Published:Updated:

ஒரு தாயின் சபதம்!

ஒரு தாயின் சபதம்!

செய்ய முடியாத காரியத்தைச் சொல்லும்போது, 'தண்ணி மேல எழுதி வை’ என்று சொல்வார்கள். அதே தண்ணீர் மீது சபதம் செய்து தன் சபதத்தை நிறைவேற்றியும் காட்டி இருக்கிறார் திருச்சியைச் சேர்ந்த ஒரு தாய்!

ஒரு தாயின் சபதம்!
##~##

சமீபத்தில் விருதுநகரில் மாநில அளவிலான நீச்சல் போட்டி நடந்தது. அதில் சிறுவர்களுக்கான நீச்சல் போட்டியில் திருச்சியைச் சேர்ந்த அண்ணன் ரெனால்ட் மற்றும் தம்பி எபி ரிச்சர்ட் இருவரும் வெவ்வேறு பிரிவுகளில் கலந்துகொண்டு முதல் இடத்தைத் தட்டி வந்தார்கள்.  திருநெல்வேலியில் நடந்த மாநில அளவிலான நீச்சல் போட்டியில் 25 மீட்டர் தூரத்தை 21 விநாடியில் கடந்து ரெக்கார்ட் பிரேக் செய்தார் எபி ரிச்சர்ட். இவர் படிப்பது ஒன்றாம் வகுப்பு, இவரது அண்ணன் ரெனால்ட் படிப்பது நான்காம் வகுப்பு!

இப்படிச் சின்ன வயதிலேயே நீச்சல் போட்டிகளில் கலக்கும் சகோதரர்களின் சாகசங்களுக்கு விதை போட்டது அவர்களுடைய தந்தையின் மரணமும் தாயின் சபதமும்தான் என்று சொன்னால் நம்ப முடிகிறதா..?

சாதனைச் சிறுவர்களின் தாய் மேரி, ''நான்  ஒரு பிசியோதெரபிஸ்ட். என் கணவர் விவேகானந்தன், மிலிட்டரியில் வேலை பார்த்தவர். 2006-ம் ஆண்டு லீவுக்குத் திருச்சி வந்த அவரோட விடுமுறையைக் கொண்டாட முக்கொம்புக்குப் போனோம். அந்தக் கொண்டாட்டமே அவரோட உயிருக்கு உலைவெச்சிருச்சு.

காவிரி ஆத்துல குளிக்கும்போது திடீர்னு சுழலில் சிக்கிட்டார். எங்க கண்ணு முன்னாடியே சுழல் அவரை விழுங்கிடுச்சு. அந்தச் சோகத்துல நான் மூழ்கி இருக்கும்போது, 'உன் வீட்டுக்காரர் மிலிட்டரியில்தானே வேலை பாத்தாரு. அவருக்கு நீச்சல் தெரியாதா?’னு நிறையப் பேர் கிண்டலாவே கேட்டாங்க. இந்த கேள்வி என்னை ரொம்பவே பாதிச்சது. என் ரெண்டு பசங்களையும் நீச்சல் வீரர்களா ஆக்கி தேசிய அளவுல சாதிக்கச் செய்யணும்னு அப்ப முடிவு செஞ்சேன். அதை நிறைவேத்தி காட்டுவேன்னு அந்த காவிரித் தாய் மேலயே சபதம் செஞ்சேன்.

ஒரு தாயின் சபதம்!

அவரு இறந்தப்ப மூத்தவனுக்கு மூணு வயசு. சின்னவன் கைக் குழந்தை. ரெனால்டை அஞ்சு வயசுலேயே நீச்சல் குளத்துல இறக்கிவிட்டுட்டேன். அடுத்த வருஷம் எபி ரிச்சர்டையும் களம் இறக்கினேன். ரெண்டு பேரும் காலை 5.30 மணிக்கு நீச்சல் பயிற்சிக்குப் போவாங்க. தினமும் ஆறு மணி நேரம் பயிற்சி எடுப்பாங்க. இப்போ ஒவ்வொரு போட்டியாக் கலந்துக்கிட்டு முதல் பரிசைத் தட்டிட்டு வரும்போது, எவ்ளோ பெருமையா இருக்குது தெரியுமா..? ஸ்டேட் லெவல் போட்டிகளில் கலந்துக்கிட்டு பரிசு வாங்குறவங்க,  அடுத்து நேஷனல் லெவல் போட்டிகளில் கலந்துக்கத் தயார் ஆகிட்டு வர்றாங்க. அவங்களைச் சர்வதேச நீச்சல் வீரர்களாக ஆக்கணும்ங்கறதுதான் என்னோட லட்சியம்''- சொல்லும்போதே அவருடைய விழியோரம் துளிர்க்கிறது கண்ணீர்.

கண்ணீருக்குக் காரணம் கணவனை இழந்த துயரமா... மகன்கள் சாதித்த மகிழ்ச்சியா..?

ஒரு தாயின் சபதம்!

- எம்.கார்த்தி
படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

அடுத்த கட்டுரைக்கு