Published:Updated:

பட்டாம்பூச்சிகளின் சங்கமம்!

கலர்ஃபுல் யுவா

பட்டாம்பூச்சிகளின் சங்கமம்!

கலர்ஃபுல் யுவா

Published:Updated:
##~##

ல்லூரி மாணவர்கள் நாலஞ்சு பேர் கூடினாலே அங்கே படபட பட்டாசு வெடிக்கும். எட்டுப் பட்டி ஊர்களின் 40 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கூடினால்? அணுகுண்டே வெடித்ததைப்போல் இருந்தது, திருச்சி இந்திரா காந்தி கல்லூரியில்!

 திருச்சி ஹலோ எஃப்.எம் நடத்திய 'யுவா 2012’ கல்லூரிகளின் கொண்டாட்டம்தான் கல்லூரி இளசுகளின் இந்த வார ஹாட்! இயல், இசை, நாடகம் என முத்தமிழையும் அவர்கள் ஸ்டைலில் மசாலாத் தடவி மேடையில் பரிமாறினர் மாணவர்கள். நடனம், நாட கம், குறும்படம், கவிதை எனத் திறமையை வெளிப் படுத்த ஒரு கூட்டம் கூடி இருந்தது என்றால், வேடிக்கை பார்க்கவும் பொழுதுபோக்குவதற்கும் சரி சமமாகக் கூட்டம் முண்டியடித்தது.

நாட்டுப்புற நடனத்தில், உயரத் தூக்கி யக் கையில் கத்தியுடன் நாக்கைத் துருத்தி, ஒரு பெண் ஆவேசமாக ஆட்டம் போட... 'விஜயகாந்த் தங்கச்சியா இருப்பாளோ?' என டைமிங் கமென்ட் பாஸ் செய்து, கலகலக்கவைத்தனர் மாணவர்கள். வரிசையாக வந்த குத்துப் பாடல்களால் உற்சாகம் அடைந்த மாணவர்கள், மேடையின் கீழேயே கும்பல் கும்பலாக டான்ஸ் போட, மேடையில் ஆடியவர் களின் ஆட்டத்துக்கு அது மேலும் உற்சாக டானிக் ஆனது!

பட்டாம்பூச்சிகளின் சங்கமம்!

ஆட்டம் பாட்டம் என, ஒரு பக்கம் மேடை அதிர...  குறும்படம், கோலம், கவிதை போட்டிகள் எல்லாம் இன்னொரு பக்கம் அமைதியாக நடந்துகொண்டு இருந்தன. மாணவிகள் போட்ட கோலத் தைப் பார்க்கக் கூட்டம் சேர்ந்ததோ இல்லையோ... கோலம் போட்ட மாணவி களைப் பார்க்கக் கூட்டம் நன்றாகவே சேர்ந்தது.

நாற்காலியில் ஏறி ஆட்டம் போட்ட மாணவர்களை லேடி ஆர்.ஜேக்கள், 'அமைதியாப் பாருங்களேன்...' என அன்பு கட்டளையிட, மாணவர்கள் 'கப் சிப்’ என அடங்கியது செம சூப்பர்! விழா வின் ஹைலைட்டே மாணவ, மாணவிகள் விதவிதமாக ஆடை அணிந்து, ஒய்யார நடைபோட்ட 'ஃபேஷன் பரேட்’தான். தூக்கிக் கட்டிய கொசுவம், புடவையில் இருந்து எலிசபெத் ராணி அணிந்த கவுன், தொப்பி வரை அலங்காரமாக 'கேட் வாக்’கினர் யுவதிகள். 'நாங்களும் நடப்போம்ல’ என்பதுபோல, வேட்டி-சட்டை முதல் வேர் போலத் தொங்கிய கிழிந்த (இது ஃபேஷன் பாஸ்!) ஆடை வரை உடுத்தி மேடையில் யுவன்கள் நடக்க... அதைப் பார்க்கத்தான் காத்திருந்ததுபோல மேடையைச் சுற்றி மொய்த்தனர் யுவதிகள்!

ஃபேஷன் பரேட், வெஸ்டர்ன், கிராமிய நடனம் என, சகல போட்டிகளுக்கும் மேக்- அப்போடு ரெடியாகி இருந்த மாணவர்கள், மேடையில் அரங்கேற்றியதைவிட ஆஃப் ஸ்டேஜில் நடத்திய பர்ஃபார்மன்ஸ்தான் 'ஷ்...ஷபா...’ எனப் பொங்கவைத்தது.

ஃபேஷன் பரேடில் லயித்துப் போன மாணவர் ஒருவர், ''வெள்ளை டிரெஸ்லதான் தேவதைகள் வருவாங்கன்னு பாத்தா... கலர் டிரெஸ்லகூட வருவாங்களா?'' என, லந்து கொடுக்க... ''இந்தக் கொசுவை முதல்ல அடிங்கடா'' என்று பல்லைக் கடித்தனர் ஆவேச மாணவர்கள் சிலர்.

ஆட்டம் பாட்டம் என்று இருந்தாலும், வெற்றிப் பட்டியலில் தங்கள் கல்லூரியின் பெயர் அறிவிக்கப்படும்போது மட்டும் எக்ஸ்ட்ரா லார்ஜ் உற்சாகத்தோடு கைதட்டி 'எப்பூடி?' என காலரைத் தூக்கிக் கல்லூரி விசுவாசத்தைக் காட்டத் தவறவில்லை மாணவர்கள்.

பரிசு பெற்றவர்கள் சந்தோஷமாகத் திரும்பினார்கள் என்றால், பரிசு பெறாதவர்கள் மிக மிக சந்தோஷத்தோடு திரும்பினர். காரணம்... 'புதுப் புது போட்டி. கலர்ஃபுல்லா கேர்ள்ஸ். செம்ம என்ஜாய்மென்ட். பாஸ் வேற என்ன வேணும்?' என்கின்றனர். சர்தான்!

பட்டாம்பூச்சிகளின் சங்கமம்!

- ஆ.அலெக்ஸ் பாண்டியன்
படங்கள்: என்.ஜி.மணிகண்டன், ஜெ.வேங்கடராஜ்