Published:Updated:

என் ஊர் !

குளம்..பஸ் ஸ்டாண்ட்...மீண்டும் குளம் !சி.சுரேஷ் படங்கள் கே.குணசீலன்

என் ஊர் !

குளம்..பஸ் ஸ்டாண்ட்...மீண்டும் குளம் !சி.சுரேஷ் படங்கள் கே.குணசீலன்

Published:Updated:

 ரெ.சண்முகம்

பட்டுக்கோட்டை

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''எனக்குத் திருமணம் ஆன சமயம்... திராவிடர் கழக விழாவுக்காக தந்தை பெரியார், நடிகவேள் எம்.ஆர்.ராதா, கவிஞர் கண்ணதாசன் மற்றும் ஈ.வி.கே.சம்பத் ஆகியோர் பட்டுக்கோட்டை வந்திருந்தனர். கண்ணதாசனும் எம்.ஆர்.ராதாவும் மதியம் 'மேற்படி’யுடன் சாப்பிட... நண்பர் ஒருவர் வீட்டுக்குச் சென்றனர். நான் பெரியாருக்கும் ஈ.வி.கே.சம்பத்துக்கும் அசைவ உணவு ஏற்பாடு செய்து இருந்தேன். தவசி தேவர் ஹோட்டலில் இருந்து சாப்பாடு கொண்டுவரப்பட்டது. பெரியார், என்னையும் அருகில் அமர்ந்து சாப்பிடச் சொன்னார். 'இன்னைக்குக் கார்த்திகை விரதம்’னு சொல்லவும் மறுப்பேதும் சொல்லாமல் சாப்பிட்டார்'' - பெரியார் பற்றிய நினைவுகளுடன் தான் பிறந்து வளர்ந்த ஊரான பட்டுக்கோட்டையைப் பற்றிச் சிலாகித்துப் பேச ஆரம்பித்தார் காந்தியத் தொண்டரான ரெ.சண்முகம்.

''பெருந்தலைவர் காமராஜருடன் பழக்கம் ஏற்பட்டதில் இருந்து தீவிர காங்கிரஸ்காரன் ஆனேன். என் வீட்டுக்கு வந்து கக்கன் சாப்பிட்டுச் சென்றதை மறக்கமுடியாது. பட்டுக்கோட்டை அரசியல் என்றால் தவிர்க்க முடியாதவர் நாடிமுத்து பிள்ளை. ஜவுளிக்கடைக்காரர் மகனாகப் பிறந்தவர் தமிழக அரசியலில் மிக முக்கிய இடம் பிடித்தார். மூன்று முறை பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ-வாகவும் ஒரு முறை எம்.எல்.சி-யாகவும் பணியாற்றினார். கலெக்டருக்கு நிகரான அன்றைய தஞ்சாவூர் ஜில்லா போர்டு தலைவராக, 20 ஆண்டுகள் தொடர்ந்து நீடித்தார். அவருடைய மறைவுக்குப் பிறகே அந்தப் பதவி வேறு ஒருவருக்குச் சென்றது.

என் ஊர் !

நாடியம்மன் கோயில் திருவிழாவுக்குப் பட்டுக்கோட்டை நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கும். பங்குனி மாதம் முதல் 17 நாட்களும் விழா நடக்கும். முதல் மண்டகப்படி, ராஜ வம்சத்துக்கு ஒதுக்கப்பட்டது. அன்று செருப்புத் தைப்பவர்கள், சிறப்பாக வாணவேடிக்கை நடத்துவார்கள். டி.என்.ராஜரத்தினம், குளக்கரை பிச்சையா உள்ளிட்ட பிரபல வித்வான்களின் நாகஸ்வர, மேளக் கச்சேரிகள் நடக்கும். கே.பி.சுந்தராம்பாள், சீர்காழி கோவிந்தராஜன், டி.கே.பட்டம்மாள் என நட்சத்திரங்களின் பாட்டுக் கச்சேரிகளும் களைகட்டும். தேர் ஓட்டமும்  விசேஷமானது. சுற்று வட்டாரமே திரண்டுவந்து நிற்கும்.

எங்கள் ஊரில் நாவிதர் குடும்பங்கள்தான் வைத்தியம் செய்வார்கள். வைத்தியர் மாரி கையில் ஒரு பையுடன் வலம்வருவார். அதில் மூலிகைகளும் கத்திகளும் இருக்கும். பட்டுக்கோட்டையில் பிரபலமான நாட்டு மருந்துக்கடை, மாணிக்கம் முதலியார் கடை. 15 மைல் தொலைவுக்கு வேறு கடைகளே கிடையாது. எப்படி இவ்வளவு மூலிகைகள் சேகரிப்பார்கள் என்பதே தெரியாது. இன்றும் நான்காவது தலைமுறையாகக் கடை நடத்திவருகிறார்கள்.

என் ஊர் !

பட்டுக்கோட்டையைச் சுற்றி அப்போது சப்பாத்தி முள் காடுகள் அதிகமாக இருந்தன. இப்போது அவை எல்லாம் கட்டடங்களாக மாறி இருக்கின்றன. இப்போது பரபரப்பாக இருக்கும் பட்டுக்கோட்டை பஸ் ஸ்டாண்ட் முன்னாடி பெரிய குளமாக இருந்த பகுதி. அதனால்தான் இப்போது சின்ன மழை பெய்தாலும் பஸ் ஸ்டாண்ட் மீண்டும் குளமாகிவிடுகிறது.

நகரின் முக்கிய நீர்நிலை காசாங்குளம். தாமரைப் பூக்கள், நாணல் என எதுவுமே இருக்காது. குடிநீருக்கும் இந்தக் குளம் பெரிதும் பயன்பட்டது. குளத்தின் கரையில்  திருவாடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான தம்பிரான் மடம் இருந்தது. இங்கே பேட்மிட்டன், வாலிபால் போட்டிகள் நடக்கும். விளையாட்டு மைதானமாக இருந்த இடத்தில், தற்போது நகராட்சி அலுவலகம் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது.

என் ஊர் !

இன்று பரபரப்பாக இயங்கும் பெரிய கடைத் தெருப் பகுதி, அக்ரஹாரமாக இருந்த தெரு என்றால் நம்புவதற்குக் கடினமாக இருக்கும். நீண்ட தெருவில் 60-துக்கும் மேற்பட்ட அக்ரஹார குடும்பங்கள் இருந்தன. இன்றோ ஒரே ஒரு குடும்பம் மட்டும் உள்ளது. இதுபோல, குறுகிய காலத்தில் பெரும் மாற்றத்தைச் சந்தித்து உள்ளது பட்டுக்கோட்டை!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism