”இது போராட்ட பூமி!”

''பிரிட்டிஷ் ஆதிக்கத்தை எதிர்த்ததில் எங்கள் ஊருக்கு முக்கியப் பங்கு உண்டு. பிரிட்டிஷ் போலீஸ்காரரையே செருப்பால் அடித்து தங்கள் எதிர்ப்பைக் காட்டியவர்கள் வாழ்ந்த மண் இது. அன்று முதல் இன்றுவரை அதிகார வர்க்கத்தை எதிர்த்துப் போராடும் குணம்கொண்டவர்கள் வாழ்கிற ஊர்தான் நாரணமங்கலம்'' - ஊரின் போராட்ட வரலாற்றை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ராஜா சிதம்பரம்.

”இது போராட்ட பூமி!”
##~##

''சென்னை வேப்பேரி வெட்னரி காலேஜ்ல படிச்சுக்கிட்டு இருந்தப்ப சினிமா மோகம் வந்து சுத்திக்கிட்டு இருந்தேன். இதைக் கேள்விப்பட்ட எங்கப்பா, படிப்பும் வேணாம், ஒண்ணும் வேணாம்னு எனக்குக் கல்யாணம் பண்ணிவெச்சு, விவசாயத்தைப் பார்க்கச் சொன்னார். பச்சைத் துண்டு போட்டு விவசாயிகளோட போராட அனுப்பினார். அந்தத் துண்டுதான் இன்னும் என்னை இயக்குது. எங்க ஊர்ல மட்டுமில்ல... பெரம்பலூர் மாவட்டத்துல இருக்கற எல்லா ஊர்லேயும் பலரும் பச்சைத்துண்டுகாரர்களாக மாறினதுக்கு நான்தான் காரணம்.

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருக்கிற எங்க ஊருக்கு விவசாயமே பிரதான தொழில். ஊர் முழுக்க எலுமிச்சை, கம்பு, சோளம், நெல்லுனு பலதும் விளைஞ்சிருக்கறதைப் பார்க்க அவ்வளவு அழகா இருக்கும். ஊரின் எந்தப் பக்கம் போனாலும் எலுமிச்சை மணம் வீசும். எலுமிச்சை வித்தே கோடீஸ்வரன் ஆன பலபேரு எங்க ஊர்ல இருக்காங்க. ஆனா, இப்போ விவசாயப் பொருட்களுக்கு சரியான விலை இல்லை. அதுசரி, விவசாயிக்கே மதிப்பு இல்லையே!

”இது போராட்ட பூமி!”

அய்யனாருக்கும், செல்லியம்மனுக்கும் ஒவ்வொரு வருஷமும் சித்திரை மாசத்துல பதினைஞ்சு நாள் நடக்கிற தேர்த் திருவிழா, கோலாகலமா இருக்கும். எங்க ஊர்க்காரங்க எங்கே இருந்தாலும் கட்டாயம் வந்து கலந்துக்குவாங்க.

இந்த மண்ணுல பிறந்த எல்லாருக்கும் போராட்டக் குணம் உண்டு. குறிப்பா...  பெரம்பலூர் மாவட்டத்திலேயே எங்க ஊருலதான் சுதந்திரப் போராட்டத் தியாகிகள் அதிகம். கணபதி ரெட்டியார், நடேச மூப்பனார், காதர் பாட்ஷா, சிதம்பரம் ரெட்டியார், செங்கமலை மூப்பனார் உட்பட ஏழு பேர் இருந்தாங்க.

தி.மு.க-வைக் கட்டுப்படுத்த காங்கிரஸ் ஆட்சி 'வாய்ப்பூட்டுச் சட்டம்’ கொண்டு வந்தப்போ, அந்தச் சட்டத்தை எதிர்த்து நெடுஞ்செழியன் தலைமையில் போராடிய முதல் ஊர் எங்க ஊர்தான். இது தி.மு.க. வரலாறுல பதிவாகி இருக்கு.

போராட்டம்னு சொன்னா போதும்... எங்க ஊர்ப் பொம்பளைங்க வீட்டுக்கு ஒருத்தர்னு நிப்பாங்க. அந்த அளவுக்குத் தைரியமானவங்க. திருச்சி ஜில்லாவா இருந்தப்ப பெரம்பலூர்ல இருந்து திருச்சிக்கு ஒரே பஸ்தான் இருந்துச்சு. அப்ப பாடாலூருக்கு பஸ் விடச்சொல்லி போராட்டம் நடத்தினோம். போலீஸ்காரங்க, 'சுட்டுடுவோம். எல்லாரும் கலைஞ்சு போங்க’னு மிரட்டினப்ப, எதிர்ல நின்ன எங்க ஊர் செல்லம்மாள், 'என்னை முதல்ல சுடுங்க சார்’னு துப்பாக்கியைப் பிடிச்சாங்கன்னா எங்க ஊர் பொண்ணுங்களோட தைரியத்தைப் பார்த்துக்கங்க.

இன்னைக்கு வரைக்கும் 'விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கணும்... உழவர்களின் வாழ்வாதாரம் காக்கப்படணும்’னு பல்வேறு விஷயங்களுக்கும் நூதனமான பல போராட்டங்களை நடத்தி இருக்கோம். போராடி அலுத்துப்போன ஒரு சிலர், விவசாய நிலங்களை வித்துட்டு வேற தொழிலை பார்க்கப் போயிட்டாங்க. இருந்தாலும் எங்களை மாதிரி ஆளுங்க விடாப்பிடியா உழுபவனுக்காகப் போராடிக்கிட்டுதான் இருக்கோம். இந்தப் போராட்டங்களுக்கான உரம் எங்க மண் ணுல இருந்துதான் கிடைக்குது!''

”இது போராட்ட பூமி!”

- சி.ஆனந்தகுமார்
படங்கள்: எம்.ராமசாமி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு