Published:Updated:

சிலம்பாட்டத்தில் சிங்கம்... யோகாவில் ஆஹா !

சிலம்பாட்டத்தில் சிங்கம்... யோகாவில் ஆஹா !

சிலம்பாட்டத்தில் சிங்கம்... யோகாவில் ஆஹா !

சிலம்பாட்டத்தில் சிங்கம்... யோகாவில் ஆஹா !

Published:Updated:
சிலம்பாட்டத்தில் சிங்கம்... யோகாவில் ஆஹா !
##~##

தஞ்சாவூர் மானோஜிபட்டியைச் சேர்ந்த தரங்கிணி பார்ப்பதற்கு சின்னப் பெண்ணாக இருந்தாலும், கம்பை எடுத்து சுற்ற ஆரம்பித்தால் காற்றாய்...புயலாய் மாறுகிறார். சிலம்பம் மட்டுமல்ல; யோகா, ஓவியம், நடனம் எனப் பல கலைகளில் வித்தகியாகப் பட்டையைக் கிளப்புகிறார். தஞ்சை திருமகள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்புப் படித்துவரும் இவர், யுவகேந்திரா சார்பில் 'யுவஸ்ரீ கலாபாரதி’ விருதும் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற யோகா மேளாவில் சாம்பியன் விருதும் பெற்றுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தரங்கிணியின் தந்தை குருசாமி, தஞ்சை மக்களுக்கு ஏற்கெனவே அறிமுகமானவர்தான். சுற்றி உள்ள ஊர்களில் நடக்கும் ஆர்கெஸ்ட்ராக்களிலும் தேர்தல் சமயங்களிலும் எம்.ஜி.ஆர். வேடத்தில் கலக்குவார். இவருக்கு செல்லப் பெயரே 'மானோஜிபட்டி எம்.ஜி.ஆர்’.

''இது ஆறாவது படிக்கும்போது வந்த ஆர்வம். சிலம்பம், யோகா ரெண்டையும் நடனத்தோடு கலந்து பண்றதுனா எனக்கு ரொம்பப் பிடிக்கும். கண்ணைக் கட்டிக்கிட்டு கம்பு சுத்துவேன். கால், கண் ரெண்டையும் கட்டிட்டு, விடாம எட்டு நிமிஷம் வரைக்கும் சுத்துவேன். அப்பா மேடை ஏறும்போது நானும் இது எல்லாம் பண்றதால ஸ்கூல்ல மட்டும் இல்லாம தஞ்சாவூர் முழுக்கவே பிரபலமாக்கும்...' என்கிற தரங்கிணிக்கு, எதிர்காலத்தில் கிரண்பேடி போன்று பெரிய ஐ.பி.எஸ். அதிகாரி ஆவதுதான் லட்சியமாம்!

- க.ராஜீவ்காந்தி, படங்கள்: கே.குணசீலன்

நித்யாவுக்கு நிகரில்லை !

சிலம்பாட்டத்தில் சிங்கம்... யோகாவில் ஆஹா !

திருச்சியில் உள்ள பெண்கள் கல்லூரி மாணவிகளிடம் நித்யா என்ற பெயர் ரொம்பவே பிரபலம். கல்லூரி மாணவிகளுக்கு ரங்கோலி, கொலாஜ், மெஹந்தி, சிகை அலங்காரம், மணல் மற்றும் களிமண் சிற்பம், துணி, காகிதம், கண்ணாடி ஓவியங்கள், கார்ட்டூன் உள்ளிட்ட பல்வேறு நுண்கலைகளைப் பயிற்றுவித்து வருபவர்தான் இந்த நித்யா.

படிக்கும் காலத்தில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக அளவிலான பல்வேறு போட்டிகளில் வெற்றிக் கோப்பைகளை அள்ளியவர். கல்லூரி மாணவியாக இருந்த மூன்று ஆண்டுகளில் 247 பரிசுகளை அள்ளிக் குவித்திருக்கிறார். படித்து முடித்தபிறகு ஊடகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் நடத்தும் போட்டிகளில் தன்னுடைய கவனத்தைத் திருப்பி பரிசுகளைத் தட்டிவருகிறார்.  

ஓவியம் வரைவதில் அதீத ஆர்வம் உள்ள நித்யா ரிம்ஜிம், மீனாகாரி, தஞ்சாவூர் பாணி எனப் பல்வேறு விதமான ஓவியங்களை வரைந்து அடுக்கிவைத்து இருக்கிறார். நெருங்கிய நண்பர்களுக்கு எதிர்பாராத  நாட்களில் இந்த ஓவியங்களைப் பரிசாக வழங்கி ஆச்சர்யப்படுத்துவது இவருடைய ஸ்பெஷல். உறவினர் வீட்டு விசேஷங்களின்போது குக்கர், மிக்ஸி, கிரைண்டர், ஃபேன், மின்சார அடுப்பு என்று காஸ்ட்லியான பொருள்களை அன்பளிப்பாக வழங்குவது நித்யாவின் பழக்கம். இதைவைத்து நித்யா மேல்தட்டு மனிதர் என எடை போட்டுவிடாதீர்கள். இந்தப் பொருள்கள் எல்லாம் நித்யா பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பரிசாகப் பெற்றவை. அவற்றை அடுக்கிவைக்க இடம் இல்லாததால், அன்பளிப்பாக வழங்கிவருகிறார்!

- அ.சாதிக் பாட்ஷா படம்: என்.ஜி.மணிகண்டன்

புதுக்கோட்டை பி.டி.உஷா !

சிலம்பாட்டத்தில் சிங்கம்... யோகாவில் ஆஹா !

''அப்ப என் பொண்ணு சூர்யா மூணாவது படிச்சுக்கிட்டு இருந்தா. பெரம்பலூர்ல பள்ளிக் குழந்தைகளுக்கான மராத்தான் போட்டி நடந்தது. அதுல கலந்துக்கிட்டு மூன்று கி.மீ. ஓடி, முதல் இடம் பிடிச்சா. பரிசு கொடுக்க மேடைக்குக் கூப்பிட்டப்ப, 'எனக்கு பரிசு வேணாம். சான்றிதழ் மட்டும் போதும்’னு சொன்னா பாருங்க... ஒரு அப்பாவா அதை நினைச்சு இன்னைக்கும் பெருமைப்படுறேன்'' -கண்ணீர் மல்கச் சொல்கிறார் இளம் தடகள வீராங்கனை சூர்யாவின் தந்தை லோகநாதன்.

புதுக்கோட்டையைச் சேர்ந்த சூர்யாவுக்கு தற்போது வயது 20. இதுவரை மாநில, தேசிய, உலக அளவில் அவர் குவித்துள்ள பதக்கங்களின் எண்ணிக்கை 200-க்கும் மேல். தற்போது இந்திய ரயில்வேயில் பணிபுரிகிறார். இந்திய விளையாட்டுக் கழகத்தின் மூலமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பெங்களூருவில் நடைபெறும் பயிற்சியில் கலந்துகொண்டு இருக்கிறார்.

''நான் சின்னக் குழந்தையா இருக்கும்போதே எங்க அப்பாகூட கிரவுண்டுக்குப் போகணும்னு அழுவேனாம். அப்ப இருந்து நான் ஓட ஆரம்பிச்சுட்டேன். அப்பாவே எனக்கு கோச்சா கிடைச்சது ரொம்ப ஈஸியா இருந்துச்சு. என்னோட தவறுகளைச் சுட்டிக்காட்டி திருத்தினாரு. அதனாலதான் என்னால இவ்வளவு சாதிக்க முடிஞ்சுது. ஒலிம்பிக்ல ஜெயிக்கணும் என்பதுதான் என்னோட கனவு. அதுக்கு இன்னும் நிறைய பயிற்சி எடுக்கணும்; என்னோட வேகத்தைக் கூட்டணும். அதுக்காகத்தான் ராத்திரி பகலா உழைச்சுக்கிட்டு இருக்கேன்'' நம்பிக்கை பொங்கச் சொல்கிறார் சூர்யா.

- பெ.தேவராஜ் படங்கள்: செ.சிவபாலன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism