளர்ந்த ஊர் நாகூர். அங்கே எனக்கு காதல் வேறு விதமாக அறிமுகமானது. வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த பெருமாள் கோயிலில் இருந்து அதிகாலையில் கேட்கும் ஆண்டாள் பாசுரங்கள்... மாலை நேரங்களில் மனாரா அடியில் உள்ள சிங்கப்பூர் கடைகளில் இருந்துவரும் சூஃபி, கவ்வாலி பாடல்கள்... எல்லாமே காதல் பற்றிய பாடல்கள்தான். ஆனால், இறைவனின் மீதான காதல்!

##~##

இறைவன் மீது மட்டும் அல்ல; எந்தக் காதலாக இருந்தா லும் அதன் அடிப்படை சரணாகதிதான். அந்த வகையில் காதலும் ஆன்மிகமும் ஒன்றுதான். ஒருவருக்காக ஒருவர் எதையும் செய்யத் தயாராக இருக்கும் நிலை அது. அந்தக் காதலில்தான் எதிர்பார்ப்பு இருக்காது; அதிகாரம் இருக்காது; ஆணவம் இருக்காது. காதல் மிகுதியில், 'உன் பாதங்களை முத்தமிடுவேன்’ என்று சொல்வது இந்தச் சரணாகதி நிலையில் இருந்துதான். 'தொழுது முப்போதும் உன் அடி வணங்கித் தூமலர் தூய்த் தொழுது ஏத்துகின்றேன்’ என்கிறாள் ஆண்டாள்.

ஆதலினால் காதல் செய்வீர்!

உலகம் முழுவதும் உள்ள காதலர்களின் கவிக் கடவுளாக விளங்குபவர்களில் ஒருவர் பதின்மூன்றாம் நூற்றாண்டில் ஈரானில் வாழ்ந்த ஹஃபீஸ் என்ற கவி. இவருடைய கஜல்களைப் பாடாத கஜல் பாடகனே இல்லை. இந்த

கஜல்களின் உட்பொருளைப் பார்த்தால், இதுவும் ஆண்டாள் பாடிய அதே சரணாகதியாகத்தான் இருக்கிறது. ஆண்டாளில் பெண் சரண் அடைகிறாள். ஹஃபீஸின் கஜல்களில் ஆண் சரண் அடைகிறான். ஹஃபீஸ் தன் காதலியைப் பார்த்துச் சொல்கிறார். ''என் கண்கள் நீரைச்சொரிகின்றன; இதயம் காதல் நோயால் பற்றி எரிகின்றது. நான் துரும்பாகத் தரையில் கிடக்கிறேன். நீ என்னைக் காற்றாகவந்து உன்னில் எடுத்துக்கொள்கிறாய்!'  

இதுபோன்ற காவியக் காதல்களை விட்டு, நம்முடைய நடைமுறைக் காதலுக்கு வருவோம். பெண்களை போகப் பொருளாகவும், அடிமைகளாகவும் கருதும் ஒரு சமூகத்தில் காதல் என்பது சாத்தியமா என்றே எனக்குச் சந்தேகமாக இருக்கிறது. ''நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்கிறான் ஓர்

ஆதலினால் காதல் செய்வீர்!

இளைஞன். அதை மறுதலிக்கிறாள் பெண். உடனே அவள் மீது திராவகத்தை வீசுகிறான் அவன். இதுபோன்ற சம்பவங்களின் ஆதாரமாக இருப்பது என்ன என்பதை நாம் யோசிக்க வேண்டும். நாம் நம்முடைய பார்வைகளை சினிமாவில் இருந்தே எடுத்துக்கொள்கிறோம் என்று தோன்றுகிறது.

சமீபத்தில் படித்த ஒரு செய்தி எனக்கு மிகுந்த அதிர்ச்சியை அளித்தது. ஓர் ஊரில் ஐந்து மாணவர்களும் இரண்டுமாணவி களும் பாலியல் செயலில் ஈடுபட்டு, அதை ஒரு மாணவன் இணையத்தில் வெளியிட, மாணவிகளில் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார் என்பதே அந்தச் செய்தி. தொழில்நுட்ப வளர்ச்சியினால் நமக்குக் கிடைத்த இணைய தளத்தைத் தவறாகப் பயன்படுத்துவதால் ஏற்பட்ட கதி இது.  

நம் சினிமாவில் காதல்தான் எல்லாமாகஇருக் கிறது. நாம் பிறந்ததில் இருந்தே காதல் பாடல் களையே கேட்டும், பார்த்தும் வளர்கின்றோம். ஆனால், நம்முடைய வாழ்வில் காதல் எப்படி இருக்கிறது? எங்கள் ஊரில் காதல் பல கொலை களுக்கும் தற்கொலைகளுக்கும்தான் காரணமாக இருந்திருக்கிறது. அங்கே உள்ள சில்லடி என்ற அற்புதமான கடற்கரையில் நான் காதலர்களைப் பார்த்ததே இல்லை. இப்போது நான் வசிக்கும் சென்னையிலோ இளம் ஜோடிகளைக் கண்டால் போலீஸ் விரட்டி அடிக்கிறது. 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்ககாலத்தில் களவு ஒழுக்கம் இருந் தது. காவலாளிகள் அவர்களை விரட்டி அடிக்க வில்லை.  

ஆதலினால் காதல் செய்வீர்!

'நோம், என் நெஞ்சே;  
நோம், என் நெஞ்சே;
இமை தீய்ப்பன்ன கண்ணீர் தாங்கி,
அமைதற்கு அமைந்த நம் காதலர்
அமைவு இலர் ஆகுதல், நோம்,
என் நெஞ்சே’

- என்ற குறுந்தொகைப் பாடலுக்கு சுஜாதா உரை இது: 'நொந்து போகிறது என் நெஞ்சு; இமையைத் தீய்க்கும் வெப்பக் கண்ணீரைத் துடைக்கக் காதலன் இல்லாததால், நொந்து போகிறது என் நெஞ்சு.' ஹஃபீஸின் கஜலை இங்கே ஒப்பிட்டுப் பாருங்கள். எந்தக் காலத்திலும், எந்த தேசத்திலும் காதலர்களின் சொல்லும் உணர்வும் ஒன்றாகவே இருக்கிறது.  

2000 ஆண்டுகளாகக் காதலைப் போற்றிய நம் தமிழ்ச் சமூகத்தில் காதலுக்குத் தடை எப் போது வந்தது என்று தெரியவில்லை. சாதிகளால் பிளவுண்டுகிடக்கும் நம் சமூகம் உருப்பட வேண்டுமானால், அதற்கு முதல் காரியமாக காதல் வளர வேண்டும். சினிமாக் காதல் அல்ல; ஒருவரிடம் ஒருவர் சரணடையும் நிஜமான காதல்!''

அடுத்த கட்டுரைக்கு