Published:Updated:

ஓரம் போ... ஓரம் போ... கூண்டு வண்டி வருது!

ஓரம் போ... ஓரம் போ... கூண்டு வண்டி வருது!

##~##

ரூரின் மூலை முடுக்கு எல்லாம் ஒரு காலத்தில் கலக்கிக்கொண்டு இருந்த குதிரை வண்டிகள், தற்போது காணக்கிடைக்காத அபூர்வப் பொருளாக மாறிவிட்டது. கரூர் பேருந்து நிலையத்துக்கு முன்பு இருந்த, ஓரிரு குதிரை வண்டிக்காரர்களைச் சந்தித்துப் பேசியபோது, கடந்த காலத்துக்கு வண்டி ஓட ஆரம்பித்தது.

 '' 'ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்’ பாட்டுல எம்.ஜி.ஆர். டூயட் பாடிக்கிட்டே குதிரை வண்டியை ஸ்டைலா ஓட்டுவாரு பாருங்க... அதில் மயங்கி, 15 வயசுல குதிரை வண்டி ஓட்ட வந்தேன். இப்ப வரைக்கும் குதிரை வண்டிதான் நம்ம பொழைப்பே!''- உற்சாகமாகப் பேசத் தொடங்குகிறார் மனோகரன்.

ஓரம் போ... ஓரம் போ... கூண்டு வண்டி வருது!

''சுதந்திரம் வாங்குறதுக்கு முன்னாடி வரைக்கும் பஸ்ஸெல்லாம் குறைச்சல், குதிரை வண்டிங்கதான் அதிகம் இருந்துச்சு. அப்ப இங்கே 300 குதிரை வண்டிகளும் 200 மாட்டு வண்டிகளும் இருந்துச்சு. இப்ப வெறும் மூணு குதிரை வண்டிங்க மட்டும்தான் இருக்கு. மாட்டு வண்டிங்க சுத்தமாக் காணாமப் போயிடுச்சு.

இங்க இருந்து திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூருனு பல ஊர்களுக்குக் குதிரையிலதான் போவாங்க. அப்ப எல்லாம் பஸ் இருந்தாலும் கரூரில் இருந்த அண்ணன்மார்கள் எல்லாம் ரெண்டு மூணு குதிரை வண்டியைக் கட்டிட்டு, குடும்பத்தோட போய் தங்களோட தங்கச்சிகளுக்குக் கல்யாண சீர் கொடுத்துட்டு வருவாங்க. அதே மாதிரி புது மாப்பிள்ளைப் பொண்ணை குதிரை வண்டியில்தான் கூட்டிட்டு வரச் சொல்வாங்க. அந்த நேரத்துல வேணும்னே குதிரைகளை எம்பச் செய்வோம். அப்ப புதுப் பொண்ணு பயந்துக்கிட்டு மாப்பிள்ளைக் கையை இறுக்கமாப் புடிச்சுக்கும். அப்ப ரெண்டு பேருக்கும் வர்ற சந்தோஷம் இருக்கே... அதைச் சொல்ல வார்த்தையே இல்லை. ஒரு சில குறும்புக்கார மாப்பிள்ளைங்க எங்ககிட்ட தனியா வந்து, பணம் கொடுத்து குதிரை ஓடும்போது அடிக்கடி எம்பிவிடச் சொல்வாங்க. நாங்களும் அடிக்கடி அப் படிச் செய்வோம். அதுலதான் கல்யாணக் கொண்டாட்டமே இருந்துச்சு. இந்த மாதிரி பல சந்தோஷங்களை இப்ப உள்ள தலை முறை இழந்துடுச்சு.

ஓரம் போ... ஓரம் போ... கூண்டு வண்டி வருது!

அப்ப குதிரை வண்டியைக் கூண்டு வண்டினுதான் சொல்வாங்க. எங்க அப்பா காலத்துல சுதந்திரப் போராட்டம் நடந்துக் கிட்டு இருந்துச்சு. குதிரை வண்டி கட்டிக்கிட்டு கூட்டம் கூட்டமாத் திருப்பூருக்குப் போய் போராட்டம் நடத்திட்டு வந்தாங்க. அப்ப இங்க இருந்த நிறைய குதிரை வண்டிக் காரங்க சுதந்திரப் போராட்டத்துக்கு ஆட் களைக் கூட்டிட்டுப் போறதுக்குப் பணமே வாங்க மாட்டாங்க.

ஓரம் போ... ஓரம் போ... கூண்டு வண்டி வருது!

சுதந்திரம் அடைஞ்சப்ப நூத்துக்கும் மேற்பட்ட குதிரை வண்டிகள்ல தேசியக் கொடியைக் கட்டிக்கிட்டு, 'சுதந்திரம் வாங் கிட்டோம்’னு கரூர் முழுக்க நகர் வலம் வந்து அறிவிச்சது நாங்கதான்!''- பெரு மிதமாகச் சொல்கிறார்.  

இன்னொரு குதிரை வண்டிக்காரர் கிருஷ்ணமூர்த்தி, ' ' இப்ப முன்னேபோல வண்டி ஓடுறது இல்லை சார். காலையில 4 மணிக்கு பஸ் ஸ்டாண்ட் முன்னாடி கரெக்டா ஆஜர் ஆகிடுவோம். வெளியூர்ல இருந்து சின்னப் பசங்களோட வந்தாங்கனா நம்மளைக் கூப்பிடுவாங்க. கரூர் முழுக்கச் சுற்றிக் காட் டிட்டு வருவோம். ஆனா, அதுவும்காலை யில 8 மணிக்கு ஓட்ட முடியாது. ரொம்ப டிராஃபிக்கா இருக்கும். சாயங் காலமும் ஓட்ட முடியாது. இங்க இருந்து அஞ்சு கி.மீ-க்கு 40 ரூபாய் இல்லேன்னா 50 ரூபாய் தான் வாங்குவோம். ஆட்டோவுல இதைவிடரெண்டு மடங்கு கட்டணம் அதிகம்.

ஒருநாளைக்குக் குதிரைக்கு மட்டும் 60 ரூபாய் செலவாகுது. ஒரு சில நாள்வண்டி ஓடவே ஓடாது. ரொம்பக் கஷ்டமா இருக்கும். ஆனா இத்தனை வருஷங்கள்ல குதிரையை ஒருநாளும் பட்டினிப் போட்டது கிடையாது. இந்தத் தொழிலை நம்பி

ஓரம் போ... ஓரம் போ... கூண்டு வண்டி வருது!

த்தான் எங்க குடும்பம் இன்னும் ஓடிக்கிட்டு இருக்கு. இதைத் தவிர வேற எந்தத் தொழிலும் தெரியாது. இந்தக் குதிரைகளும் எங்களை விட்டா எங்கே போகும், சொல்லுங்க!

தமிழ்நாட்டுல இங்கேயும் பழநியிலேயும் மட்டும்தான் குதிரை வண்டிகள் ஓடுது. கரூர்ல இப்ப  நாங்க மூணு பேருதான் ஓட்டு றோம். எங்களுக்கு அப்புறம் இந்தக் குதிரை சவாரி இல்ல. நாங்கதான் கடைசி தலைமுறை!''- சொல்லும்போதே குரலில் வருத்தம் இழையோடுகிறது.

- நா.சிபிச்சக்கரவர்த்தி, படங்கள்: ர.அருண் பாண்டியன்

அடுத்த கட்டுரைக்கு