Published:Updated:

தகப்பன்சாமி!

தகப்பன்சாமி!

பாசம், பரிதவிப்பு என்றால் எல்லோருக்கும் தாய்மைதான் ஞாபகம் வரும். அப்பாக்களுக்கும் அந்தத் தாய்மையின் தவிப்பு உண்டு என்பதை உரக்கச் சொல்லும் தகப்பன்சாமிகளும் இங்கே இருக்கிறார்கள். திருச்சி பொன்மலைப்பட்டியைச் சேர்ந்த காணிக்கை இருதயராஜ் அதற்கு உதாரணம்.

தகப்பன்சாமி!

துள்ளி விளையாடும் தன்னுடைய செல்ல மகளை போலியோ தாக்குதல் மூன்று வயதில் முடக்கிப்போட, எல்லாம் விதி என அவரும் முடங்கிப்போய் இருக்கலாம். ஆனால், மூன்று வயது தொடங்கி இப்போது 23 வயதுவரை தன்னுடைய மகள் ஜெனிதா அண்டோவைச் சற்றும் வாஞ்சைக் குறையாது சுமந்து திரிகிறார். இரண்டு கால்களையும் ஒரு கையையும் போலியோ முடக்க, மீதம் இருக்கும் ஒரு கைக்கும் மூளைக்கும் தன்னம்பிக்கை ஊட்டி, செஸ் சர்வதேச சாம்பியன் பட்டியலுக்கு மகளை உயர்த்தி இருக்கிறார்.

தகப்பன்சாமி!

காணிக்கை இருதயராஜ் 65 வயதைக் கடந்தவர். அவர் உடலே அவருக்குப் பல்வேறு பிரச்னைகளை உருவாக்கும் வயதுதான். ஆனாலும் கிராண்ட் மாஸ்டர் கனவோடு போராடும் ஜெனிதாவுக்காகத் தன் ஆன்ம பலத்தை நம்பி இயங்குகிறார். 'சாதிக்க முடியாதவர்கள் போதிக்கிறார்கள்’ என்று ஒரு எக்குத்தப்பான சொலவடை உண்டு. ''நான் ஒரு பள்ளி ஆசிரியர். ஊர்ப் பிள்ளைகளுக்கு எல்லாம் உத்வேகத்தைப் போதிச்சுட்டு வீடு திரும்பினா... மூலையில் முடங்கிக்கிடக்கும் மகளைத் தேத்த முடியாம பல நாள் கதறி அழுது இருக்கேன். எதிர்காலத்தில் அவளுக்குத் தனிமை சுமையாகிவிடக் கூடாது என்றுதான் செஸ் விளையாட்டைக் கற்றுத் தர ஆரம்பித்தேன். என்னோட கல்லூரிப் பருவ செஸ் சாம்பியன் அனுபவம் அதுக்கு உதவிச்சு. நிதமும் கறுப்பு வெள்ளை கட்டங்களே கதியாக் கிடந்த ஜெனி, செஸ்ஸுல இருக்கும் அத்தனை நுணுக்கங்களையும் கத்துக்கிட்டா. அடுத்தடுத்து ஆறு தடவை மாவட்டப் போட்டிகள்ல அவள் ஜெயிக்கவும், எங்களுக்கு மகள் பற்றின பழைய கவலைகளும் பச்சாதாபமும் போய், அவளுக்குள்  பொதிந்து இருக்கும் திறமைக்கு அங்கீகாரம் தேடவேண்டிய புதிய பொறுப்பு சேர்ந்து இருக்கு' -நெகிழ்ச்சியாகச் சொல்லும் இருதயராஜ், கடந்த 15 ஆண்டுகளாக செஸ் போட்டிகள் நடைபெறும் பல நாடுகளுக்கும் மகளை வீல் சேரிலும் தோளிலுமாக மாறிமாறி சுமந்தபடி வலம் வருகிறார்.

இதுநாள் வரையிலான ஜெனிதாவின் வெற்றிகளையும் சாதனைகளையும் பார்த் தவர்கள், 'ஜெனிதாவை செஸ் பயிற்சியாளராக ஆக்குங்கள்’ என்று இருதய  ராஜிடம் கூறி உள்ளார்களாம். ஜெனிதா கோச் ஆனால், இருதயராஜ் உட்கார்ந்த இடத்திலேயே சம்பாதிக்கலாம். ஆனால், மகளின் திறமையும் கனவும் என்னாவது என்ற பரிதவிப்பில் தொடர்ந்து சுகமான சுமையாக மகளை ஏந்திக்கொண்டு அலைகிறார்.

'ஜெனிக்கு மூளைதான் பலமே ஒழிய உடலில் போதுமான பலம் கிடையாது. அதனால், எந்த ஊருக்கு, நாட்டுக்குப் போனாலும் அவளுக்கான சமையல் முதல் டாய்லெட் சுத்தம் செய்வது வரை நான்தான் கவனிச்சாகணும். போட்டிகளுக்காக வெளிநாடு போகணும்னா... ஒவ்வொரு முறையும் என்னோட பென்ஷன் புக் அடமானத்துக்குப் போயிடும். இந்த நிலையில் கூடுதலா அவ அம்மாவையும் அழைச்சுக்கிட்டுப் போக முடியாது. வுமன் கேன்டிடேட் மாஸ்டர் பட்டம் வரை சர்வதேச செஸ் சாம்பியன்ஷிப்பில் முன்னேறியாச்சு. கிராண்ட் மாஸ்டர் ஜெயிச்சுட்டானா உலகம் அவளைக் கொண்டாட ஆரம்பிச்சுடும். ஒரு தகப்பனா என்னோட கடமையும் முடிஞ்சுடும். அதுவரைக் கடவுள்தான் இந்த அப்பாவி அப்பனுக்கு ஆன்ம பலத்தை நீடிக்கவைக்கணும்!' பெருமிதத்தையும் மீறி அந்தத் தகப்பனின் கண்கள் பனிக்கின்றன.

தந்தையைத் தேற்றும் முயற்சியில் அவர் கண்ணீர் துடைக்கக் கரம் நீட்டுகிறார் ஜெனிதா!  

தகப்பன்சாமி!

- எஸ்.சுமன்

##~##
அடுத்த கட்டுரைக்கு