Published:Updated:

இது ரத்த பூமி!

அதிரடி அரும்பாவூர் திருவிழா

##~##

''அரும்பாவூர் அங்காள பரமேஸ்வரி குடல் உருவி திருவிழா பார்த்து இருக்கீங்களா?''- வாய்ஸ் ஸ்நாப்பில் இப்படி ஒரு ரத்தக்களறி அழைப்பு.

 மைக் செட் அலப்பறை, கலர் கலரான தோரணங்கள், விதவிதமான கட்-அவுட்கள் என, வழக்கமான ஆரவாரங்களுடன் களைகட்டி இருந்தது பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரும்பாவூர். மாசி மாதத்தையே ஜொலிக்க வைக்கிறது இந்தத் திருவிழா. பால் குடம் சுமத்தல், அலகு குத்துதல் என்று முதல் இரண்டு நாட்கள் சாந்தமாக நடந்துகொண்டு இருந்த திருவிழாவில், மூன்றாவது நாள்தான் குடல் உருவித் திருவிழா.

மேளதாளத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் எதிர்பார்த்து நின்றுகொண்டு இருக்க, அம்மன் வேடம் அணிந்த பூசாரி ஒருவர் மயானத்தில் இருந்து அருளாடியபடி வருகிறார். அவருடைய கையில் இளம் ஆடு ஒன்று துள்ளிக்கொண்டு இருக்கிறது.  ஆட்டின் கழுத்தைக் கடித்து ரத்தம் குடித்துக் கொப்பளித்தபடியே, ஆட்டின் குடலை உருவி கழுத்தில் மாலையாகப் போட்டுக்கொண்டு நடக்கிறார். அவர் அணிந்து இருக்கும் குடல் மாலையில், பெண்கள் பாலூற்றி காணிக் கைச் செலுத்துகிறார்கள். மஞ்சள் உடை அணிந்த இளைஞர் கூட்டம், பூசாரியைப் பின்தொடர்ந்து வருகிறது. அவர்களுடைய கைகளில் ஆடுகள் மற்றும் கோழிகள். அவர்களும் ஆடு, கோழிகளைக் கடித்துக் குதறி, ரத்தத்தைக் கொப்பளித்தபடியே வருகிறார்கள். மயானத்தில் இருந்து கோயில் பக்கம் கூட்டம் செல்கிறது.

இது ரத்த பூமி!

அதனை அடுத்து, 'அம்மன் சூறையாடும் நிகழ்ச்சி ஆரம்பம் ஆகிறது’ என்று அறிவிப்புவருகிறது. ஆட்டு ரத்தம், அவித்த மொச்சை, சோறு கலந்த கலவையை அம்மன் வேடம் அணிந்த பூசாரி அள்ளி வீச... சேலை முந்தானை, வேட்டியில் அதனைப் பிடித்துச் சாப்பிடு கிறார்கள் பக்தர்கள். இப்படி சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்குக் குழந்தை பிறக்கும் என்பது ஒரு நம்பிக்கை.

திருவிழாவின் அடுத்த நாள் பெண்களுக்குப் பேய் ஓட்டும் நிகழ்வு. அம்மன் சிலைக்கு அருகில் பூசாரி அமர்ந்து இருக்க... வெளியில் கூட்டத்தில் உள்ள பெண்கள் சாமிவந்து ஆடுகிறார்கள். அவர் களை அழைத்து பக்கத்தில் அமரவைத்து, பூப் போட்டுப் பார்க்கிறார் பூசாரி. அம்மன் வாக்குக் கொடுத்தவர்களை எருக்கங் குச்சியால் அடிக்கிறார். அடி வாங்கியவருக்கு வலித்தால், பேய் பறந்து போனதாக அர்த்தமாம். வலிக்காத பெண்களுக்கு, இன்னும் கொஞ்சம் அதிகமாக அடித்துப் பேயை விரட்டுவார்களாம்.  

இது ரத்த பூமி!

திருவிழா முடிந்து வரும்போதும் 'திக் திக்’ குறையவில்லை!

- சி.ஆனந்தகுமார் , படங்கள்: எம்.ராமசாமி

அடுத்த கட்டுரைக்கு