Published:Updated:

"பொன்வண்டு பிடிச்சா நாமதான் ஹீரோயின்!"

"பொன்வண்டு பிடிச்சா நாமதான் ஹீரோயின்!"

"பொன்வண்டு பிடிச்சா நாமதான் ஹீரோயின்!"

''கரூர் மாவட்டத்தில் இருக்கும் பெரிய திருமங்கலம் ஒரு சின்னக் கிராமம். எங்கு பார்த்தாலும் பச்சைப் பசேல் என்று மரங்கள் நிறைந்து, பார்ப்பதற்கு வனம் மாதிரியே காட்சி அளிக்கும். நான் இந்தியா முழுவதும் பல இடங்களுக்குப் போய் வந்திருக்கிறேன். ஆனால், என் சொந்த கிராமம்போல் எங்கும் இல்லை'' - தன்னுடைய ஊரான பெரிய திருமங்கலம் பற்றி உற்சாகத்துடன் பேசத் தொடங்குகிறார், இளைஞர் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் ஜோதிமணி.

"பொன்வண்டு பிடிச்சா நாமதான் ஹீரோயின்!"
##~##

''எங்க ஊரில் அமராவதி ஆற்றின் கரையோரம் அருங்கரை அம்மன் வன தேவதை கோயில் இருக்கு. பௌர்ணமி இரவில் பார்க்கவே ரம்யமாக இருக்கும்.  கோயில் உள்ளே செல்ல பெண்களுக்கு அனுமதி இல்லை. நாங்க சின்னப் பசங்களா இருக்கும்போது மாட்டு வண்டி கட்டிக்கிட்டுக் கோயிலுக்குப் போவோம். நாங்க கோயிலுக்குள் போக முடியாதுன்னாலும், நீர் பெருக்கெடுத்து ஓடும் அமராவதி ஆற்றில் குளிப்பதற்காகப் போவோம். அப்ப மாட்டு வண்டிக்காரர் பக்கத்தில் உட்கார பெரிய போட்டியே நடக்கும். மாடு ஓடும்போது வாலைப் பிடிச்சு லேசா முறுக்கிவிட்டா வேகமா ஓடும். செம த்ரில்லிங்கா இருக்கும். ஆற்றில் தண்ணி இல்லாத நேரத்தில் ஊத்துல தண்ணி இருக்கும். பள்ளிக்கூடத்துக்குப் போறதுக்கு முன்னாடி ஊத்துல குதிச்சு குளிச்சுட்டு, அங்கேயே நின்னு ட்ரெஸ்ஸைக் காயவெச்சு அமைதியா பள்ளிக்கூடத்தில் போய் உட்காந்துடுவோம். இந்த மாதிரி எனக்கும் அமராவதி ஆற்றுக்கும் பல தொடர்புகள் இருக்கு.

எங்க கிராமத்தில் இன்னொரு ஸ்பெஷல் ஜவ்வு மிட்டாய். அதை அழுது அடம் பிடித்து வாங்குவோம். சாப்பிடுறோமோ, இல்லையோ... பெண்கள் எல்லாரும் அதை உதட்டில் பூசிக்கிட்டு யாரு டையது நல்லா சிவந்திருக்குன்னு அழகு பார்ப்போம். அந்தக் காலத்து லிப்ஸ்டிக் இதுதான். குடும்ப டாக்டர் இருப்பது போல, எங்க கிராமத்தில் வீட்டுக்கு வீடு ஒரு பூசாரி இருப்பாரு. ஏதாவது நோய் நொடினா வந்து மந்திரிச்சுவிட்டு, திருநீறு வெச்சுட்டுப் போவாரு. காலப்போக்கில் பூசாரிகள் குறைஞ்சுட்டாங்க. தும்பைச் செடிவெச்சு பட்டாம்பூச்சி பிடிக்கிறது, கிட்டிக்குச்சி விளையாடறதுனு ஏகப்பட்ட கிராமத்து விளையாட்டுகள் என் வாழ்க்கையைச் சந்தோஷமா வெச்சு இருந்தது. அப்போ பொன்வண்டு கிடைக்கிறது பெரிய அதிர்ஷ்டம். அப்படி தேடிப் பிடிச்சு பொன்வண்டு பிடிச்சா நாமதான் ஹீரோயின்.

"பொன்வண்டு பிடிச்சா நாமதான் ஹீரோயின்!"

எங்க ஊரில் சினிமா தியேட்டர் கிடையாது. அதனால் அப்ப வண்டி கட்டிக்கிட்டு தின்பண்டம் எல்லாம் எடுத்துக்கிட்டுத் திருவிழாவுக்குப் போற மாதிரி டவுனுக்குக் கூட்டிட்டுப் போவாங்க. அப்படிப் போயிட்டு வந்தா, ரெண்டு மூணு வாரம் இதே பேச்சா இருக்கும். விசேஷ நாட்களில் திரை கட்டி பக்திப் படங்கள் போடுவாங்க.

பெரிய திருமங்கலத்துல பனம் தெளுவு ரொம்ப ஸ்பெஷல். அதுலயும் ஒரு மரத்துத் தெளுவு அருமையா இருக்கும். நான் சின்னப் புள்ளையா இருந்தப்ப, காலையில நேரமா எழுந்திருச்சு தோட்டத்துக்குப் போய் குரங்கு குட்டி மாதிரி பனை மரத்துக்குக் கீழேயே உட்கார்ந்து குடிச்சுட்டு வருவேன்.

ஊரில் பெரிய திருவிழானா காணும் பொங்கல்தான். கிராமத்தில எல்லோரும் ஒன்றுசேர்ந்து பொங்கல்வைப் போம். பெண்கள் ஒன்றுகூடி பக்கத்து கிராமத்தைக் கேலி செய்யும் கும்மி, சாமி கும்மி, வரலாறு கும்மி என, விதவிதமாகக் கும்மி அடிப்போம். மஞ்சு விரட்டு, வழுக்கு மரம் ஏறுவது என, விழாக்கோலம்தான்.

எங்க கிராமத்தின் முக்கியத் தொழில் விவசாயம்தான். இந்த நிலத்தில் விளைந்த பலவகையான பயிர்களும் பல மாநிலங்களுக்கும் ஏற்றுமதி ஆகி இருக்கு. ஆனா, இப்ப பலரும் விவசாயத்தைக் கைவிட்டுட்டு திருப்பூருக்கும், கரூருக்கும் சாயப்பட்டறை வேலைகளுக்குப் போயிட்டாங்க. காலம் எப்படி எல்லாம் மனிதர்களை மாற்றுகிறது என்பதற்கு இதுவே மிகச் சிறந்த உதாரணம்!''

"பொன்வண்டு பிடிச்சா நாமதான் ஹீரோயின்!"
"பொன்வண்டு பிடிச்சா நாமதான் ஹீரோயின்!"

நா.சிபிச்சக்கரவர்த்தி
படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

அடுத்த கட்டுரைக்கு